ஃபேஷனுக்காக பெரியாரை கொள்கைத் தலைவராக வைத்துள்ளது தவெக! ஜோசியத்தை நம்பியே ஆட்சி!
குடிஅரசு இதழ் முழுத் தொகுப்பு வெளியீட்டு விழாவில் மு.க. ஸ்டாலின் பேசியது குறித்து...

ஃபேஷனுக்காக மட்டுமே பெரியாரை கொள்கைத் தலைவராக தவெக கொண்டுள்ளதாகவும், ஜோசியத்தை நம்பியே ஆட்சி நடப்பதாகவும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று (நவ. 22) விமர்சித்தார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் குடிஅரசு இதழ் முழுத் தொகுப்பு வெளியீட்டு விழா இன்று (நவ. 22) நடைபெற்றது. நிகழ்ச்சியில் நூலை வெளியிட்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:
''தந்தை பெரியாரின் கருத்துகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டுசெல்லும் கருவூலத்தை வெளியிடுவது எனக்கு கிடைத்த பெருமை.
Advertisement
Advertisement
பெரியாரும் அண்ணாவும் கலைஞரும் பணியாற்றிய இதழை, தமிழ்நாட்டின் வரலாற்றை மாற்றிய இதழை, பகுத்தறிவுக் கண்ணை திறந்த இதழை, இன்றைய ஆதிக்கத்துக்கு எதிரான எச்சரிக்கையாக வெளியிடுவது சாதாரன செயல் கிடையாது.
100 ஆண்டுகளுக்கு முன்பு பெரியார் எழுதியது வெறும் எழுத்துகள் அல்ல. தமிழகத்தின் பாதையை மாற்றிய சிந்தனை.
குடிஅரசு இதழ் தடை செய்யப்பட்டபோது, அதை புரட்சி என்ற பெயரில் நடத்தினார். அதனையும் தடை செய்தனர். பிறகு பகுத்தறிவு என்ற பெயரில் தனது அறிவுப்பணியை செய்தார்.
தடைகளைத் தாண்டி தனது பணியை தொடர்ந்து செய்தாரே தவிர, கொள்கையை மாற்றிக்கொள்ளவில்லை.
குடிஅரசு இதழையோ சுயமரியாதை இயக்கத்தையோ பெரியார் தொடங்காமல் இருந்திருந்தால் தமிழ்நாடு என்னவாகியிருக்கும்.
ஆரிய ஆதிக்கம், சாதிய ஏற்றத்தாழ்வுகள், மதவாதம் பெண்ணடிமைத்தனம், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக ஏந்திய அறிவாயுதம்தான் குடி அரசு இதழ்.
பெரியாரால் பலர் அரசியல் தெளிவு பெற்றனர். சமத்துவத்துக்கான வழிகாட்டியாக அவர் இருந்தார். பெரியாரால் வளர்ந்தோம்.
ஒரு இனத்தையே வளர்ச்சிப்பாதைக்கு எடுத்துச் சென்ற பெருமை அவருக்கு உரியது. நூற்றாண்டின் விளைவாக சமூகம் சற்று மேம்பட்டுள்ளது''.
ஜோசியத்தை நம்பி ஆட்சி
''கடந்துவந்த பாதையை தவிர்த்தால் வருங்கால தலைமுறையினருக்கு அது ஆபத்து. நாம் பட்ட கஷ்டங்களை அடுத்த தலைமுறைக்குக் கூற வேண்டும்
தற்போது ஆளும் ஆட்சியும் பெரியாரை கொள்கைத் தலைவராக வைத்துள்ளது. ஆனால், ஜோசியத்தை நம்பிதான் ஆட்சி நடக்கிறது.
மூடநம்பிக்கையில் மூழ்கிப்போன இவர்கள் (தவெகவினர்) ஃபேஷனுக்காக மட்டுமே பெரியாரையும் அம்பேத்கரையும் கொள்கைத் தலைவராக வைத்துக்கொண்டுள்ளனர். இக்கொள்கைகளுக்கு எதிராகவே தவெகவினர் செயல்படுகின்றனர்.
தமிழ்நாட்டில் மின்வெட்டுக்கும் அரிவாள் வெட்டுக்கும் நடுவில்தான் போட்டி என்று முன்பு கூறியிருந்தேன்.
இப்போது அது அடுத்தகட்டத்துக்கு முன்னேறியிருக்கிறது. போதைப்பொருள்களுக்கும் வன்கொடுமைகளுக்கும் நடுவேதான் போட்டி.
அரசாங்கத்தில் உயர் பதவியில் இருப்பவர்களுக்கு தொல்லை கொடுப்பதில் அமைச்சர்களுக்கும் எம்.எல்.ஏ.க்களுக்கும் நடுவில்தான் போட்டி'' என மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டார்.