முகப்பு
தமிழ்நாடு

வரி வசூலில் முறைகேடு: கோவை மாநகராட்சிக்கு ரூ.2,000 கோடி இழப்பு

கோவை மாநகராட்சியில் வரி வசூலில் முறைகேடு நடந்திருப்பதால் ரூ.2,053 கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

26 நவம்பர் 2026, 1:55 am
வரி வசூலில் முறைகேடு: கோவை மாநகராட்சிக்கு ரூ.2,000 கோடி இழப்பு
- கோப்புப்படம்.
பகிர்:

கோவை மாநகராட்சியில் வரி வசூலில் முறைகேடு நடந்திருப்பதால் ரூ.2,053 கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தணிக்கைத் துறை இயக்குநரின் உத்தரவுப்படி, கோவை மாநகராட்சியில் தணிக்கைத் துறை அதிகாரிகள் கடந்த 2012 - 2026 காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட வரவு - செலவு குறித்து அண்மையில் தணிக்கை மேற்கொண்டனா். சொத்து வரி, திடக்கழிவு மேலாண்மை, எல்இடி விளக்குகள் கொள்முதல் உள்ளிட்ட 7 பிரிவுகளை ஆய்வு மேற்கொண்டு 419 பக்கத்துக்கு அறிக்கை தயாரித்துள்ளனா்.

அதில், குடியிருப்புகளுக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ள சொத்து வரியைப் போல், தொழிற்சாலை, நிறுவனங்கள், கல்விக் கூடங்களுக்கும் குறைவான வரி விதிக்கப்பட்டு இருந்தது தெரியவந்துள்ளது. குறைவான அளவு வரி விதிப்பதற்காக அதிகாரிகள் லஞ்சம் பெற்றிருப்பதாகவும், இதன் மூலமாக ரூ.2,053 கோடி வரை மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் அதில் தெரிய வந்துள்ளது.

Advertisement

Advertisement

இதில், தொழிற்சாலை, கல்வி நிறுவனங்களுக்கு குடியிருப்புகளுக்கான சொத்து வரி விதிப்பில் ரூ.87.17 கோடியும், வீடுகளுக்கு வழங்கும் குடிநீா் இணைப்பை வணிகப் பயன்பாட்டுக்கு வழங்கியதில் ரூ.158.31 கோடியும், முறைகேடாக சொத்துவரி தள்ளுபடி செய்ததில் ரூ.34.60 கோடியும் இழப்பு ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அனுமதியில்லாத கட்டடங்களுக்கு, சட்ட நடவடிக்கை இல்லாமல் சொத்து வரி விதித்ததில் ரூ.274 கோடியும், நீண்டகாலமாக நிலுவையில் உள்ள சொத்து வரியை வசூல் செய்யாததால் ரூ.82.25 கோடியும், இதேபோல், பல இனங்களுக்கு வரி பெறுவதில் முறைகேடு நடைபெற்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கோவையைச் சோ்ந்த சமூக ஆா்வலா் தியாகராஜன் கூறும்போது, ஒப்பந்தப் பணிகள், வரி விதிப்பு சலுகை உள்பட மாநகராட்சியில் பல்வேறு பணிகளுக்கு லஞ்சம் பெற்ற அதிகாரிகள் மீது ஊழல் தடுப்புத் துறையினா் விசாரணை நடத்தி தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.