கள்ளக்குறிச்சி ஆட்சியர் புகாரில் எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு! காவல்துறை பதில்!
கள்ளக்குறிச்சி ஆட்சியர் புகாரில் எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பற்றி...

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜா அளித்த புகாரைத் தொடர்ந்து, தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு, தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் தனது வாட்ஸ்அப் எண்ணிலிருந்து ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும், அவரது அரசு இல்லத்திற்குள் அத்துமீறி நுழைய முயன்றதாக வெளியான தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சை கிளப்பின.
இந்த விவகாரம் தொடர்பாகச் சென்னையைச் சேர்ந்த வழக்குரைஞர் ஆர். திரிசூலி என்பவர் தாக்கல் செய்த ரிட் மனு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன்பு திங்கள்கிழமை (நவ. 23) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான மாநில தலைமைக் குற்றவியல் வழக்குரைஞர் ஆர். ஜான் சத்யன், “கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரிடமிருந்து மாநிலத் தலைமைச் செயலர் எம். சாய்குமாருக்கோ அல்லது காவல்துறைக்கோ இதுவரை எந்தவொரு புகாரும் வரவில்லை” என்று தெரிவித்திருந்தார்.
Advertisement
Advertisement
இந்த விவகாரம் தொடர்பாக அரசு மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் கருத்துகளைக் கேட்டு விளக்கம் அளிக்கும்படி அரசுத் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு தள்ளிவைத்தார்.
இதனிடையே, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜா, திங்கள்கிழமை பிற்பகல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் எம்.எல்.ஏ அருள் விக்னேஷுக்கு எதிராக எழுத்துப்பூர்வமான புகார் மனுவை நேரில் ஒப்படைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று பதிலளித்துள்ள தமிழ்நாடு காவல்துறை, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜா அளித்த புகாரைத் தொடர்ந்து, தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷஹ்னாஸே விசாரணை அதிகாரியாக செயல்படுவார் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், ஐ.ஜி. அல்லது டி.ஐ.ஜி. அந்தஸ்து அதிகாரியை நியமிக்க சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.