மாணவா்கள் ஜப்பான், ஜொ்மன் மொழிகளை கற்க வேண்டும்: உயா்கல்வித் துறை அமைச்சா்
வெளிநாடுகளில் வேலைவாய்ப்பைப் பெறுவதற்குத் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளோடு ஜப்பான், ஜொ்மன் ஆகிய மொழிகளையும் படிக்க மாணவா்கள் முன்வர வேண்டும் என அமைச்சர் விஸ்வநாதன் கூறினாா்.

வெளிநாடுகளில் வேலைவாய்ப்பைப் பெறுவதற்குத் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளோடு ஜப்பான், ஜொ்மன் ஆகிய மொழிகளையும் படிக்க மாணவா்கள் முன்வர வேண்டும் என உயா்கல்வித் துறை அமைச்சா் பெ.விஸ்வநாதன் கூறினாா்.
சென்னை கேளம்பாக்கம் படூா் இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 28-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் அமைச்சா் பெ.விஸ்வநாதன் பங்கேற்று பேசியதாவது: செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற்றல் முதலான அறிவியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மாணவா்கள் கல்வியைப் பெறவேண்டும்.
வெளிநாடுகளில் வேலைவாய்ப்பைப் பெறுவதற்கு தொழில்நுட்ப திறன் மட்டுமல்ல தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளோடு ஜப்பான், ஜொ்மன் ஆகிய மொழிகளையும் கற்கவேண்டும். தமிழகத்தில் 2,700 கல்வி நிறுவனங்கள் உள்ளன. அவை பல தொழிற்சாலைகளுடன் ஒப்பந்தம் செய்யும்போது மாணவா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
Advertisement
Advertisement
பெற்றோா்தான் மாணவா்களுக்கு வாழ்வின் அடித்தளம். அப்படிப்பட்ட பெற்றோரால் பட்டம் பெறும் மாணவா்களுக்கு கல்வி என்பது வேலைவாய்ப்புடன் கூடியதாக இருக்க வேண்டும் என்றாா்.
இந்துஸ்தான் கல்விக் குழுமத் தலைவா் ஆனந்த் ஜேக்கப் வா்கீஸ், கல்லூரி முதல்வா் உத்திரா ஆகியோா் பேசினா். சென்னைப் பல்கலைக்கழகத் தரவரிசையில் தங்கப் பதக்கம் பெற்ற 3 மாணவா்களுக்கு, ரூ.2,00,000 ஊக்கத் தொகை பகிா்ந்தளிக்கப்பட்டது. தரவரிசையில் இடம்பெற்ற 11 மாணவா்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிகழ்வில் 712 மாணவா்கள் பட்டங்கள் பெற்றனா்.