மன உளைச்சலில் ஆட்சியரும் அவர் கணவரும்; இருந்தும் துணிச்சல்! நீக்கப்பட்ட பதிவில் பெண் ஐஏஎஸ் அதிருப்தி
கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ விவகாரத்தில் நடந்தது என்ன? என்பது பற்றி ஐஏஎஸ் அதிகாரி கவிதா ராமு பதிவு...
கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ தகாத குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் பெண் ஆட்சியரும் அவரது கணவரும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக ஐஏஎஸ் அதிகாரி கவிதா ராமு கூறியுள்ளார்.
அதேநேரத்தில் பணியிட மாற்றத்தை விரும்பாத பெண் ஆட்சியரின் செயலைப் பாராட்டுவதாகக் கூறி அவருக்கு ஆதரவும் தெரிவித்துள்ளார் தற்போதைய தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் கவிதா ராமு ஐஏஎஸ்.
இந்த நிகழ்வு குறித்து மாவட்ட ஆட்சியரிடம் விரிவாகப் பேசியதாகவும் அவர் கூறியுள்ளார்.
Advertisement
Advertisement
அவர் தனது சமூக ஊடகப் பக்கத்தில் இதுபற்றி பதிவிட்டதாவது:
"சம்பந்தப்பட்ட அதிகாரி இப்போது எழுத்துப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளதால், இந்த விவகாரம் குறித்துப் பேசுவதில் தவறில்லை என்று நான் கருதுகிறேன்.
பாதிக்கப்பட்ட மாவட்ட ஆட்சியர் மற்றும் அவரது கணவர் ஆகிய இருவருக்கும் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்திய காலம் இது.
சமூக ஊடகங்களில் இந்தச் சம்பவம் குறித்து அவரவர் விருப்பத்திற்கேற்ப பல கதைகள், புனையப்பட்ட தகவல்களும் பகிரப்பட்டபோது நிலைமை இன்னும் மோசமானது.
கள்ளக்குறிச்சி மக்கள் பிரதிநிதி அனுப்பிய தகாத வாட்ஸ்ஆப் செய்திகள், அவரது தவறான நடத்தை தொடர்பான இந்தச் சம்பவம் நடந்து சுமார் மூன்று மாதங்கள் ஆகிவிட்டாலும், சமூக ஊடகங்களில் இது குறித்த பரபரப்பு ஏற்பட்ட பின்னரே நம்மில் பலருக்கு இதைப் பற்றித் தெரியவந்தது.
கடந்த நவ. 11-ம் தேதியன்று நான் ஆட்சியரிடம் இதுபற்றி விரிவாகப் பேசியதுடன் அவருக்கு எங்களின் ஆதரவைத் தெரிவித்தேன். இந்த விவகாரம் உயர்நிலை அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
அதேசமயம், சிலர் சமூக ஊடகங்களில் இந்தச் சம்பவத்தை முற்றிலும் திசைதிருப்பும் வகையிலும், எதுவுமே நடக்காதது போலவும் சித்தரித்தது அவருக்கு மிகுந்த மனவேதனையை அளித்தது.
பணியிட மாற்றத்தைக் கோருகிறீர்களா? என்று நான் அவரிடம் கேட்டேன். அதற்கு அவர், தலைமைச் செயலாளரேகூட வேறொரு மாவட்டத்திற்குச் செல்ல பரிசீலிக்குமாறு கூறியதாகவும், ஆனால் தான் கள்ளக்குறிச்சியிலேயே தொடர்ந்து பணியாற்ற விரும்புவதாகவும் அவர் திட்டவட்டமாகக் கூறிவிட்டதாகவும் என்னிடம் தெரிவித்தார்.
என்ன ஒரு துணிச்சல்!
சக அதிகாரிகள் என்ற முறையில் நாங்கள் ஏன் இந்த விவகாரத்தை முன்னரே கையில் எடுக்கவில்லை என்று என்னிடம் கேட்டனர். அவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது இதுதான்- நாங்கள் இந்த விவகாரத்தைக் கையில் எடுக்க விரும்பினோம். ஆனால், பாதிக்கப்பட்ட அதிகாரியின் விருப்பமும் சம்மதமும் இன்றிச் செயல்படுவது சரியாக இருக்காது என்று கருதினோம். அவரது கண்ணியத்திற்கும் விருப்பத்திற்குமே நாங்கள் முதலிடம் அளித்தோம்.
இத்தகைய சூழலில் ஒரு பெண் எவ்வளவு மன உளைச்சலுக்கு ஆளாவார் என்பதை என்னால் உணர முடிகிறது. இந்த இக்கட்டான காலகட்டத்தைக் கடந்து வந்து, அவர் மன அமைதியையும் வலிமையையும் மீண்டும் பெறுவார் என்று நான் மனதார நம்புகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
ஆனால் கவிதா ராமு ஐஏஎஸ் இந்த பதிவை இட்ட சில நிமிடங்களிலேயே பதிவை நீக்கிவிட்டார். தற்போது கவிதா ராமு ஐஏஎஸ் பற்றியும் சமூக ஊடகங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
மாவட்ட ஆட்சியர்களுக்கே இந்த நிலைமை என்றால் சாமானிய பெண்களுக்கு...?