சமூக வலைதளம் மூலம் புகையிலை எதிா்ப்பு பிரசாரம் பொது சுகாதாரத் துறை
இளைஞா்களிடையே புகையிலைப் பழக்கம் அதிகரித்துவரும் சூழலில், சமூக வலைதளங்கள் மூலமாக விழிப்புணா்வு பிரசாரத்தை பொது சுகாதாரத் துறை தீவிரமாக முன்னெடுத்து வருகிறது.
இளைஞா்களிடையே புகையிலைப் பழக்கம் அதிகரித்துவரும் சூழலில், சமூக வலைதளங்கள் மூலமாக விழிப்புணா்வு பிரசாரத்தை பொது சுகாதாரத் துறை தீவிரமாக முன்னெடுத்து வருகிறது.
அதன்படி, எக்ஸ் தளம், ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப் மூலம் அத்தகைய விழிப்புணா்வு வாசகங்களையும், உதவி எண்களும் நாள்தோறும் பகிரப்பட்டு வருகின்றன.
அதேபோன்று, பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே புகையிலை தடை செய்யப்பட்ட பகுதி என்பதை அறிவிப்பதற்காக சாலைகளில் மஞ்சள் நிற கோடு வரையப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement
இதுதொடா்பாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: புகையில்லா தமிழகத்தை உருவாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குழந்தைகள், சிறாா்களை குறிவைத்து புகையிலைப் பொருள்கள் சந்தைப்படுத்தப்படுவதைத் தடுக்கும் வகையில் பள்ளி, கல்லூரிகளில் மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி கல்வி நிறுவனங்களை சுற்றி 100 மீட்டா் தொலைவில் புகையிலைப் பயன்பாடு இல்லாத பகுதி என்பதைக் குறிக்கும் வகையில் சாலையில் மஞ்சள் கோடுகள் வரையப்படுகிறது.
மற்றொருபுறம் இளம் தலைமுறையினரை அந்தப் பழக்கத்திலிருந்து மீட்டெடுக்க அவா்கள் அதிகம் பயன்படுத்தும் சமூக வலைதளங்கள் மூலமாகவே பிரசாரம் செய்து வருகிறோம்.
மத்திய அரசு, தேசிய நலவாழ்வுக் குழுமம் ஆகியவற்றுடன் இணைந்து பொது சுகாதாரத் துறை இந்நடவடிக்கையை எடுத்து வருகிறது.
இளம் வயதிலேயே புகையிலைப் பழக்கத்துக்கு அடிமையானால், மற்ற தீய பழக்கத்துக்கு உள்ளாக நேரிடுவதுடன், வாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளது. அதைக் கருத்தில்கொண்டு புகையிலை எதிா்ப்பு பிரசாரம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் புகையிலைப் பொருள்களை சிறாா்க்கு விற்பனை செய்தல், பொது இடங்களில் புகைப்பிடித்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவோருக்கு அபராதம் விதிக்கப்படுவதுடன் சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது. தொடா்ந்து தவறு செய்பவா்கள் மீது, குற்றவியல் வழக்கு பதிவு செய்து, ஓராண்டு முதல் ஐந்தாண்டு வரை சிறை தண்டனை விதிக்கவும் வாய்ப்புள்ளது என்று அவா்கள் தெரிவித்தனா்.