FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது பற்ற..

16 நவம்பர் 2026, 9:41 am
திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றம்.
பகிர்:

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கொண்டாடப்படும் விழாக்களில் கார்த்திகை தீபத்திருவிழாவும் ஒன்று. நடப்பாண்டுக்கான திருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி தினமும் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் காலையில் தங்கச் சப்பரத்திலும், மாலையில் தங்க மயில் வாகனம், வெள்ளி பூத வாகனம், அன்ன வாகனம், சேஷ வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

Advertisement

Advertisement

கொடியேற்ற நிகழ்ச்சியையொட்டி காலை உற்சவர் சந்நிதியில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மனுக்குப் பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகை அபிஷேகங்கள் நடைபெற்று, சிறப்பு ஆராதனைகளும் நடைபெற்றன. இதனையடுத்து மேளதாளங்கள் முழங்க சுவாமி தெய்வானையுடன் தங்க மயில் வாகனத்தில் சர்வ அலங்காரத்தில் கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளினார். அங்குத் தங்கமுலாம் பூசப்பட்ட கம்பத்தில் புனிதநீர் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு, தர்ப்பைப் புல், மாவிலை, சந்தனம், குங்குமம் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் காலை 7.14 மணிக்குக் கம்பத்தில் கொடியேற்றப்பட்டது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 23-ஆம் தேதி திங்கள்கிழமை பட்டாபிஷேகமும், 24-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலையில் தேரோட்டமும், மாலையில் மலைக்கு மேல் கார்த்திகை மகா தீபமும், இதனைத் தொடர்ந்து 16 கால் மண்டபம் பகுதியில் சொக்கப்பனை தீபக்காட்சியும் நடைபெறும். விழா ஏற்பாடுகளைக் கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் வ. சண்முகசுந்தரம் தலைமையில் கோயில் துணை ஆணையர் செல்வி மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திங்கள்கிழமை கந்தசஷ்டி விழாவின் நிறைவு நாள் விழா நடைபெற்று வருகிறது. நிறைவு நாளில் கந்தசஷ்டி தேரோட்டத்தில் சுப்பிரமணிய சுவாமி தங்க மயில் வாகனத்தில் தெய்வானையுடன் எழுந்தருளி ரத மற்றும் கிரி வீதிகளில் சிறிய சட்டத் தேரோட்டம் நடைபெறும். வழக்கமாகக் கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்தின் போது சிம்மாசனத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளுவது வழக்கம். ஆனால், கந்தசஷ்டி விழா தேரோட்டத்தையொட்டி கம்பத்தடி மண்டபத்தில் சுப்பிரமணிய சுவாமி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.

summary

The Karthigai Deepam festival began on Monday with the flag hoisting ceremony at the Subramaniya Swamy Temple in Thiruparankundram.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.