முகப்பு

அருள் விக்னேஷ் மீது புகார் கொடுத்தது முதல்வருக்குத் தெரியுமா? தெரியாதா? மு.க. ஸ்டாலின் கேள்வி

கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது புகார் கொடுத்தது முதல்வருக்குத் தெரியுமா? தெரியாதா? மு.க. ஸ்டாலின் கேள்வி

56 வினாடிகள் முன்பு
அருள் விக்னேஷ் மீது புகார் கொடுத்தது முதல்வருக்குத் தெரியுமா? தெரியாதா? மு.க. ஸ்டாலின் கேள்வி
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் - கோப்புப் படம்
பகிர்:

உங்க அண்ணன், உங்க தாய்மாமன் என டயலாக் பேசும் முதல்வர் ஜோசப் விஜய்க்கு, நான்கு மாதங்களுக்கு முன்பே கள்ளக்குறிச்சி எம்எல்ஏ மீது புகார் கொடுத்தது தெரியுமா, தெரியாதா? என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அது குறித்த வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதுநாள் வரை, எம்எல்ஏ அருள் விக்னேஷ் குறுந்தகவல் அனுப்பவேயில்லை என்று கூறப்பட்டு வந்த நிலையில், அவர் மீது ஜூலை மாதமே புகார் அளிக்கப்பட்டுவிட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு, நேற்று இரவு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட பதிவில்,

உங்க அண்ணன், உங்க தாய்மாமன் என டயலாக் பேசும் முதலமைச்சருக்கு நான்கு மாதங்களுக்கு முன்பே கள்ளக்குறிச்சி எம்எல்ஏ மீது புகார் கொடுத்தது தெரியுமா, தெரியாதா?

தேசிய மகளிர் ஆணையமும், உயர்நீதிமன்ற நீதிபதியும் தலையிட்ட பின்னர்தான் ஆட்சியரின் புகாரே பதியப்படும் என்றால் தமிழ்நாட்டில் நடப்பது ஆட்சியா, இல்லை வேறெதுவுமா?

போடாத கமெண்டுக்காக, பேராசிரியரின் முகவரியைத் தேடிக் கண்டுபிடித்து அதிகாலையில் கடத்திச் செல்லத் தெரிந்த காவல்துறைக்கு, முதலமைச்சர் விஜய் அவர்களின் பின்னாலேயே இருந்துகொண்டு தவறிழைத்த MLA-வைக் கைது செய்யத் தெரியவில்லையா?

கூட்டுப் பாலியல் வன்கொடுமைப் புகாரில் சிக்கிய ஸ்ரீவைகுண்டம் MLA மீதும், மைதானத்தில் போதை மாத்திரை நசுக்கிய அமைச்சர் மீதும் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் த.வெ.க.வில் மற்றவர்களுக்கு பயம் இருந்திருக்கும்.

மாறாக, என்ன செய்தாலும் நாம் காப்பாற்றப்படுவோம், புகார் அளித்த பெண்களைத்தான் கட்சியில் இருந்து நீக்குவார்கள் என்ற மோசமான முன்னுதாரணங்களை முதலமைச்சர் விஜய் அனுமதித்துவிட்டார். அந்த தைரியத்தில்தான் ஒட்டுமொத்த மாவட்டத்தின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் அதிகாரியிடமே எல்லை மீறியிருக்கிறார் த.வெ.க. சட்டப்பேரவை உறுப்பினர்.

'த.வெ.க. பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும்' என்று சொல்லி ஆட்சிக்கு வந்தார்கள். இன்று, த.வெ.க.வினரின் தொல்லையில் இருந்து பாதுகாப்பு தேடிப் பெண்கள் ஓடும் நிலைக்குத் தமிழ்நாடு தள்ளப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது.

இந்த வழக்கிலாவது உறுதியான நடவடிக்கை எடுத்தால்தான் இப்படியான சம்பவங்களை எதிர்காலத்தில் தடுக்க முடியும்.

நான்கு மாதகாலமாக ஒரு குற்றவாளியைப் பாதுகாக்க எல்லா வழிகளையும் பயன்படுத்திய மாநில அரசு - இப்படிப்பட்ட எம்எல்ஏ-வை அழைத்து “தீபாவளி பரிசு” கொடுத்த முதலமைச்சரின் தலைமையில் உள்ள மாநில அரசு இனி இந்த வழக்கை விசாரிப்பது சரியாக இருக்காது. எனவே, மாநில அரசு தாமாகவே இந்த வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும்.

சட்டப்பேரவை உறுப்பினரின் ஒழுங்கீனம் குறித்து புகார் தெரிவித்த பின்பும் நடவடிக்கை எடுக்காமல் மூடிமறைத்த தலைமைச் செயலாளர் மீதும், புகார் கொடுத்தவருக்கு அழுத்தம் தந்த அமைச்சர்கள் மீதும் நடவடிக்கை பாய வேண்டும்.

கள்ளக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் அருள் விக்னேஷ் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும்.

மேலும், பேரவையில் முதல்வர் விஜய் ஆதாரம் போதுமா என்று பேசிய விடியோவையும் இணைத்துள்ளார் மு.க. ஸ்டாலின்.

summary

Does the Chief Minister know about the complaint filed against Arul Vignesh, or not? M.K. Stalin asks.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.