டெங்கு காய்ச்சலால் ஒரகடம் சிறப்பு உதவி ஆய்வாளர் பலி
டெங்கு காய்ச்சலால் ஒரகடம் சிறப்பு உதவி ஆய்வாளர் பச்சையம்மாள் பலியானது பற்றி....

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒரகடம் சிறப்பு உதவி ஆய்வாளர் பச்சையம்மாள் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் உட்கோட்டத்தில் 5 ஆண்டுகளுக்கும் மேலாகக் காவலராகப் பணியாற்றி, கடந்த 2 ஆண்டுகளாக ஒரகடம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்தவர் பச்சையம்மாள் (49). இவர் கடந்த 15-ம் தேதி வரை ஒரகடம் காவல் நிலையத்தில் பணியில் இருந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 16-ம் தேதி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவர், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 3 நாட்களாகத் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்குத் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் பலியானார்.
Advertisement
Advertisement
எந்தவொரு சூழ்நிலையிலும் விடுமுறை எடுக்காமல், அவர் தனது கடமையைச் சிறப்பாகச் செய்து வந்ததாக ஒரகடம் காவல் நிலைய சக காவலர்கள் கண்ணீர் மல்கத் தெரிவித்தனர். பணிக்கு வரும்போதெல்லாம் சிரித்த முகத்துடன் அனைவரிடமும் அன்பாகப் பழகி வந்த பச்சையம்மாளின் மறைவு, சக காவலர்களை மட்டுமின்றி அப்பகுதி பொதுமக்களையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சிறப்பு உதவி ஆய்வாளர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம், காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.