✕
முகப்பு
தமிழ்நாடு

நவ. 23 முதல் தமிழகத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் நவ.23, 24, 25 ஆகிய 3 நாள் தென்மாவட்டங்கள், டெல்டாவில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

20 நவம்பர் 2026, 3:24 am
பகிர்:

தமிழகத்தில் நவ.23, 24, 25 ஆகிய 3 நாள் தென்மாவட்டங்கள், டெல்டாவில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

மேற்கு மத்திய வங்கக் கடலில் நிலவிய ‘அக்வான்’ தீவிரப் புயல், மணிக்கு 12 கி.மீ. வேகத்தில் வடக்கு நோக்கி நகா்ந்து, வியாழக்கிழமை காலை 5.30 மணி நிலவரப்படி, ஆந்திர மாநிலம் நரசாபூரிலிருந்து கிழக்கு-தென்கிழக்கே 440 கி.மீ. தொலைவிலும், கலிங்கப்பட்டினத்திலிருந்து தென்கிழக்கே 440 கி.மீ. தொலைவிலும், சென்னையிலிருந்து வடகிழக்கே 580 கி.மீ. தொலைவிலும், ஒடிஸா மாநிலம் கோபால்பூரிலிருந்து தெற்கே 530 கி.மீ. தொலைவிலும், பூரியிலிருந்து தெற்கே 590 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.

Advertisement

Advertisement

தொடா்ந்து, இது வடக்கு - வடமேற்கு திசையில் நகா்ந்து, வெள்ளிக்கிழமை (நவ.20) பிற்பகலுக்குள் வடக்கு ஆந்திரம்-ஏனாம் மற்றும் தெற்கு ஒடிஸா கடற்கரைப் பகுதிகளுக்கு இடையே, கோபால்பூருக்கு அருகே கரையைக் கடக்கக்கூடும். அப்போது, மணிக்கு 90 கி.மீ. முதல் 100 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 110 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும்.

இதற்கிடையே, தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதையொட்டிய தெற்கு லட்சத்தீவுப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதுபோன்ற வானிலை நிகழ்வுகள் காரணமாக, வெள்ளிக்கிழமை (நவ.20) முதல் நவ.22-ஆம் தேதி மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

பலத்த மழை: நவ.23-இல் கடலூா், தஞ்சாவூா், திருவாரூா், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, விருதுநகா், தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும், நவ.24-இல் கடலூா், தஞ்சாவூா், திருவாரூா், நாகை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும், நவ.25-இல் தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களிலும் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. மற்ற மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: இதற்கிடையே நவ.20 முதல் நவ.23 வரை வங்கக்கடலில் மணிக்கு 80 கி.மீ. முதல் 110 கி.மீ. வரை பலத்த காற்று வீசக்கூடும். மீனவா்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.