நெல்லையப்பர் கோயிலில் 3 அடி உயர பரணி மகா தீபம் ஏற்றம்: திரளான பக்தர்கள் தரிசனம்
நெல்லையப்பர் திருக்கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி சுவாமி சன்னதி மகா மண்டபத்தில் 3 அடி உயர பரணி மகா தீபம் ஏற்றப்பட்டது குறித்து...

நெல்லை, நெல்லையப்பர் திருக்கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி சுவாமி சன்னதி மகா மண்டபத்தில் 3 அடி உயர பரணி மகா தீபம் திங்கள்கிழமை (நவ. 23) ஏற்றப்பட்டது.
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லையப்பர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா 2 நாள்கள் கொண்டாடப்படுகிறது. முதல் நாளான இன்று மாலை பெரிய விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி நெல்லையப்பருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சுவாமி சன்னதியில் இருந்து தீபச்சுடர் எடுத்து வரப்பட்டு மகா மண்டபத்தில் தயார் செய்யப்பட்டிருந்த 3 அடி உயர பரணி மகா தீபம் ஏற்றப்பட்டது.
தொடர்ந்து சிறப்பு யாக பூஜைகள் நடத்தப்பட்டு பரணி மகா தீபத்திற்கு சோடச உபச்சார மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Advertisement
Advertisement
சுவாமி சன்னதியில் ஏற்றப்பட்ட பரணி மகா தீபம் நாளை இரவு வரை தொடர்ந்து எரியும். நாளை கார்த்திகை மகா தீபத் திருவிழாவையொட்டி சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளி மகா தீபாராதனைக்குப் பிறகு சொக்கப்பனை முக்கில் மகா ருத்ர தீபம் ஏற்றப்படும்.
இதற்காக இன்று ஏற்றப்பட்ட பரணி தீபத்திற்கு நாளை சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து சென்று, அதிலிருந்து தீபச்சுடர் எடுத்து மகா ருத்ர தீபம் ஏற்றப்படும்.