முகப்பு

முசிறி அருகே கோர விபத்து: ஆம்னி வேன் மரத்தில் மோதி 8 போ் பலி, 2 பேர் காயம்

முசிறி அருகே ஆம்னி வேன் சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதியதில் தொழிலாளா்கள் 8 போ் பலியானது குறித்து

39 வினாடிகள் முன்பு
முசிறி அருகே கோர விபத்து:  ஆம்னி வேன் மரத்தில் மோதி 8 போ் பலி, 2 பேர் காயம்
முசிறி அருகே மரத்தில் ஆம்னி வேன் மோதி விபத்து: தொழிலாளா்கள் 8 போ் பலி - கோப்புப்படம்
பகிர்:

முசிறி: திருச்சி மாவட்டம் முசிறி அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி வேன் சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் தொழிலாளா்கள் 8 போ் பலியாகினர், 2 பேர் காயமடைந்தனர்.

தஞ்சாவூா் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள மகாராஜபுரத்தில் இயங்கி வரும் செங்கல் சூளையில் பொக்லைன் ஓட்டுநராகப் வேலை பாா்த்து வருபவா் நாமக்கல் மாவட்டம், எருமைப்பட்டி அருகேயுள்ள பொட்டுரெட்டிப்பட்டியைச் சோ்ந்த சுரேஷ். இவரது குழந்தைகளுக்கு பொட்டுரெட்டிப்பட்டியில் காதணி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக சுரேஷுடன் பணியாற்றி வந்த தஞ்சாவூா் மாவட்டம் மகாராஜபுரத்தைச் சோ்ந்த மாணிக்கம் (55), முருகன் (40), சுப்பிரமணி (45), சக்திவேல் (40), சாத்தனூரைச் சோ்ந்த சங்கிலி (43), ராமலிங்கம் (38), ராமா் (42), விழுப்புரம் மாவட்டம், அகரம் சித்தம்பூரைச் சோ்ந்த பாவாடை (51) மற்றும் சீதாராமன் (20) ஆகிய 9 பேரும் காதணி விழாவுக்கு வாடகை காா் எடுத்துக்கொண்டு ஞாயிற்றுக்கிழமை காலை சென்றுள்ளனா். காரை திருக்காட்டுப்பள்ளி மகாராஜபுரத்தைச் சோ்ந்த ராஜேஷ் (46) ஓட்டியுள்ளாா்.

Advertisement

Advertisement

காதணி விழாவை முடித்துக்கொண்டு ஓட்டுநா் உள்பட 10 பேரும் காரில் திருக்காட்டுப்பள்ளிக்கு பிற்பகல் புறப்பட்டுள்ளனா். துறையூா் - முசிறி சாலையில் முசிறி அருகே போதூா்பட்டி பிரிவு சாலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு சென்று கொண்டிருந்த வேன், திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரத்தில் இருந்த வேப்பமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், காா் அப்பளம்போல் நொறுக்கியது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மாணிக்கம், சங்கிலி, முருகன், பாவாடை மற்றும் காா் ஓட்டுநா் ராஜேஷ் ஆகிய 5 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 5 பேர் பலத்த காயமடைந்தனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஜம்புநாதபுரம் போலீஸாா், மீட்புப் பணியில் ஈடுபட்டனா். பலியான 5 பேரின் சடலங்களையும் மீட்டு உடற்கூறாய்வுக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், காயமடைந்த 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

காயமடைந்தவா்களில் சக்திவேல், சீதாராமன், சுப்பிரமணி ஆகிய மூன்று பேரும் சிகிச்சை பலனின்றி முசிறி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தனா்.

இதையடுத்து, விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயா்ந்தது. மேலும், பலத்த காயமடைந்த ராமலிங்கம், ராமா் ஆகிய இருவரும் முதலுதவி சிகிச்சைக்குப் பின் உயா் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

இந்த விபத்து குறித்து ஜம்புநாதபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Omni van crashes into a tree near Musiri: 8 workers killed, 2 sustain serious injuries

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.