அகல் விளக்கு பதிப்பக உரிமையாளர் மோகனுக்கு 3 நாள் போலீஸ் காவல்!
அகல் விளக்கு பதிப்பக உரிமையாளர் மோகனுக்கு 3 நாள் போலீஸ் காவல் வழங்கி சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு...

கோவை பெரியார் அறிவுலக புத்தக கொள்முதல் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அகல் விளக்கு பதிப்பக உரிமையாளர் மோகனுக்கு 3 நாள் போலீஸ் காவல் வழங்கி சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை பெரியார் அறிவுலகத்துக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் நடந்த முறைகேடு தொடர்பாக வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், ஏஐ மூலம் தயாரிக்கப்பட்ட புத்தகங்களை நூலங்கங்களுக்கு வழங்கிய அகல் விளக்கு பதிப்பக உரிமையாளர் மோகனை கடந்த நவ. 16 ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் கோடிக்கணக்கான பணம் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் நூலகத் துறை அலுவலர்கள் 5 பேரை பணியிடை நீக்கம் செய்ததுடன் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம், கோயம்புத்தூர் பெரியார் அறிவுலக நூலக அதிகாரிகள் மீது 11 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
Advertisement
Advertisement
அகல் விளக்கு பதிப்பகத்துக்கு அரசுத் தரப்பில் ரூ. 1.74 கோடி வழங்கியிருந்த நிலையில், அந்த நிறுவனத்தின் வங்கிக் கணக்கை லஞ்ச ஒழிப்புத்துறை முடக்கியுள்ளது.
இந்த நிலையில், மோகனை மூன்று நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்கக் கோரி சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை மனு தாக்கல் செய்தது. அவரை உடனே சிறையில் அடைத்ததால் விசாரணை நடத்த போதிய அவகாசம் கிடைக்கவில்லை என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனு சிறப்பு நீதிமன்ற நீதிபதி எல்.எஸ். சத்தியமூர்த்தி முன் இன்று விசாரணைக்கு வந்தது. நீதிமன்றத்தில் மோகன் ஆஜர்படுத்தப்பட்டார்.
விசாரணை முடிவில், லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரின் உத்தரவை ஏற்று, மோகனை 3 நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியளித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.