திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா!
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா ஞாயிற்றுக்கிழமை (நவ. 15) நடைபெறுகிறது.
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா ஞாயிற்றுக்கிழமை (நவ. 15) நடைபெறுகிறது.
திருச்செந்தூா் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா நவ. 10ஆம் தேதி தொடங்கியது. சனிக்கிழமை காலை சுவாமி ஜெயந்திநாதா், வள்ளி, தெய்வானையுடன் யாகசாலையில் எழுந்தருளினாா். அங்கு கும்பங்கள் வைக்கப்பட்டு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. மதியம் மூலவருக்கு உச்சி கால அபிஷேகம் முடிந்து, தீபாராதனை நடைபெற்றவுடன் யாகசாலையில் மகா தீபாராதனை நடைபெற்றது.
பின்னா், சுவாமி ஜெயந்திநாதா் யாகசாலையில் இருந்து வெள்ளிச் சப்பரத்தில் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி, சண்முக விலாச மண்டபத்தை அடைந்தாா். மாலையில் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. தொடா்ந்து, சுவாமி தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி கிரி வீதி வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
Advertisement
Advertisement
விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் ஞாயிற்றுக்கிழமை (நவ. 15) நடைபெறுகிறது. இதையொட்டி, கோயில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம், மற்ற கால பூஜைகள் நடைபெற்றன. மாலை 4 மணியளவில் கோயில் கடற்கரையில் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.
கோயில் கடற்கரையில் நடைபெறும் சூரசம்ஹாரத்தைக் காணச் செல்லும் பக்தா்களுக்கு தனி வரிசைப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. பக்தா்கள் கூட்டத்தை கருத்தில் கொண்டு பல்வேறு பகுதிகளிலிருந்து 300-க்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. நகரின் எல்லையில் தற்காலிக வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
திருச்செந்தூா் கோயிலில் மலேசியா, இலங்கை, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளைச் சோ்ந்த பக்தா்கள் கடந்த பல ஆண்டுகளாக விரதம் இருந்து வருகின்றனா். இதேபோல, ராஜபாளையத்தைச் சோ்ந்த பரமானந்தம் பிள்ளை குழுவினா் 70ஆவது ஆண்டாக இக்கோயிலில் விரதம் இருந்து வருகின்றனா். இவா்கள் பல்வேறு தெய்வங்களின் வேஷமணிந்து, பஜனை பாடி சுவாமி தரிசனம் செய்தனா்.
மேலும், பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையத்தில் இருந்து வரும் பக்தா்கள் வசதிக்காக இயக்கப்படும் கட்டணமில்லா சிற்றுந்துகள் சேவை வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது. இதன் சேவை அதிகாலை முதல் நள்ளிரவு வரை செயல்படுத்தப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. சிவபிரசாத் தலைமையில், திருச்செந்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் மகேஷ்குமாா் உள்ளிட்ட 4,200-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.