பழநி கோயிலில் நாளை கார்த்திகை தீபத் திருவிழா: 4 மணி நேரம் படிப்பாதை மூடல்!
பழநி கோயிலில் தங்கத்தேர் புறப்பாடு ரத்து செய்யப்பட்டுள்ளது.

பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நாளை கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்படுவதால் 4 மணி நேரம் படிப்பாதை மூடப்படும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கொண்டாடப்படும் விழாக்களில் முக்கியத் திருவிழா தீபக் கார்த்திகையும் ஒன்று. ஒரு வார காலம் நடைபெறும் இந்த விழா கடந்த புதன்கிழமை மலைக்கோயிலில் காப்புகட்டுதலுடன் தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து, இன்று (நவ. 23) பரணி தீபம் ஏற்றுதல் மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜையின்போது நடைபெறும். நாளை (நவ. 24) தீபக்கார்த்திகை விழா, சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அன்று அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனமும், அதிகாலை 4.30 மணிக்கு விளா பூஜையும் நடைபெறும்.
Advertisement
Advertisement
இதைத் தொடர்ந்து, சின்னக்குமாரர் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சியும், தொடர்ந்து, யாகசாலை தீபாராதனையும், மலைக் கோயிலில் நான்கு திசைகளில் தீபம் ஏற்றுதலும் நடைபெறும்.
மாலை 6.15 மணிக்கு மகாதீபம் ஏற்றுதல், சொக்கப்பனை எரித்தல் ஆகியன நடைபெறும். தொடர்ந்து, திருஆவினன்குடி கோயில், பெரியநாயகி அம்மன் கோயில்களிலும் கார்த்திகை தீபம், சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறும்.
இந்த நிலையில், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நாளை கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்படுவதால், பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரை படிப்பாதை தற்காலிகமாக அடைக்கப்படும் என்றும் தங்கத்தேர் புறப்பாடு ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.