முகப்பு

தமிழ்நாட்டையே உலுக்கிய சூலூா் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை வழக்கில் இன்று தீா்ப்பு

கார்த்தியை பிடித்துக் கொடுத்ததே நான் தான். அவனது நண்பன் என்று என்னை கூறாதீர்கள் என்று மோகன்ராஜ் கூறியிருப்பது குறித்து..

55 வினாடிகள் முன்பு
தமிழ்நாட்டையே உலுக்கிய சூலூா் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை வழக்கில் இன்று தீா்ப்பு
சூலூர் சிறுமி வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான மோகன்ராஜ் - டிஎன்எஸ்
பகிர்:

கோயம்புத்தூர்: கடந்த மே மாதம் சூலூா் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (நவ. 27) தீா்ப்பு அளிக்கிறது.

இந்த வழக்கின் தீர்ப்பு முதலில் நவம்பர் 16-ஆம் தேதி வழங்கப்படுவதாக இருந்தது. அன்று, இந்த வழக்கின் குற்றவாளிகளான கார்த்திக் (கட்டுமானத் தொழிலாளி மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரர்) மற்றும் அவரது நண்பர் மோகன் ராஜ் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அதன்பிறகு, தீர்ப்பு வழங்கும் தேதியை நீதிபதி நவம்பர் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Advertisement

Advertisement

காவல்துறையின் தகவல்படி, கோவை மாவட்டம், சூலூா் அருகே 10 வயது சிறுமி, கடந்த மே மாதம் 21-ஆம் தேதி தனது வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தபோது காணாமல் போனார். பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சூலூர் காவல்துறையினர் தேடுதல் பணியைத் தொடங்கினர். இறுதியில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாா். கண்ணம்பாளையம் குளம் அருகே உள்ள தென்னந்தோப்புப் பகுதியில் கிடந்த சிறுமி சடலத்தை போலீஸாா் மீட்டு, உடல்கூறாய்வு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கழுத்து நெரிக்கப்பட்டுக் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டது,

இது குறித்த விசாரணையின் போது, ​​சிறுமியின் பக்கத்து வீட்டில் வசித்த கட்டடத் தொழிலாளியான நாகபட்டினத்தைச் சோ்ந்த காா்த்திக் மற்றும் அவரது நண்பா் மோகன்ராஜ் ஆகிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கார்த்திக், சிறுமிக்கு சாக்லேட் வாங்கித் தருவதாகக் கூறி தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாகவும், இதற்கு மோகன் உடந்தையாக இருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

வழக்கின் தீவிரம் கருதி போலீஸாா் 21 நாள்களில் 819 பக்கங்கள் கொண்ட விரிவான குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனா். மேலும், அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளும் முக்கிய ஆதாரங்களாகச் சமா்ப்பிக்கப்பட்டன.

கோவை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஹரிஹரன் முன்னிலையில் கடந்த ஜூன் 24-ஆம் தேதி தொடங்கி (6 மாதங்களாக) நடைபெற்று வந்த இந்த வழக்கில், 68 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, 221 முக்கிய ஆவணங்கள் மற்றும் தடயவியல் சான்றுகள் தாக்கல் செய்யப்பட்டன.

வழக்கின் இறுதிக்கட்டமாக, அரசுத் தரப்பு வழக்குரைறிஞர் 250 பக்கங்கள் கொண்ட எழுத்துப்பூர்வ வாதங்களை நீதிபதி ஹரிஹரனிடம் சமர்ப்பித்தார்.

இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கின் தீா்ப்பு கடந்த நவம்பா் 16-ஆம் தேதி வழங்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த வழக்கில் ஏராளமான ஆவணங்கள், சாட்சிப் பத்திரங்கள் இடம்பெற்றுள்ளதால் அவற்றை முழுமையாகப் பரிசீலிப்பதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுவதாகவும், இதுபோன்ற முக்கிய வழக்குகளில் தீா்ப்புக்கான ஆவணங்களைத் துல்லியமாக பரிசீலிப்பது அவசியமாகும். எனவே, தீா்ப்பை நவம்பா் 27-ஆம் தேதிக்கு (வெள்ளிக்கிழமை) ஒத்திவைத்து நீதிபதி ஹரிஹரன் உத்தரவிட்டாா்.

தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த வழக்கில், சிறப்பு நீதிபதி ஹரிஹரன் தீர்ப்பை வழங்க உள்ள நிலையில், கோயம்புத்தூர் நீதிமன்ற வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கார்த்தியை எனது நண்பன் என்று கூறாதீர்கள்

இதனிடையே, சூலூர் சிறுமி வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான மோகன் ராஜ் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

அப்போது, கடந்த முறை எனக்கும் இந்த வழக்குக்கும் சம்பந்தமில்லை என்று கூறியதை தற்போதும் தெரிவிப்பேன்.

கார்த்தியை பிடித்துக் கொடுத்ததே நான் தான். அவனது நண்பன் என்று என்னை கூறாதீர்கள், நண்பன் என்று கூறுவது தவறு. கார்த்தி என் வீட்டு பெண்களுடன் தொடர்பில் இருந்தான்.

எனக்கு நீதி வேண்டும் என்று நான் போராடி வருகிறேன். செய்தியாளர்கள் நீங்களும் நீதிக்காக போராடுங்கள். என் மீது எந்த குற்றமும் இல்லை; எந்த சம்பந்தமும் இல்லை நீதிபதியிடமும் நான் தெரிவிக்கிறேன் என்று தெரிவித்தார்.

A special court for POCSO cases is set to pronounce its verdict on Friday in the sensational sexual assault and murder of a 10-year-old girl near Sulur here.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.