கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கு அழுத்தம்! தொகுதி மறுவரையறையில் திமுக நிலைப்பாடு என்ன? கனிமொழி பேட்டி!
கள்ளக்குறித்து எம்.எல்.ஏ. விவகாரம், தொகுதி மறுவரையறை மசோதா குறித்து கனிமொழி பேட்டி...
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு அமைச்சர்கள் அழுத்தம் கொடுப்பதாக திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.
தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம் துறைகளுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு சென்னை திரும்பிய கனிமொழி, விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
Advertisement
Advertisement
அப்போது, தொகுதி மறுவரையறை மசோதாவை மத்திய அரசு மீண்டும் தாக்கல் செய்யும் பட்சத்தில் திமுக ஆதரிக்குமா? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கனிமொழி, “கடந்த முறை தாக்கல் செய்தபோதே நியாயமான தொகுதி மறுவரையறை வேண்டும் என்று திமுக தெளிவாக கூறியது. இந்த நிலையில், மீண்டும் தாக்கலாகும் மசோதாவில் என்ன திருத்தங்கள் செய்யப்படுகிறது என்பது தெரியாமல், திமுகவின் நிலைப்பாட்டை கூற முடியாது” என்றார்.
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் விவகாரத்தில் தமிழக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் கடிதம் எழுதியிருப்பது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த கனிமொழி, “தமிழகத்தின் அனைத்து அரசியல் தலைவர்கள் இதைப் பற்றி பேசியுள்ளனர். அதுமட்டுமல்லாமல், அந்த ஆட்சியருக்கே அழைத்து மன்னிப்பு கேட்டுக் கொண்ட அமைச்சர்களே, சமூக ஊடகங்களில் வந்த செய்தியை வைத்து பேச முடியாது என்கிறார்கள். இதுதொடர்பாக வெளியில் பேச வேண்டாம் என்று ஆட்சியருக்கு அழுத்தம் கொடுக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. தேசிய மகளிர் ஆணையம் இதைக் கையில் எடுத்துள்ளது. மற்ற பெண்களைப் பாதுகாக்கக்கூடிய ஒரு பெண்ணுக்கே இந்த நிலைமை. யாரும் பதிலளிக்காத கேள்வியாக உலாவி கொண்டிருக்கும் சூழலில், தேசிய மகளிர் ஆணையத்துக்கு அரசு என்ன பதிலளிக்கப் போகிறது என்று பார்ப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது குறித்த கேள்விக்கு, “தவெகவை எதிர்த்து கேள்வி எழுப்பக் கூடிய தலைவர்களை லஞ்ச ஒழிப்புத்துறையை வைத்து அச்சுறுத்தி வருகிறார்கள். நிச்சயமாக இதையெல்லாம் பார்த்து திமுக எந்த நிலையிலும் பின்வாங்காது” என்று கனிமொழி பதிலளித்தார்.