திருவண்ணாமலை தீபத் திருவிழா! விழுப்புரத்திலிருந்து சிறப்பு ரயில்கள் இயக்கம்!
திருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்காக பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கம் பற்றி..
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, விழுப்புரத்திலிருந்து சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.
இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் என். ஜெயந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு,
திருவண்ணாமலை அருணாசலேசுவரர் திருக்கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா நவம்பர் 24-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இத்திருவிழாவில் பங்கேற்கும் பக்தர்களின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையிலும் தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்குகிறது.
Advertisement
Advertisement
திருவண்ணாமலை - விழுப்புரம் சிறப்பு ரயில்
திருவண்ணாமலை ரயில் நிலையத்திலிருந்து நவம்பர் 23, 24, 25 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3 மணிக்குப் புறப்படும் திருவண்ணாமலை - விழுப்புரம் சிறப்பு ரயில் (வண்டி எண் 06095), அதே நாள்களில் மாலை 4.20 மணிக்கு விழுப்புரம் வந்தடையும். எதிர்வழித் தடத்தில் விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து நவம்பர் 23, 24, 25 ஆகிய தேதிகளில் மாலை 4.35 மணிக்குப் புறப்படும் விழுப்புரம் - திருவண்ணாமலை சிறப்பு ரயில் (வண்டி எண் 06096), அதே நாள்களில் மாலை 6 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும்.
திருவண்ணாமலை ரயில் நிலையத்திலிருந்து நவம்பர் 23, 24, 25 ஆகிய தேதிகளில் மாலை 6.20 மணிக்குப் புறப்படும் திருவண்ணாமலை - விழுப்புரம் சிறப்பு ரயில் (வண்டி எண் 06097), அதே நாள்களில் இரவு 7.40 மணிக்கு விழுப்புரம் வந்து சேரும். எதிர் வழித்தடத்தில் விழுப்புரத்திலிருந்து நவம்பர் 23, 24, 25 ஆகிய தேதிகளில் இரவு 8 மணிக்குப் புறப்படும் விழுப்புரம்-திருவண்ணாமலை சிறப்பு ரயில் (வண்டி எண் 06098), அதே நாள்களில் இரவு 9.30 மணிக்கு திருவண்ணாமலை ரயில் நிலையம் சென்றடையும். இந்த ரயில்கள் 12 பெட்டிகளைக் கொண்டதாக இருக்கும். திருக்கோவிலூர் ரயில் நிலையத்தில் மட்டும் நின்று செல்லும்.
விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து நவம்பர் 23, 24, 25 ஆகிய தேதிகளில் காலை 10.10 மணிக்குப் புறப்படும் விழுப்புரம் -திருவண்ணாமலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் (வண்டி எண் 06130), அதே நாள்களில் முற்பகல் 11.45 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும். எதிர்வழித் தடத்தில் நவம்பர் 23, 24, 25 ஆகிய தேதிகளில் திருவண்ணாமலை ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 12.40 மணிக்குப் புறப்படும் திருவண்ணாமலை - விழுப்புரம் முன்பதிவில்லா சிறப்பு ரயில் (வண்டி எண் 06129), அதே நாள்களில் பிற்பகல் 2.15 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையம் வந்தடையும்.
இந்த ரயில்கள் வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சநல்லூர், அண்டம்பள்ளம், தண்டரை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த சிறப்பு ரயில்கள் 8 பெட்டிகளைக் கொண்டதாக இருக்கும்.
விழுப்புரத்திலிருந்து வேலூருக்கு சிறப்பு ரயில்கள்
விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து நவம்பர் 22, 23, 24 ஆகிய தேதிகளில் இரவு 10.40 மணிக்குப் புறப்படும் விழுப்புரம் - வேலூர் கண்டோன்மென்ட் முன்பதிவில்லா சிறப்பு ரயில் (வண்டி எண் 06062) மறுநாள் அதிகாலை 1.45 மணிக்கு வேலூர் கண்டோன்மென்ட் ரயில் நிலையம் சென்றடையும். எதிர்வழித்தடத்தில் வேலூர்கண்டோன்மென்டிலிருந்து நவம்பர் 23, 24, 25 ஆகிய தேதிகளில் அதிகாலை 2.05 மணிக்குப் புறப்படும் வேலூர் - விழுப்புரம் முன்பதிவில்லா சிறப்பு ரயில் (வண்டி எண் 06061), அதே நாள்களில் காலை 5 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையம் வந்தடையும்.
8 பெட்டிகளைக் கொண்ட இந்த ரயில்கள் வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சநல்லூர், அண்டம்பள்ளம், தண்டரை, திருவண்ணாமலை, போளூர், ஆரணிச்சாலை, சேதராம்பட்டு, ஒண்னுபுரம், கண்ணமங்கலம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று அவர் தெரிவித்துள்ளார்.