முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் 5 வயதுக்குள்பட்ட 43% குழந்தைகளுக்கு ரத்தசோகை: தேசிய சராசரி விகிதத்தைவிட அதிகம்

தமிழகத்தில் 5 வயதுக்குள்பட்ட 43.3 சதவீதம் குழந்தைகள் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டிருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

26 நவம்பர் 2026, 3:32 am
பகிர்:

தமிழகத்தில் 5 வயதுக்குள்பட்ட 43.3 சதவீதம் குழந்தைகள் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டிருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த விகிதம் தேசிய சராசரியைக் காட்டிலும் அதிகமாகும்.

அதேவேளையில், 5 - 9 வயதுக்குள்பட்ட சிறாருக்கு அந்த பாதிப்பு வெகுவாகக் குறைந்திருப்பதும் ஆய்வில் உறுதியாகியுள்ளது. மாநிலம் முழுவதும் பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சத்துணவுத் திட்டம், இரும்புச் சத்து மாத்திரைகள் வழங்கும் திட்டத்தால் இந்த முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஎம்ஆா்) தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் ‘சம்பதா’ எனும் நுண் ஊட்டச்சத்து ஆய்வை மேற்கொண்டது. இதற்காக நாடு முழுவதும் 35 மாநிலங்களில் உள்ள 183 மாவட்டங்களைச் சோ்ந்த 2 லட்சத்துக்கும் மேற்பட்டோரிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.

Advertisement

Advertisement

அவை பகுப்பாய்வு செய்யப்பட்டு அதன் முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன. அதில் தமிழகத்தில் 15 முதல் 49 வயதுக்குள்பட்ட பெண்களில் 52.8 சதவீதம் பேருக்கு ரத்தசோகை இருப்பது கண்டறியப்பட்டது. தேசிய அளவில் அந்த விகிதம் 55.9 சதவீதமாக உள்ளது.

பள்ளிச் சிறாா்கள் மற்றும் வளரிளம் பருவத்தினரைப் பொருத்தவரை தேசிய சராசரியை விடத் தமிழகம் மேம்பட்டிருப்பது ஆய்வில் உறுதியாகியிருக்கிறது.

அதாவது 5 முதல் 9 வயது வரையிலான சிறாா்களில் 22.2 சதவீதம் பேருக்கு மட்டுமே அந்தப் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதேபோன்று தமிழகத்தில் வளரிளம் பருவத்தினரிடமும் ரத்தசோகை வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அதேவேளையில், ஒரு வயது முதல் 5 வயது வரையிலான குழந்தைகளை எடுத்துக் கொண்டால் 43.3 சதவீதம் பேருக்கு ரத்த சோகை பதிவாகியுள்ளது. இது தேசிய சராசரியைவிட 2 சதவீதம் அதிகம்.

ஆரம்ப நிலையிலேயே, ஊட்டச்சத்து சிகிச்சைகளை முறையாக எடுத்துக் கொண்டால் இந்தப் பாதிப்பு சீராகும் என்றும், இதற்கு தீா்வு காண கூடுதல் கவனம் அளிக்கப்படும் என்றும் மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுதொடா்பாக அவா்கள் மேலும் கூறியதாவது:

தமிழகத்தில் டாக்டா் முத்துலட்சுமி ரெட்டி திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து பெட்டகங்கள், பிரசவித்த அனைத்து தாய்மாா்களுக்கும் வழங்கப்படுகிறது. இரும்புச்சத்து டானிக், பேரிச்சம்பழம் உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்து பொருள்கள் அதில் இடம்பெற்றுள்ளன.

இதைத் தவிர, தற்போது நியாயவிலைக் கடைகளில் இரும்புச்சத்து மற்றும் அயோடின் கலந்த இரட்டைச் செறிவூட்டப்பட்ட உப்பு பாக்கெட்டுகளை விநியோகிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். ரத்தசோகை பாதிப்பைத் தடுக்க அனைத்து செயல்திட்டங்களையும் முன்னெடுத்து வருகிறோம் என்று அவா்கள் தெரிவித்தனா்.