திருப்பரங்குன்றம்: வழக்கமான இடத்தில் மகா தீபம் ஏற்றுவதற்கான பணிகள் தீவிரம்
திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, வழக்கமான இடத்தில் மகா தீபம் ஏற்றுவதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது குறித்து...

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, வழக்கமான இடத்தில் மகா தீபம் ஏற்றுவதற்கான பணிகள் செவ்வாய்க்கிழமை (நவ. 24) தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மலைமேல் மகா தீபம் ஏற்றும் வைபவம் இன்று மாலை நடைபெறவுள்ளது.
மலை உச்சியிலுள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்திருந்தது. இதையடுத்து, இந்த ஆண்டு மலை உச்சியில் தீபம் ஏற்றப்படும் எனப் பொதுமக்களும், பக்தர்களும், இந்து அமைப்பினரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.
Advertisement
Advertisement
இருப்பினும், உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய வெள்ளிக்கிழமை முதல் திங்கள்கிழமை இரவு வரை மாவட்ட ஆட்சியரோ, மாநகர காவல் ஆணையரோ திருப்பரங்குன்றம் மலைப்பகுதிக்கு நேரில் வந்து எவ்வித ஆய்வும் மேற்கொள்ளவில்லை. மேலும், நீதிமன்ற உத்தரவின்படி தீபம் ஏற்றுவதற்கான குழுவும் இதுவரை முறையாக அறிவிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை திருப்பரங்குன்றம் மலைக்கு செல்லும் பாதையில் மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயப்பிரதீபா தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.
அதே சமயத்தில் வழக்கமாக மகா தீபம் ஏற்றப்படும் உச்சிப் பிள்ளையார் கோயில் மண்டபத்தின் மேல் பகுதியில், தீபக் கொப்பரை அமைக்கும் பணிகள் செவ்வாய்க்கிழமை தீவிரமாக நடைபெற்றன. திருவண்ணாமலையிலிருந்து வருகை தந்துள்ள சிறப்புக் குழுவினர் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மலைமேல் ஏற்றப்படும் மகா தீபத்திற்காக 4.5 அடி உயரமும், 70 கிலோ எடையும் கொண்ட தாமரை வடிவக் கொப்பரை தயார்படுத்தப்பட்டுள்ளது. இதில் 400 கிலோ நெய், 150 மீட்டர் நீளமுள்ள காடா துணி மற்றும் 5 கிலோ சூடம் ஆகியவற்றைப் பயன்படுத்தி மகா தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகளைத் திருவண்ணாமலை குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
அதேவேளையில், மலை உச்சியிலுள்ள தீபத்தூணில் இதுவரை எவ்வித முன்னேற்பாட்டுப் பணிகளும் தொடங்கப்படவில்லை. இது தொடர்பாக நிர்வாகத் தரப்பிலிருந்தும் எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படாதது பக்தர்களிடையே பெரும் குழப்பத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.