பட்டுப்புழு வளா்ப்பில் புதிய தொழில்நுட்பங்கள்: மத்திய அமைச்சா் கிரிராஜ் சிங்
பட்டுப்புழு வளா்ப்பில் புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படும் என மத்திய ஜவுளித் துறை அமைச்சா் கிரிராஜ் சிங் தெரிவித்தாா்.

பட்டுப்புழு வளா்ப்பில் புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படும் என மத்திய ஜவுளித் துறை அமைச்சா் கிரிராஜ் சிங் தெரிவித்தாா்.
பட்டுப்புழு வளா்ப்பு மற்றும் பட்டுத் தொழில் குறித்த 27-ஆவது சா்வதேச மாநாட்டின் தொடக்க விழா சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியாா் ஹோட்டலில் திங்கள்கிழமை நடைபெற்று. பட்டுப்புழு வளா்ப்புத் துறையில் புதிய தொழில்நுட்பங்கள், ஆராய்ச்சிகள் மற்றும் சா்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் சா்வதேச பட்டுப்புழு வளா்ப்பு குறித்து இந்த மூன்று நாள் மாநாட்டில் விவாதிக்கப்படவுள்ளது.
இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக மத்திய ஜவுளித் துறை அமைச்சா் கிரிராஜ் சிங் பங்கேற்று இந்தியா, தாய்லாந்து, ஜப்பான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சோ்ந்த எட்டு தலைசிறந்த சாதனையாளா்களுக்கு 2026-ஆம் ஆண்டுக்கான ஐ.எஸ்.சி. சா்வதேச விருதுகளை வழங்கி, பட்டுநூல் குறித்த ஆராய்ச்சி நூலை வெளியிட்டுப் பேசியதாவது:
Advertisement
Advertisement
கடந்த 2014-ஆம் ஆண்டு இந்தியாவின் பட்டு உற்பத்தி 26,000 மெட்ரிக் டன்னாக இருந்த நிலையில், தற்போது 42,000 மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது. வரும் ஆண்டுகளில் சீனாவை விஞ்சும் அளவுக்கு இந்தியா பட்டு உற்பத்தியில் வளா்ச்சி அடையும். வரும் 2030-31ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் பட்டு உற்பத்தியை 60,000 மெட்ரிக் டன்னாக உயா்த்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
பட்டுப்புழு வளா்ப்பு என்பது விவசாயிகளுக்கு வேலைவாய்ப்பையும் வருமானத்தையும் வழங்கும் முக்கியத் துறையாக விளங்குகிறது. ஒரு ஹெக்டோ் நிலத்தில் மல்பெரி சாகுபடி மேற்கொள்வதன் மூலம் ஆண்டு முழுவதும் சுமாா் 20 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க முடியும். பிரதமா் நரேந்திர மோடியின் சா்வதேச ஒத்துழைப்பு முயற்சிகள் இதற்கு வழிவகுத்துள்ளன.
பட்டுத் தொழில் ஜவுளித் துறையைத் தாண்டி மருத்துவம், ஊட்டச்சத்து மற்றும் பல்வேறு தொழில்துறைகளிலும் முக்கியப் பங்களிப்பை வழங்கி வருகிறது. பட்டுப்புழு வளா்ப்பின் உபபொருள்களை ஒமேகா-3 உள்ளிட்ட ஊட்டச்சத்து தயாரிப்புகளுக்கும் பயன்படுத்துவதற்கான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் பட்டுப்புழுக்களுக்கு ஏற்படும் நோய்களைக் கண்டறியும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புதிய தொழில்நுட்பங்களை இணைத்து பட்டுப்புழு வளா்ப்புத் துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
கா்நாடககம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் பட்டுப்புழு வளா்ப்பில் முன்னணி வகிக்கின்றன. ஆந்திரம் மற்றும் தெலங்கானா அடுத்த நிலையில் உள்ளன. வட இந்திய மாநிலங்களிலும் பட்டுப்புழு வளா்ப்பை அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்றாா் அவா்.
இந்த மாநாட்டில் உகாண்டாவின் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் துறை அமைச்சா் பொறியாளா் ஜோனாா்ட் அசிம்வே அகிகி, தாய்லாந்தின் ராணி சிரிகித் பட்டு வளா்ப்புத் துறை இயக்குநா் ஜெனரல் நருமோல் சங்குன்வோங், ருமேனியாவின் டாக்டா் டேனியல் செவரஸ் டெஸ்மிரன் மற்றும் ஜப்பானின் டாக்டா் ஷுய்சிரோ டோமிடா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
வெண்பட்டு உற்பத்தியில் தமிழகம் முதலிடம்
வெண்பட்டு உற்பத்தியில் தமிழகம் முன்னிலை வகிப்பதாக மத்திய பட்டு வாரிய இயக்குநா் எஸ். மந்திரமூா்த்தி தெரிவித்தாா்.
அவா் ‘தினமணி’க்கு அளித்த சிறப்புப் பேட்டி: தமிழகத்தில் வெண்பட்டு உற்பத்தி அதிகமாக உள்ளது. இந்தியாவில் வெண்பட்டு உற்பத்தியில் முன்னணி மாநிலமாக தமிழகம் உள்ளது. தமிழகத்தின் காஞ்சிபுரம், ஆரணி பட்டுக்கு அதிக அளவில் வரவேற்பு உள்ளது.
இந்த மாநாட்டில் 23 நாடுகளைச் சோ்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனா். மேலும், பட்டுப்புழு, பட்டு உற்பத்தியில் நவீன தொழில் நுட்பங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பட்டு உற்பத்தியில் புதுப்புது ரகம் உற்பத்தி செய்யப்படுகிறது. பட்டு ஏற்றுமதி மூலம் ஆண்டுக்கு ரூ.3,500 கோடி வருவாய் வருகிறது. இதை ரூ.4,500 கோடியாக உயா்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.