இந்த வாரம் கலாரசிகன் - 25-10-2026
மத்திய அமைச்சருமான சசி தரூர் தலைமையிலான 'ராம்நாத் கோயங்கா சாகித்ய சம்மான்' என்கிற இலக்கிய விருதுத் தேர்வுக் குழுவின் கூட்டத்தில் அதன் உறுப்பினர் என்கிற முறையில் கலந்து கொள்ள தில்லி சென்றிருந்தேன்.
நாடாளுமன்ற உறுப்பினரும், மேனாள் மத்திய அமைச்சருமான சசி தரூர் தலைமையிலான "ராம்நாத் கோயங்கா சாகித்ய சம்மான்' என்கிற இலக்கிய விருதுத் தேர்வுக் குழுவின் கூட்டத்தில் அதன் உறுப்பினர் என்கிற முறையில் கலந்து கொள்ள தில்லி சென்றிருந்தேன். அண்மையில் நீதிபதியாகப் பதவி ஏற்றிருக்கும் உச்சநீதிமன்ற நீதிபதி வி. மோகனாவை மரியாதை நிமித்தம் சந்திக்கப் போனேன்.
அங்கே வரவேற்பறையில் தில்லித் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் வழக்குரைஞர் முனைவர் ஜி. சிவபால முருகன், துணைத் தலைவர் வழக்குரைஞர் செல்வராஜ் மகேந்திரன், பொதுச் செயலாளர் திருமதி சத்யா அசோகன் உள்ளிட்டோர் நீதிபதி மோகனாவை சந்திக்கக் காத்திருந்தனர். இன்று மாலையில் தில்லித் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் நீதிபதி மோகனாவுக்குப் பாராட்டு விழா நடத்தப்படுவதாகவும், அதற்கு முறைப்படி அழைப்பதற்கு வந்திருப்பதாகவும் சொன்னார்கள்.
நீதிபதி மோகனாவுக்கு நடத்தப்படும் பாராட்டு விழா நிகழ்வுக்கு சென்னையில் இருந்து மேனாள் நீதிபதிகள் கலிஃபுல்லா, கே.என்.பாட்ஷா உள்ளிட்டோர் வருவதாகத் தெரிவித்தார் பொதுச் செயலாளர் திருமதி சத்யா அசோகன். நான் உடனடியாகச் சென்னை திரும்ப வேண்டிய கட்டாயம் இருப்பதால், அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இயலவில்லை.
Advertisement
Advertisement
பொள்ளாச்சியில் பிறந்து, கோவை சட்டக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்று, பிரபல வழக்குரைஞர் பஞ்சாபகேசனின் அலுவலகத்தில் வழக்குரைஞர் தொழிலுக்குத் தயாரானவர் வி.மோகனா. அவர் தில்லிக்குக் குடிபெயர்ந்ததும், பின்னாளில் உச்சநீதிமன்ற நீதிபதியான இந்து மல்ஹோத்ரா, மூத்த வழக்குரைஞர் சி.எஸ். வைத்தியநாதன் ஆகியோரின் அலுவலகத்தில் இணைந்து வழக்காடித் தன்னை நிலைநிறுத்திக் கொண்டதும் அடுத்தகட்டம்.
வழக்குரைஞராக இருந்து நேரடியாக உச்சநீதிமன்றத்தின் நீதிபதியானவர்கள் இதுவரையில் நீதிபதி மோகனா உள்பட 11 பேர் மட்டுமே. அதேபோல, உச்சநீதிமன்ற நீதிபதியாக உயர்ந்த பெண்களின் எண்ணிக்கையும் நீதிபதி மோகனாவுடன் சேர்த்து 12 மட்டுமே. ஆரம்பகால தில்லி வழக்குரைஞர் பணியின்போது, அவர் தனது வழிகாட்டியாக ஏற்றுக்கொண்ட நீதிபதி இந்து மல்ஹோத்ராவும் இவரைப் போலவே, நேரடியாக நீதிபதியானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
உச்சநீதிமன்றத்தைப் பொருத்தவரை, முதல் பெண் நீதிபதியான நீதிபதி ஃபாத்திமா பீவியில் தொடங்கி இதுவரையில் 12 பெண் நீதிபதிகள் இருந்தாலும், இதுவரை ஒருவர்கூடத் தலைமை நீதிபதியாக உயரவில்லை.
அந்தப் பெருமை நீதிபதி பி.வி. நாகரத்னாவுக்குக் காத்திருக்கிறது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த, பொள்ளாச்சியில் பிறந்து வளர்ந்த ஒருவர் உச்சநீதிமன்ற நீதிபதி பதவியில் அமர்ந்திருப்பது ஒட்டுமொத்தத் தமிழகமும் பெருமிதப்பட வேண்டிய நிகழ்வு. அவருக்கு தில்லித் தமிழ்ச்சங்கம் பாராட்டு விழா நடத்தி கெüரவிப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
தனது கணவர் பத்மநாபனையும், மகன் கார்த்திக் சுந்தரையும் வழக்கமான மோகனப் புன்னகையுடன் அறிமுகம் செய்தபோது அவரது முகத்தில் தெரிந்த பெருமிதத்தில் இருந்து, அவரது வெற்றிக்குப் பின்னால் அவர்களது ஒத்துழைப்பும், ஆதரவும் இருப்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை வழக்குரைஞர்கள் சங்கத்தில் மகாகவி பாரதியார் குறித்து "பேசாப் பொருளைப் பேசத் துணிந்தேன்' என்ற தலைப்பில் உரையாற்றச் சென்றது குறித்து ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தேன். அந்த நிகழ்ச்சிக்கு என்னை அழைப்பதற்கு வந்தபோது, மூத்த வழக்குரைஞர் அருண் வடிவேல் என்கிற சேகர் கையொப்பமிட்டு அன்பளிப்பாகத் தந்த புத்தகம் நா. கண்ணன் எழுதிய "உலகக் குடிமகன்'.
"தினமணி' நடத்திய இலக்கியத் திருவிழாவில் கலந்துகொள்ள வந்தபோது, முனைவர் நா. கண்ணன் எனக்கு அறிமுகமானார். அப்போது ஜெர்மனியில் இருந்த முனைவர் நா. கண்ணனின் பரந்துபட்ட அறிவும், உலகம் சுற்றிவந்த அனுபவமும் என்னை மலைப்பில் ஆழ்த்தின. அவர் எழுதிய புத்தகம் என்பதால், படித்தே தீரவேண்டும் என்று பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். இந்த வாரம் தில்லிப் பயணத்தின்போது எனக்குத் துணையாக இருந்தது அவரது "உலகக் குடிமகன்'.
செட்டி நாட்டின் நாட்டரசன்கோட்டையைச் சேர்ந்த நா. கண்ணன் உலகக் குடிமகனாக உயர்ந்த வரலாறு என்பதைவிட, அவர் உலகைச் சுற்றிவந்து சேகரித்த அனுபவங்களின் தொகுப்பு என்றுதான் இந்தப் புத்தகத்தைக் கூற வேண்டும். முகப்பு அட்டையில் குறிப்பிட்டிருப்பதுபோல, ஒரு கிராமத்து மனிதன் உலகக் குடிமகனாக மாறிய கதை இது. அறிவியல் வளர்ச்சியை விவரிக்கும் முக்கியமான சரிதம்.
தன்னை மூன்றாவது மனிதனாகப் பாவித்து தனது வாழ்க்கைப் பயணத்தையும், அனுபவங்களையும் பகிர்ந்துகொள்ள முனைந்திருக்கிறார் முனைவர் கண்ணன். பிறந்த காலம், அதன் சூழல், சமூகம் ஏற்படுத்தித் தந்த வாய்ப்புகள், விடாமுயற்சி, தன்னம்பிக்கை-இவையெல்லாம்தான் இந்தியனின், தமிழனின் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது என்பதை தனது வாழ்க்கைப் பயணத்தின் மூலம் விளக்கியிருக்கிறார்.
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றதில் தொடங்குகிறது அவரது பெரும் பயணம். முதல் 5 ஆண்டுகள் ஜப்பானில், அடுத்த 16 ஆண்டுகள் ஜெர்மனியில், பிறகு 8 ஆண்டுகள் கொரியாவில், அதைத் தொடர்ந்து 7 ஆண்டுகள் மலேசியாவில் என்று கழித்த அவரது வாழ்க்கையில் அவர் போகாத நாடில்லை, சுற்றிவராத கண்டங்கள் இல்லை, கடக்காத சமுத்திரங்கள் இல்லை.
சூழல் வேதியியல், சூழல் நச்சு
யியல் துறைகளில் உலகின் ஆகச்சிறந்த முதல் பத்து பேராசிரியர்
களில் ஒருவராக இருக்கும் முனைவர்
நா. கண்ணன், கீழடி திருபுவனம் கிராமத்தில் தமிழ்வழிக் கல்வி பயின்றவர் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. "அமெரிக்கா செல்லும் ஆசை' கட்டுரை
யில் தொடங்கி, "உலகின் இதயம்
இந்தியா' என்று முடியும் 36 கட்டுரை
களின் தொகுப்புதான் "உலகக் குடி
மகன்'. படித்து முடித்தபோது ஏற்பட்ட பிரமிப்பு எனக்கு இன்னும் அடங்கியபாடில்லை.
முனைவர் நா. கண்ணனின் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறது, இந்தப்பழம் பாடல் (பின்குறிப்பு- கவிஞர் பெயர் அமில மழையில் அழிந்துவிட்டதாக நம்பப்படுகிறது.)
அம்புலிக்கும் அதையடுத்த
அண்டைவீட்டுக் கோள்களுக்கும்
அடுக்கடுக்காய் விண்கலன்கள்
அவசரமாய் அனுப்புவதேன்?
நம்ம பூமி கெட்டுப்போயி
ரொம்ப காலம் ஆச்சு தம்பி
அம்புலியையும் கோள்களையும்
அடுத்தாற்போல் கெடுக்கத்தான்
அடுக்கடுக்காய் விண்கலன்கள்
அவசரமாய் அனுப்புகின்றோம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.