முகப்பு

அல்வா பாக்ஸ் பார்சல்! திருவிக நகரில் நூதன முறையில் செல்போன்கள் திருட்டு!

அல்வா பாக்ஸ் பார்சல் செய்து, திருவிக நகரில் நூதன முறையில் செல்போன்கள் திருட்டப்பட்டதில் ஒருவர் கைது

19 வினாடிகள் முன்பு
அல்வா பாக்ஸ் பார்சல்! திருவிக நகரில் நூதன முறையில் செல்போன்கள் திருட்டு!
அல்வா பாக்ஸ் பார்சல்
பகிர்:

ஆன்லைன் மூலம் செல்போன் ஆர்டர் செய்பவர்களுக்கு, அல்வா ஸ்வீட் பாக்ஸ் வைத்து ஏமாற்றிய டெலிவரி ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார், அவரிடமிருந்து 2 செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளன.

சென்னை திரு.வி.க. நகர் பகுதியில், டெலிவரி செய்ய வேண்டிய செல்போன்களைத் திருடிவிட்டு, அவற்றுக்குப் பதிலாக அல்வா ஸ்வீட் பாக்ஸை வைத்து நூதன முறையில் மோசடியில் ஈடுபட்ட டெலிவரி ஊழியரை திரு.வி.க. நகர் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து இரண்டு செல்போன்களும் மீட்கப்பட்டன.

சென்னை மண்ணடி, சைவ முத்தையா தெருவைச் சேர்ந்த சையத் அப்ரிடி (28) என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதுடன், எஸ்.ஆர்.பி. கோயில் தெருவில் எலக்ட்ரானிக்ஸ் கடையும் நடத்தி வருகிறார்.

Advertisement

Advertisement

இந்நிலையில், கடந்த 06.11.2026 அன்று மாலை, அவரது வியாபாரக் கூட்டாளி நுங்கம்பாக்கத்தில் இருந்து ரேபிடோ இருசக்கர வாகன டெலிவரி சேவை மூலம் இரண்டு செல்போன்களைப் பார்சலில் அனுப்பி வைத்துள்ளார்.

அந்தப் பார்சலை சையத் அப்ரிடி பெற்றுத் திறந்து பார்த்தபோது, அதில் செல்போன்களுக்குப் பதிலாக அல்வா ஸ்வீட் பாக்ஸ் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். டெலிவரி ஊழியர் செல்போன்களைத் திருடிவிட்டு, அதற்குப் பதிலாக அல்வா பாக்ஸை வைத்து ஏமாற்றியது தெரியவந்தது.

இதுகுறித்து சையத் அப்ரிடி அளித்த புகாரின்பேரில், K-9 திரு.வி.க. நகர் காவல் நிலைய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதைத்தொடர்ந்து, குற்றப்பிரிவு ஆய்வாளர் பிரேம்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி, செல்போன்களைத் திருடிச் சென்ற வியாசர்பாடியைச் சேர்ந்த கண்ணதாசனின் மகன் மனிஷ்குமார் (19) என்பவரை 23.11.2026 அன்று கைது செய்தனர்.

அவரிடமிருந்து சாம்சங் மற்றும் கூகுள் பிக்சல் நிறுவனங்களைச் சேர்ந்த இரண்டு செல்போன்களும் மீட்கப்பட்டன.

போலீசாரின் விசாரணையில், மனிஷ்குமார் ரேபிடோ பைக் டாக்ஸி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்ததும், சம்பவத்தன்று நுங்கம்பாக்கத்தில் பார்சலைப் பெற்றுக்கொண்டு திரு.வி.க. நகர் நோக்கிச் செல்லும் வழியில், அகரம் சந்திப்பு அருகே பார்சலைப் பிரித்து அதிலிருந்த இரண்டு செல்போன்களையும் திருடியதும் தெரியவந்தது. பின்னர், செல்போன்களுக்குப் பதிலாக அல்வா ஸ்வீட் பாக்ஸை வைத்து பார்சலை டெலிவரி செய்துள்ளார்.

இதையடுத்து, கைது செய்யப்பட்ட மனிஷ்குமார் விசாரணைக்குப் பின்னர் 23.11.2026 அன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்ற உத்தரவின்படி அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

டெலிவரி பார்சலில் இருந்த செல்போன்களைத் திருடிவிட்டு, அதற்குப் பதிலாக அல்வா பெட்டியை வைத்து வாடிக்கையாளரை ஏமாற்றிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.