அரசியலுக்கு வந்த இளைஞர்கள் எப்படியிருக்க வேண்டும்? மனம் திறந்தார் முன்னாள் அமைச்சர் ஹண்டே!
அரசியலுக்கு வந்த இளைஞர்கள் எப்படியிருக்க வேண்டும் என்பது குறித்து மனம் திறந்தார் முன்னாள் அமைச்சர் ஹண்டே.

தற்போது அரசியலுக்கு வந்துள்ள இளைஞர்கள் பக்குவமாகவும், ஊழலற்றவர்களாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஹண்டே தலைமைச் செயலகத்தில் தெரிவித்துள்ளார்.
நூறாவது வயதை எட்டியுள்ள முன்னாள் அமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதல்வர் தலைமைச் செயலகத்தில் மரியாதை செய்தார்.
தமிழக அரசியலிலும், சட்டப்பேரவை வரலாற்றிலும் குறிப்பிடத்தக்க இடம்பெற்றவர்களும், தமிழ்நாடு சட்டப் பேரவையின் முன்னாள் உறுப்பினர்களும், முன்னாள் அமைச்சர்களுமான வி.வி. சுவாமிநாதன், பத்மஸ்ரீ டாக்டர் எச்.வி. ஹண்டே ஆகியோர் தற்போது தங்களது நூறாவது வயதை (நூற்றாண்டு) எட்டியுள்ளனர்.
Advertisement
Advertisement
மூத்த அரசியல் ஆளுமைகளான இந்த இருவரையும் போற்றும் விதமாகவும், சட்டப்பேரவை ஜனநாயகத்திற்கும் தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் சமூக வளர்ச்சிக்கும் அவர்கள் ஆற்றிய பங்களிப்புகளையும் நினைவுகூரும் விதமாகவும் தமிழ்நாடு சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், முன்னாள் அமைச்சர்கள் இருவரையும் கௌரவித்தார்.
அவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் பேசியது, சட்டப்பேரவை வரலாற்றில் இருபெரும் மூத்த முன்னாள் அமைச்சர்களுக்கு 100 வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டுள்ளது. முதல்வர் விஜய், சாமிநாதன் மற்றும் ஹண்டே அவர்களுக்கு மரியாதை செலுத்தினார். சட்டப்பேரவை உறுப்பினர்கள் சார்பில் இருவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம்.
முன்னாள் அமைச்சர் ஹண்டே செய்தியாளர் சந்திப்பில் பேசியது, இதே இடத்தில் 22 ஆண்டுகள் எம்எல்ஏவாக இருந்துள்ளேன்.15 ஆண்டுகள் எதிர்க்கட்சியாக, 7 ஆண்டுகள் அமைச்சராக பணியாற்றினேன்.
தற்போது ஆட்சி நன்றாக நடக்கிறது. நான் பாஜகவில் உள்ளேன். நான் தற்போது திருக்குறளை சொல்ல விரும்புகிறேன். "இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்" திருக்குறளை மேற்கோள் காட்டி பேசினார். எதிர்க்கட்சிகளின் கருத்துகள் மூலம் ஆளுங்கட்சி துரிதமாக செயல்பட வேண்டும்.
நிறைய இளைஞர்கள் தற்போது அரசியலுக்கு வந்துள்ளனர். அவர்களுக்கு நான் வழங்கும் அறிவுரை, நன்கு படித்து தெரிந்து கொள்ள வேண்டும். நிறைய விஷங்களை தெரிந்து கொள்ள வேண்டும். ஊழல் அற்றவர்களாக இருக்க வேண்டும். தூய்மையான, பக்குவமான ஒரு அரசியல் வாதியாக இருக்க வேண்டும் என்று கூறினார்.