தொகுதி மறுவரையறை மசோதா: மு. க. ஸ்டாலினை சந்திக்கும் சோனியா, கார்கே?
திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சந்திக்கும் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே.

தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக ஆலோசிக்க, காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை இன்று (நவ. 29) சென்னையில் சந்தித்துப் பேசவுள்ளனர்.
தொகுதி மறுசீரமைப்புடன் இணைந்த மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு திமுக ஆதரவளிக்கும் என்று மு. க. ஸ்டாலின் நேற்று (நவ. 28) அறிவித்திருந்த நிலையில், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் மு.க. ஸ்டாலினை இன்று சந்திக்கின்றனர்.
மசோதாவுக்கு ஆதரவளிக்கும் முடிவை கைவிடுமாறு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை வலுயுறுத்தவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து, தொகுதி மறுவரையறை மசோதா மசோதாவுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரையும், கார்கே மும்பையில் சந்திக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
பரபரப்பான அரசியல் சூழலில், நாடாளுமன்ற சிறப்பு அமர்வுக்காக மக்களவை நாளை (நவ. 30) கூடுகிறது.
இந்த அமர்வில், தொகுதி மறுசீரமைப்புடன் இணைந்த மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வகை செய்யும் மசோதா மீண்டும் அறிமுகப்படுத்தப்பட உள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. மக்களவையில் நவ. 30, டிச. 1, மாநிலங்களவையில் டிச. 2, 3 என நான்கு நாள்கள் அலுவல்கள் நடைபெறவுள்ளன.
அரசமைப்புச் சட்டத்தின் 132-ஆவது திருத்த மசோதா எனும் தற்போதைய மசோதாவின்படி, 33 சதவீத மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஏற்ப மக்களவை இடங்களின் எண்ணிக்கையை 543-இல் இருந்து 850 வரை (மாநிலங்களில் 815, யூனியன் பிரதேசங்களில் 35) அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது.
முந்தைய மசோதாவைப் போல் அல்லாமல் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் ஒரே சீராக 50 சதவீத தொகுதிகளை அதிகரிக்கவும், இந்த எண்ணிக்கை மற்றும் எல்லை மறுவரையறையை 2051 வரை மாற்றமின்றி தொடரவும் முன்மொழிவுகள் இடம்பெற்றுள்ளன.
ஒரு மாநிலத்தில் பேரவைத் தொகுதிகளின் உச்சவரம்பை 500-இல் 650-ஆக உயா்த்தவும் முன்மொழியப்பட்டுள்ளது. தொகுதி மறுசீரமைப்பின் மூலம் மகளிர் இடஒதுக்கீட்டை உடனடியாக அமலாக்குவதே நோக்கம் என்று மசோதா காரண அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.