FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

இந்த வாரம் கலாரசிகன் - 01-11-2026

கலைமகள் பருவ இதழின் ஆசிரியர் கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியனுக்கு உடல்நலம் சரியில்லை என்கிற தகவலைக் கேட்டதும் நான் அதிர்ந்தேன்.

1 நவம்பர் 2026, 1:31 pm
பகிர்:

கலைமகள் பருவ இதழின் ஆசிரியர் கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியனுக்கு உடல்நலம் சரியில்லை என்கிற தகவலைக் கேட்டதும் நான் அதிர்ந்தேன். விவரம் கேள்விப்பட்ட பிறகு நேரில் சென்று நலம் விசாரிக்காமல் இருப்பது எப்படி?

நடக்கும்போது மூச்சிரைக்கத் தொடங்கி இருக்கிறது. உடனடியாக மருத்துவரைச் சென்று பார்த்ததால் மாரடைப்பு (ஹார்ட் அட்டாக்) ஏற்படாமல் தப்பித்தார் என்றுதான் சொல்ல வேண்டும். ரத்தக்குழாயில் ஐந்து அடைப்புகள் இருந்திருக்கின்றன. உடனடியாக அறுவை சிகிச்சை செய்தாக வேண்டும் என்கிற பரிந்துரையுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அக்னி பரீட்சையைக் கடந்து வந்ததுபோல, மிகவும் ஆபத்தான இதய அறுவை சிகிச்சையை எதிர்கொண்டு, நல்லபடியாக அவர் குணமாகியிருப்பது, முன்னோர் செய்த புண்ணியம் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. என்னதான் மருத்துவத் தொழில்நுட்பம் மேம்பட்டிருந்தாலும், இதய அறுவை சிகிச்சை என்பது சாதாரணமாகக் கடந்துபோகக் கூடியது அல்லவே...

Advertisement

Advertisement

நானும் கீழாம்பூரும் இன்றைய தென்காசி, அன்றைய நெல்லை மாவட்டம் ஆழ்வார்குறிச்சி ஸ்ரீ பரமகல்யாணி கல்லூரியில் படித்தவர்கள். எனக்குப் பின்னால் சில ஆண்டுகளுக்குப் பிறகு அவர் எங்கள் கல்லூரியில் பயின்றவர்.

ஆழ்வார்குறிச்சியை அடுத்த கீழாம்பூருக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு.

'தினமணி' நாளிதழின் நீண்டகால ஆசிரியர் பெரியவர் ஏ.என். சிவராமன் கீழாம்பூரைச் சேர்ந்தவர். சங்கர சுப்பிரமணியனுக்கு உறவினர். கீழாம்பூரின் மனைவி, பெரியவர் ஏ.என். சிவராமனின் சகோதரர் பெயர்த்தி.

என்னுடன் கல்லூரியில் படித்த நண்பர்கள் அனந்தராம கிருஷ்ணன், சைலப்பன் இருவருமே கீழாம்பூரைச் சேர்ந்தவர்கள் என்பதால், நான் அடிக்கடி அங்கே போவதுண்டு.

விக்கிரமசிங்கபுரத்திலிருந்து ஆழ்வார்குறிச்சிக்கு கீழாம்பூர் வழியாகத்தான் பயணிக்க வேண்டும் என்பதால், அந்த நண்பர்களுடனான நெருக்கம் அதிகரித்தது. அவர்கள் இருவருமே கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியனுக்கும் நெருங்கிய நண்பர்கள்.

சென்னையில் குடியேறி, 'கலைமகள்' ஆசிரியரான நிலையிலும், சொந்த கிராமத்துடனான தனது நெருக்கத்தையும், ஆழ்வார்குறிச்சியுடனான தனது தொடர்பையும் 'கீழாம்பூர்' விட்டுவிடவில்லை. பாபநாசம், கல்லிடைக்குறிச்சி, கீழாம்பூர், ஆழ்வார்குறிச்சி, கடையம் உள்ளிட்ட பகுதிகளில் மாணவப் பருவத்தில் சைக்கிள் மிதித்துச் சுற்றிவந்த மகிழ்ச்சியான இளமைக் காலங்களை, கீழாம்பூரைச் சந்திக்கும் போதெல்லாம் நினைத்துக் கொள்வேன்.

அறுவைச் சிகிச்சையால் ஏற்பட்ட பலவீனத்தில் இருந்து ஓரளவுக்குத் தேறி விட்டிருக்கிறார் கீழாம்பூர். தனது பெயரில் பருவ இதழ் நடத்தும் ஒருவரைக் கைவிடாமல் 'கலைமகள்'

அவரைக் காப்பாற்றி இருக்கிறாள் என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டேன். விரைவில் பூரண குணமடைந்து, முன்புபோல இலக்கிய மேடைகளில் வலம்வர வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொண்டேன்.

நாங்கள் அளவளாவிக் கொண்டிருந்தபோது, எங்கள் பேச்சு 'தினமணி' நிறுவன ஆசிரியர் டி. எஸ். சொக்கலிங்கம் குறித்தும், நீண்டநாள் ஆசிரியர் ஏ.என். சிவராமன் குறித்தும் திரும்பியது. தென்காசியில் டி.எஸ். சொக்கலிங்கத்துக்கும், கீழாம்பூரில் ஏ.என்.

சிவராமனுக்கும் குறைந்தபட்சம் மார்பளவு வெண்கலச் சிலை அனைவரும் கூடும் இடத்தில் வைக்கப்பட வேண்டும் என்கிற ஆதங்கத்தைப் பகிர்ந்து கொண்டோம். மூத்த வழக்குரைஞர் டி.எஸ்.ஆர். வேங்கடரமணாவும் என்னைப் பார்க்கும்போதெல்லாம் இந்த ஆதங்கத்தை வெளிப்படுத்துவார்.

'எண்ணிய முடிதல் வேண்டும்;

நல்லவே எண்ணல் வேண்டும்'

என்பார் மகாகவி பாரதி. எங்கள்

எண்ணம் விரைவில் ஈடேறுவதாக!

சென்னைப் பல்கலைக்கழகத்தின் வள்ளலார் பிறந்தநாள் கருத்தரங்கில் கலந்துகொள்ள சென்றபோது, முனைவர் நல்லூர் சா. சரவணன் எழுதிய 'ஆலயம்: வழிபாடு' என்கிற நூலை அன்பளிப்பாகத் தந்தார். காசி இந்து பல்கலைக்கழகம், சென்னை விவேகானந்தா கல்லூரி ஆகியவற்றில் பணியாற்றிய நல்லூர் சரவணன், இப்போது சென்னை பல்கலைக்கழகத்தின் சைவ சித்தாந்தத் துறையில் பேராசிரியராகவும் துறைத் தலைவராகவும் இருக்கிறார்.

சென்னை சைவ சித்தாந்தப் பெருமன்றத்தின் தலைவராகவும் இருப்பவர் முனைவர் சா. சரவணன். 1965-ஆம் ஆண்டு ஞானியார் அடிகளால் தோற்றுவிக்கப்பட்ட 'சைவ சித்தாந்த மகா சமாஜம்', 1982-இல் 'சைவ சித்தாந்தப் பெருமன்றம்' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. சைவ சித்தாந்தத்தின் வளர்ச்சிக்கு, சமயத்தையும் சாத்திரத்தையும் பரப்புவதுதான் இந்தப் பெருமன்றத்தின் நோக்கமும், செயல்பாடுகளும்.

இனி நாம் முனைவர் சரவணனின் 'ஆலயம்: வழிபாடு' புத்தகத்துக்கு வருவோம்.

சைவத் திருக்கோயில்களின் அன்றாட பூஜை, புனஸ்காரங்களின் முன்னோடிகள் என்று கருதப்படும் சிவாச்சாரியார் பலரிடம் இருந்து, ஆகம வழிபாட்டு முறைகளுக்கு ஏற்ப நடத்தப்படும் நித்திய பூஜைகள் குறித்த முக்கியமான கட்டுரைகளைத் தாங்கி வருகிறது இந்த நூல்.

இதில் இடம்பெற்றிருக்கும் ஒவ்வொரு கட்டுரையும் வருங்கால சந்ததியினருக்கு வழிகாட்டியாக அமையும் தன்மையிலானவை.

'சிவாலய வழிபாட்டின் நுட்பங்கள்' குறித்து சுவாமிநாத சிவாச்சாரியார், 'ஆலய தத்துவ விளக்கம்' குறித்து அச்சுவேலி குமாரசாமி குருக்கள், 'ஆலய -நகர அமைப்புகள்' குறித்து திருவாடானை சிவஸ்ரீ ஐயாமணி சிவம், 'கும்பாபிடேகம் பெருஞ்சாந்தி' குறித்து இலங்கை கைலாசநாதக் குருக்கள், 'நித்திய பூஜையும் அதன் தத்துவமும்' குறித்து தருமபுரம் சுவாமிநாத சிவாச்சாரியார், 'கோயில் பூஜை முறைகள்' குறித்து மதுரை கணேச பட்டர், 'சிவலிங்க வழிபாடு' குறித்து வித்வான் முத்துசுவாமி பிள்ளை, 'சடங்குகளும் இறை அனுபவமும்' குறித்து பா. புகழேந்தி உள்ளிட்டோர் எழுதி இருக்கும் கட்டுரைகள் அதில் அடங்கும்.

பல்வேறு கும்பாபிஷேக மலர்களிலிருந்தும், ஆன்மிக இதழ்களிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு 'ஆலயம்: வழிபாடு'.

கவிஞர் கோ. வசந்தகுமாரனுக்கு அறிமுகம் தேவையில்லை என்று நினைக்கிறேன்.

இதுவரையில் எட்டு கவிதைத் தொகுப்புகள் வெளிக்கொணர்ந்திருக்கும் கவிஞர்கோ.வசந்தகுமாரன் தேசிய அளவில் கவனம் ஈர்த்த தமிழ்க் கவிஞர். அவரது 'பியானோ மீது கல்லெறிந்தாலும் இசை பிறக்கும்' தொகுப்பில் இடம் பெறுகிறது இந்தக் கவிதை.

புகைப்படக் கலைஞனிடம்

காட்டுவதற்கென்றே

பிரத்யேக முகம் ஒன்றை

வைத்திருக்கிறார்கள்

மனிதர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments