திருவண்ணாமலை தீபத்திருவிழா! 30 லட்சம் பக்தர்கள் பங்கேற்பு!
திருவண்ணாமலை தீபத்திருவிழாவில் 30 லட்சம் பக்தர்கள் பங்கேற்பு...

விழுப்புரம்: திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபம் ஏற்றும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை மாலை நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக சுமார் 30 லட்சம் பக்தர்கள் குவிந்து இருப்பதால் திருவண்ணாமலை பக்தர்களால் நிரம்பி வழிகிறது.
பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் தலமாகவும் விளங்கும் உண்ணாமுலை அம்மன் உடனுறை அருணாசலேசுவரர் கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா நவம்பர் 15-ஆம் தேதி கொடியேற்றறத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, நாள்தோறும் காலையில் ஒவ்வொரு வாகனங்களில் விநாயகர், சந்திரசேகரரும், இரவில் பஞ்சமூர்த்திகளும் எழுந்தருளி, வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். திருவிழாவின் ஏழாம் நாளான நவம்பர் 21-ஆம் தேதி விநாயகர் தேர் வடம்பிடித்தலும், தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் மகா தேரோட்டம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்தும் விநாயகர், சந்திரசேகர், பஞ்சமூர்த்திகள் ஒவ்வொரு வாகனங்களில் புறப்பாடாகி காட்சியளித்தனர்.
மகா தீபத் திருவிழாவையொட்டி தீபம் ஏற்றப்படும் கொப்பரை 2,668 அடி உயரம் கொண்ட மலை உச்சிக்கு திங்கள்கிழமை கொண்டு செல்லப்பட்டது. திருவிழாவின் முக்கிய நிகழ்வாக 10-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை மகா தீபத் திருவிழா நடைபெறுகிறது.
Advertisement
Advertisement
இதையொட்டி, அருணாசலேசுவரர் கோயில் சுவாமி சந்நிதி எதிரில் அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றறப்பட்டது. ஏகன், அநேகன் தத்துவத்தை உலகுக்கு எடுத்துரைத்து, பஞ்சபூதங்களும் தாமே என்பதை இறைவன் எடுத்துரைக்கும் வகையில் இந்த நிகழ்வு நடைபெற்றறது. இதைத் தொடர்ந்து கோயில் பிரம்ம தீர்த்தக்குளத்தில் தீர்த்தவாரியும் நடைபெற்றது. பின்னர், தங்கக் கொடிமரம் முன் தீப தரிசன மண்டபத்தில் மாலை 4 மணிக்கு பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். அதன் பின்னர், ஆணும், பெண்ணும் சமம் என்ற தத்துவத்தை உலகுக்கு உணர்த்த, உமையவளுக்கு தனது இடபாகத்தை அளித்து, அர்த்தநாரீசுவரராக அருணாசலேசுவரர் எழுந்தருளினார். ஆண்டுக்கு ஒருமுறை சில நிமிஷங்கள் மட்டுமே காட்சியளிக்கும் அர்த்தநாரீசவரர் ஆனந்தாண்டவமாடி கோயில் மூன்றாம் பிரகாரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இதைத் தொடர்ந்து தங்கக் கொடிமரம் முன் அகண்டத்தில் தீபச்சுடர் ஏற்றறப்படவுள்ளது. தொடர்ந்து மலையே மகேசன் என போற்றி வணங்கப்படும் 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். மகா தீபத் திருவிழாவில் பங்கேற்பதற்காக தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்துள்ளனர். சுமார் 30 லட்சம் பக்தர்கள் குவிந்து இருப்பதால், திருவண்ணாமலை நகரமே பக்தர்களால் நிரம்பி வழிகிறது.
வடக்கு மண்டல ஐ.ஜி. பிரவின்குமார் அபிநபு தலைமையில் சுமார் 15,500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். திருவண்ணாமலையைச் சுற்றி 31 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்களை அமைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை போலீஸார் கண்காணித்து வருகின்றனர். அருணாசலேசுவரரர் கோயில், கிரிவலப் பாதைகள், மாடவீதிகள் உள்ளிட்ட பகுதிகள் என மொத்தமாக 1,108 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, கட்டுப்பாறை அறை மூலம் போலீஸார் கண்காணித்து வருகின்றனர். இதில் சுமார் 700 கேமராக்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்டவையாகும். மேலும் 15-க்கும் மேற்பட்ட டிரோன்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.