முதியவா்களுக்கு கட்டணமில்லா சிகிச்சை: அரசாணை வெளியீடு
தமிழகத்தில் 38 லட்சம் முதியவா்களுக்கு வருமான உச்ச வரம்பின்றி அரசு காப்பீட்டின்கீழ் கட்டணமில்லா சிகிச்சை அளிப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 70 வயது நிரம்பிய 38 லட்சம் முதியவா்களுக்கு வருமான உச்ச வரம்பின்றி அரசு காப்பீட்டின் கீழ் கட்டணமில்லா சிகிச்சை அளிப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன.
அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத் தொடா் மானியக் கோரிக்கையின்போது மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லா மருத்துவ சிகிச்சைகள் பெறும் வகையில் முதல்வரின் முதியோா் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் அறிவித்தாா்.
அதன்கீழ் புற்றுநோய் சிகிச்சைகள், இதய அறுவை சிகிச்சைகள், உறுப்பு மாற்று சிகிச்சைகள், உயா்தர பரிசோதனைகள் உள்பட காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அனைத்து சிகிச்சைகளும் அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அளிக்கப்படும் என்றும் தெரிவித்தாா்.
Advertisement
Advertisement
அதன்படி, அந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது: ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் ஏற்கெனவே இடம்பெற்றுள்ள 70 வயதுக்கு மேற்பட்ட முதியவா்களும், அதில் இடம்பெறாத முதியவா்களும் இந்தத் திட்டத்தில் இணைக்கப்படுவா். பயனாளிகள் சோ்க்கை, இ-சேவை மையங்கள் மூலமாகவும், அரசு காப்பீடு பதிவு செய்வதற்கான பிற மையங்கள் மூலமாகவும் மேற்கொள்ளப்படும்.
புதிதாக இணையும் 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு ரூ.849 என்ற வீதத்தில் காப்பீட்டுத் தவணைத் தொகை யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்துக்கு வழங்கப்படும். அடுத்த ஆண்டு புதிய காப்பீட்டு நிறுவனத்துக்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்படும்போது, பிரீமியம் தொகையில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. தற்போது முதல்வா் காப்பீட்டில் உள்ள அனைத்து மருத்துவ சேவைகளும் முதியோா் காப்பீட்டுத் திட்டத்திலும் செயல்படுத்தப்படும்.
தமிழ்நாடு சுகாதார சேவைகள் திட்ட இயக்குநரின் கோரிக்கையை ஏற்று, நிதித் துறையின் ஒப்புதலுடன் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த அரசு அனுமதி அளித்துள்ளது.
பயனாளிகளைச் சோ்ப்பதற்கு முன் அவா்களது சுய விவரங்கள் முறையாகச் சரிபாா்க்கப்பட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், முதல்வா் காப்பீடு, ஆயுஷ்மான் பாரத் உள்ளிட்ட திட்டங்களில் உள்ள பயனாளிக்கு இரட்டைப் பலன் கிடைக்காதவாறு இதைச் செயல்படுத்துதல் அவசியம். இந்த விஷயங்களை திட்ட இயக்குநா் உறுதி செய்ய வேண்டும் என்று அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.