திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரம்: உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல் குழு நீதிபதிகளுடன் ஸ்தானிக பட்டர்கள் ஆலோசனை
உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல் குழு நீதிபதிகளுடன் ஸ்தானிக பட்டர்கள் ஆலோசனை மேற்கொண்டது தொடர்பாக...

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள 'தீபத்தூண்' கல் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவதற்காக, மதுரை வந்துள்ள உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல் குழு நீதிபதிகளை, திருப்பரங்குன்றம் கோயில் ஸ்தானிக பட்டர்கள் சனிக்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மலை மேல் உள்ள 'தீபத்தூண்' கல் தூணில் கார்த்திகை மகா தீபம் ஏற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவைச் செயல்படுத்துவது மற்றும் திருக்கோயில் நிர்வாகப் பணிகளை மேற்பார்வையிடுவதற்காக ஓய்வுபெற்ற நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் ஆகியோர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது.
இதையடுத்து, ஓய்வுபெற்ற நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் ஆகியோர் சென்னையில் இருந்து விமானம் மூலம் சனிக்கிழமை காலை மதுரை வந்தடைந்தனர்.
Advertisement
Advertisement
விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர்கள் கூறுகையில், "தற்போதுதான் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு நகல் எங்களுக்குக் கிடைக்கப்பெற்றுள்ளது. உத்தரவு நகலை முழுமையாகப் படித்துப் பார்த்த பின்னரே எந்தவொரு தகவலையும் தெரிவிக்க முடியும். இது தொடர்பாக ஆலோசனைக் கூட்டங்கள் நடத்த வாய்ப்பு உள்ளது" என்றனர்.
தொடர்ந்து, மதுரை ரெசிடென்சி ஹோட்டலில் தங்கியுள்ள நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் ஆகியோரை, திருப்பரங்குன்றம் கோயில் ஸ்தானிக பட்டர்களான சுவாமிநாதன், ராஜா பட்டர் மற்றும் செல்லப்பா பட்டர் ஆகியோர் இந்து சமய அறநிலையத் துறை வாகனம் மூலம் அழைத்து வரப்பட்டு சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
உச்சிப் பிள்ளையார் கோயிலில் இருந்து தீபச் சுடரை எடுத்துச் சென்று கல் தூணில் தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மலை முழுவதும் மத்திய பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.