FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

இந்த வாரம் கலாரசிகன் - 11-10-2026

அகவை நூறை எய்திய மூத்த வழக்குரைஞர் கே. பராசரனின் திருப்பாதம் தொட்டுக் கொள்ள தெண்டனிடுகின்றேன்.

11 அக்டோபர் 2026, 5:44 pm IST
பகிர்:

அகவை நூறை எய்திய மூத்த வழக்குரைஞர் கே. பராசரனின் திருப்பாதம் தொட்டுக் கொள்ள தெண்டனிடுகின்றேன். நூறாண்டு வாழ்வது பெரிதல்ல... நல்ல நினைவாற்றலோடும், உடல் ஆரோக்கியத்தோடும் இருப்பதும்கூடப் பெரிதல்ல...

இம்மியும் அப்பழுக்கற்ற, ஒழுக்கமான வாழ்க்கை வாழ்வது, தனது தொழில் ரீதியிலான எதிரிகளும் மதிக்கத்தக்க அளவில் வாழ்ந்து கொண்டிருப்பதுதான் என்னை வழக்குரைஞர் பராசரனின் திசை நோக்கித் தாள் தொட்டு வணங்கச் செய்கிறது.

அவரது வாதத் திறமை குறித்தும் சட்டப் புலமை குறித்தும் பதிவு செய்யப் பக்கங்கள் போதாது, புத்தகங்கள் தேவைப்படும். தமிழ், சம்ஸ்கிருதம், ஆங்கிலம் என்று அவரது பன்மொழிப் புலமையைப் பார்த்து மலைத்துப் போனவர்கள் ஏராளம். சட்டப் புத்தகங்களின் மூலை முடுக்குகளில் ஒளிந்து கொண்டிருக்கும் கண்ணில்படாத முக்கியமான தீர்ப்புகளை அவர் தனது வாதத்தில் மேற்கோள் காட்டும்போது, நிலைகுலைந்து போவார்கள் எதிர்த்தரப்பு வழக்குரைஞர்கள்.

Advertisement

Advertisement

தமிழக அரசின் தலைமை வழக்குரைஞராகவும் (அட்வகேட் ஜெனரல்), மத்திய அரசின் தலைமை வழக்குரைஞராகவும் (சொலிசிட்டர் ஜெனரல்), இந்தியாவின் தலைமை சட்ட ஆலோசகராகவும் (அட்டர்னி ஜெனரல்) இருந்த பெருமைக்குரியவர் பெரியவர் பராசரன். சொலிசிட்டர் ஜெனரல் என்பது ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் அரசின் தலைமை வழக்குரைஞர் பதவி; அட்டர்னி ஜெனரல் என்பது ஒட்டுமொத்த இந்தியாவின் சட்ட ஆலோசகர் என்கிற அரசியல் சாசனப் பதவி. இரண்டுக்குமான வேறுபாட்டை எனக்கு எடுத்துரைத்து விளக்கியவர் அவர்தான்.

ஜனதா ஆட்சி கவிழ்ந்து, திருமதி இந்திரா காந்தி மீண்டும் பிரதமராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நேரமது. சொலிசிட்டர் ஜெனரலாக பராசரன் இந்திரா காந்தி அரசால் நியமிக்கப்பட்டிருந்தார். அவசரநிலைச் சட்டத்தைத் துணிந்து எதிர்த்து, ஜனதா கட்சி உருவாகக் காரணமாக இருந்த ராம்நாத் கோயங்காவையும், இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தையும் பழிவாங்க நினைத்தது இந்திரா அரசு. சில பொய்க் காரணங்களைக் கூறி, தில்லியில் உள்ள இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை கட்டடத்தை தரைமட்டமாக்க விழைந்தது.

அது சட்டப்படி செல்லாது என்பதால், அதை அங்கீகரிக்க சொலிசிட்டர் ஜெனரல் என்கிற முறையில் மறுத்துவிட்டார் பராசரன். தான் வற்புறுத்தப்பட்டால் பதவி விலகுவதைத் தவிர வழியில்லை என்று சொன்னபோது, பிரதமரின் ஆலோசகர்கள் அதிர்ந்தனர். பிரதமர் இந்திரா காந்தியிடம் செய்தி போனபோது, அவர் கோபப்படவில்லை; மாறாக, அடுத்த இரண்டு ஆண்டுகளில்

பராசரன் திருமதி இந்திரா காந்தியால் அட்டர்னி ஜெனரலாக நியமிக்கப்பட்டார். அடுத்த ஆறு ஆண்டுகள், ராஜீவ் காந்தி ஆட்சி முடியும்வரை அவர் அந்தப் பதவியில் தொடர்ந்தார்.

இன்னொரு சம்பவம்- தனது வழக்குகள் தொடர்பாக மூத்த வழக்குரைஞர் பராசரனின் ஆலோசனைகளைக் கோரினார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. ''தன்னை போயஸ் கார்டன் வீட்டில் சந்திக்க முடியுமா?'' என்கிற ஜெயலலிதாவின் வேண்டுகோளுக்கு, பராசரன் சொன்ன பதில்-''ஜெயலலிதாவை சந்திக்கப் பராசரன் தயாராக இருக்கிறேன். ஆனால், ஒரு கட்சிக்காரராக சட்ட ஆலோசனை பெற விரும்பினால், அவர்தான் என்னை வந்து சந்திக்க வேண்டும்''. ஜெயலலிதா அவரிடம் சட்ட ஆலோசனை பெறவில்லை.

மேலே குறிப்பிட்ட இரண்டு நிகழ்வுகளைவிட, பெரியவர் பராசரனின் பேராளுமையை விதந்தோத வேறு என்ன இருந்துவிட முடியும்?

சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை வழக்குரைஞர்கள் சங்கத்தின் தமிழ் இலக்கிய மன்றத்தில் 'பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்' என்ற தலைப்பில் மகாகவி பாரதியார் குறித்து உரையாற்ற நான் கடந்த 17-ஆம் தேதி சென்றிருந்தேன். அப்போது, எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது க.கைலாசபதியின் 'ஒப்பியல் இலக்கியம்' நூல்.

மலேசியாவின் கோலாலம்பூரில் பிறந்த, யாழ்ப்பாணத் தமிழரான க. கைலாசபதியைத் தெரியாமலோ, அவரது படைப்புகளைப் படித்திராமலோ எந்தவொரு தமிழிலக்கிய ஆளுமையும் இருந்துவிட முடியாது. 1974-இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் உருவானபோது, அதன் தலைவராகவும், பேராசிரியராகவும் இருந்தவர்.

தமிழ் இலக்கிய ஆய்வில் 'ஒப்பியல் இலக்கியம்' குறித்து அறிவியல் கண்ணோட்டத்தில், புதிய கோணத்தில் ஆய்வுகளை நடத்தியவர் கைலாசபதி. கிரேக்கம், சுமேரியா, வட மரபு எனப் பரந்த அளவில் விரிந்து செல்லும் இவரது ஆய்வுகள் தமிழ் ஒப்பியல் ஆய்வுக்கு முன்னோடி என்றுதான் கூறவேண்டும்.

கைலாசபதி பத்திரிகைகளுக்கு அவ்வப்போது எழுதிய பொதுப் பண்பிலான பதினோரு கட்டுரைகளின் தொகுப்புதான் 'ஒப்பியல் இலக்கியம்' என்கிற புத்தகம். சங்க இலக்கியத்தில் இருந்து, பாரதியின் பாடல்கள்வரை அவரது கண்ணோட்டம் பாய்ந்திருப்பதைப் பார்க்க முடிகிறது. தமிழ் ஒப்பியல் ஆய்வில், வ.வே.சு. ஐயரை முன்னோடி எனக் குறிப்பிடும் கைலாசபதி, ''தமிழ் ஒப்பியல் ஆய்வு மேற்கொள்ளும் எவரும் என்னைப் போலவே ஐயருக்குக் கடமைப் பட்டவர்கள்'' என்கிறார்.

ஒப்பியல் தத்துவங்களில் தொடங்கி, சுப்பிரமணிய பாரதியின் படைப்புகள் குறித்த ஒப்பியல் பார்வை வரை, ஒவ்வொரு கட்டுரையும் காலம் கடந்து பேசப்படும் புதிய பார்வைகள்.

அரை நூற்றாண்டுக்கு முன்பு, எப்போது கோடை விடுமுறை வரும், கிராமத்தில் உள்ள தாத்தா- பாட்டி வீட்டுக்குப் போகலாம் என்று குழந்தைகள் காத்திருப்பார்கள். வீட்டிலுள்ள ஆடு, மாடுகள்; கோழிக் குஞ்சுகள்; வீட்டைச் சுற்றியுள்ள தோட்டம்-துரவுகள்; ஊருக்கு வெளியே ஓடும் ஆறு, அதில் நீந்திக் குளிக்கும் குதூகலம் என்று குழந்தைகளை ஈர்க்க எத்தனையோ இருந்தன.

இப்போது, கிராமங்களுக்குப் போவதென்றால் பெற்ற குழந்தைகளுக்கே வேண்டா வெறுப்பாக இருக்கிறது எனும்போது, குழந்தைகளைப் பற்றிச் சொல்லவா வேண்டும்?... ஏ.சி. இல்லை; தனியாக பெட்ரூம் இல்லை; டைல்ஸ் போட்ட கழிப்பறைகள் இல்லை என்று முகம் சுழிக்க எத்தனை எத்தனையோ காரணங்கள்.

ஆனால், தாத்தா- பாட்டிகளின் எதிர்பார்ப்பெல்லாம், எப்போது கோடை விடுமுறை வரும், பெயரன்- பேத்திகளுடன் தங்களது குழந்தைகள் வருவார்கள் என்கிற ஏக்கத்தில் நகர்கிறது. அதைப் பிரதிபலிக்கிறது 'தினமணி'யின் சங்கரன்கோவில் நிருபர் மு. ஈஸ்வரமூர்த்தியின் இந்தத்

துளிப்பா...

தாத்தா பாட்டிகளுக்கு

ஒரே கொண்டாட்டந்தான்.

கோடை விடுமுறை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments