முகப்பு

அன்பில் மகேஸை காவலில் எடுத்து விசாரிக்கக் கோரி மனு! நாளை (நவ. 25) உத்தரவு!

அன்பில் மகேஸ் உள்ளிட்ட மூவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய மனு மீது நாளை உத்தரவு...

52 வினாடிகள் முன்பு
அன்பில் மகேஸை காவலில் எடுத்து விசாரிக்கக் கோரி மனு! நாளை (நவ. 25) உத்தரவு!
இன்று நீதிமன்றத்தில் ஆஜரான அன்பில் மகேஸ் - DIN
பகிர்:

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க லஞ்சம் பெற்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் உள்ளிட்ட மூவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய மனு மீதான உத்தரவை சென்னை சிறப்பு நீதிமன்றம் நாளை (நவ. 25) தள்ளிவைத்துள்ளது.

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மற்றும் அனுமதிகள் பெற்றுத் தருவதாகக்கூறி 400 கோடி ரூபாய்க்கு மேல் லஞ்சம் பெற்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ், முன்னாள் தேமுதிக எம்எல்ஏ முத்துகுமார், அவரது மேலாளர் சரவணன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில், அன்பில் மகேஸை மூன்று நாள்களும், முத்துகுமாரை ஐந்து நாள்களும், சரவணனை ஒரு நாளும் காவலில் எடுத்து மத்திய குற்றப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தியிருந்தனர். இந்தநிலையில், இவர்கள் மூவரையும் சேர்த்து, 2 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மத்திய குற்றப் பிரிவு போலீசார் தரப்பில் சென்னை ஊழல் தடுப்பு சட்ட வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

அந்த மனுவில், பணம் வசூலித்தது யார்? தனியார் பள்ளிகளிடமிருந்து எவ்வளவு பணம் வசூலிக்கப்பட்டது? வசூலிக்கப்பட்ட பணம் யாரை சென்றடைந்தது? என்பது குறித்து மூவரிடமும் விசாரிக்க வேண்டியுள்ளதால், அவர்களை 2 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி எல்.எஸ். சத்தியமூர்த்தி முன் விசாரணைக்கு வந்தபோது, அன்பில் மகேஸ் உள்ளிட்ட மூவர் தரப்பிலும் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபுடுகுமார் ராஜரத்தினம், சரவணன் ஆகியோர், சென்னை உயர்நீதிமன்றத்தில் அன்பில் மகேஸின் ஜாமீன் மனு விசாரணைக்கு வரவுள்ள நிலையில், ஜாமீன் வழங்குவதைத் தடுக்கும் நோக்கில் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, மூவரையும் காவல்துறையினர் காவலில் எடுத்து போதுமான அளவுக்கு விசாரித்துள்ளதால், மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கக் கூடாது, அப்படி அனுமதி வழங்குவதாக இருந்தால், ஒரு நாளுக்கு மேல் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

மத்திய குற்றப் பிரிவு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் உஷாராணி, இந்த முறைகேட்டில் அரசுத் துறை அதிகாரிகளுக்கு உள்ள தொடர்பு குறித்து விசாரிக்க வேண்டும் என்பதால், மூன்று பேரையும் சேர்த்து இரண்டு நாள்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று வாதிடப்பட்டது.

இதேபோல, விசாரணை அதிகாரியும் மூவரையும் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் குறித்து சாட்சிக் கூண்டில் ஏறி விளக்கம் அளித்தார். அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தததையடுத்து, அன்பில் மகேஸ் உள்ளிட்ட மூவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய மனு மீதான உத்தரவு நாளை (நவ. 25) காலை பிறப்பிக்கப்படும் என அறிவித்த நீதிபதி, மூவரையும் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டுள்ளார்

summary

plea seeking police custody of Anbil Mahesh for interrogation

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.