முகப்பு

செந்தில் பாலாஜி மீதான முறைகேடு வழக்கு: குற்றவியல் நடவடிக்கைகளில் அரசியல் தலையீடு; உச்சநீதிமன்ற நீதிபதிகள்

குற்றவியல் வழக்குகளில் ஆட்சியில் உள்ளவர்கள் செல்வாக்கு செலுத்துவதாகக் கூறப்படுவது குறித்து உச்சநீதிமன்றம் புதன்கிழமை கவலை தெரிவித்தது.

26 நவம்பர் 2026, 4:48 am
செந்தில் பாலாஜி மீதான முறைகேடு வழக்கு: குற்றவியல் நடவடிக்கைகளில் அரசியல் தலையீடு; உச்சநீதிமன்ற நீதிபதிகள்
செந்தில் பாலாஜி - கோப்புப் படம்
பகிர்:

குற்றவியல் வழக்குகளில் ஆட்சியில் உள்ளவர்கள் செல்வாக்கு செலுத்துவதாகக் கூறப்படுவது குறித்து உச்சநீதிமன்றம் புதன்கிழமை கவலை தெரிவித்தது. ஆட்சிகள் மாறும்போது, குற்றவியல் நடவடிக்கைகளின் போக்கும் பெரும்பாலும் மாறுகிறது என்றும் நீதிமன்றம் கூறியது.

தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய முறைகேடு வழக்கு மீது புதன்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி, வி. மோகனா அடங்கிய அமர்வு இந்த கருத்துகளைத் தெரிவித்தது.

"இந்த வழக்கு தொடர்பாக உடனடியாக விசாரிக்க வேண்டும்' என்று தமிழகத்தில் ஆளும் தவெக அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞர் ராஜீவ் ஷக்தர் தலைமை நீதிபதி அமர்விடம் கேட்டுக் கொண்டார். அப்போது தலைமை நீதிபதி, "குற்றவியல் நீதி நிர்வாகத்தின் மிக மோசமான அம்சம் என்னவென்றால், அரசியல் நிர்வாகத்தின் தன்மையைப் பொறுத்து குற்றவியல் நடவடிக்கைகளின் போக்கும் மாறுகிறது' என்று கூறினார்.

Advertisement

Advertisement

"ஓர் அரசு காலம் தாழ்த்துகிறது, மற்றோர் அரசு அவசரப்படுகிறது. குற்றவியல் நடவடிக்கைகளில் நாம் கொஞ்சம் நிதானத்தைக் கடைப்பிடிப்போம்' என்று தலைமை நீதிபதியின் கருத்தை நீதிபதி பாக்சியும் பிரதிபலித்தார்.

இந்த விவகாரத்தில் செந்தில் பாலாஜி சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் கபில் சிபல், உச்சநீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்கும்வரை, உள்ளூர் நீதிமன்றம் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று நீதிபதிகளிடம் வலியுறுத்தினார்.

இதைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் நிலுவையில் உள்ள இதர வழக்குகள் குறித்து நீதிபதிகள் வினவியபோது, "அவை குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்வது தொடர்பானவை' என்று வழக்குரைஞர் ராஜீவ் ஷக்தர் தெளிவுபடுத்தினார். அப்போது நீதிபதிகள், "இந்த விஷயத்தை உச்சநீதிமன்றம் பரிசீலிக்கும் முன்பாக, குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க வேண்டாம். "அவர் (செந்தில் பாலாஜி) மீது கடுமையான குற்றச்சாட்டுகள் இருக்கலாம். ஆனால், அவரது தரப்பு விளக்கத்தை கேட்காமலேயே அவரை "குற்றவாளி' ஆக கருதாதீர்கள்' என்று தலைமை நீதிபதி கூறினார்.

இதைத் தொடர்ந்து, இந்த குற்றவியல் வழக்குகள் 2021 மற்றும் 2022-ஆம் ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட நிலையில், 2026-ஆம் ஆண்டில் விசாரிக்கப்படுவதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர். "அரசுத் தரப்பு வழக்குரைஞர்கள் சரியாக மற்றும் நியாயமாக நடப்பார்கள் என எதிர்பார்க்கிறோம். அரசு வழக்குரைஞர்கள் "இப்படித்தான் நடக்க வேண்டும்' என்று அரசியல் தலைமையில் இருப்பவர்களால் தீர்மானிக்கப்படக் கூடாது' என்று தலைமை நீதிபதி குறிப்பிட்டார்.

இந்தக் கருத்துகளை உத்தரவில் சேர்க்க வேண்டாம் என்று நீதிபதிகளை வழக்குரைஞர் ராஜீவ் ஷக்தர் கேட்டுக்கொண்டதுடன், அரசுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

அதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கின் அடுத்த விசாரணையை டிச.11-ஆம் தேதிக்கு ஒத்திவைக்க உத்தரவிட்டனர்.

பின்னணி: தமிழக முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி, 2011-2015 ஆண்டில் நடைபெற்ற அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது, அத்துறையில் வேலை வழங்க பணம் பெற்றதாக, பின்னர் ஆட்சிக்கு வந்த திமுக ஆட்சியில் குற்றஞ்சாட்டப்பட்டு, தற்போது விசாரணை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கில் •2023-இல் மத்திய அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, 2024-ஆம் ஆண்டு செப்டம்பரில் உச்சநீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.