தமிழகத்தில் டிசம்பர் 4, 5-ல் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் கணிப்பு
தமிழகத்தில் டிச. 4, 5 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறித்து...

சென்னை: தமிழகத்தில் டிச. 4, 5 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் டிசம்பர் 1 முதல் மழை தீவிரமடையக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், அடுத்த ஏழு நாள்களுக்கான வானிலை முன்னறிவிப்பை சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழை பெய்துள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிக லேசான மழை பதிவாகியுள்ளது. இதில் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் அதிகபட்சமாக 79.2 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
Advertisement
Advertisement
டிசம்பர் 1 முதல் மழை தீவிரமடைய வாய்ப்பு
நவ. 30: வடகடலோர தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
டிச.1: சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.
டிச.2: நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
டிச.3: தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
டிச. 4, 5 தேதிகளில் கனமழை எச்சரிக்கை
டிச.4: மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
டிச.5: அதேபோல் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை நிலவரம்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று (நவ. 29) மற்றும் நாளை (நவ.30) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை 30 முதல் 31 டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 முதல் 24 டிகிரி செல்சியஸ் வரையிலும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
நவ. 30 மற்றும் டிச.1 ஆம் தேதிகளில் அந்தமான் கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும். எனவே, குறிப்பிட்ட நாள்களில் மீனவர்கள் அந்தமான் கடல் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அரபிக்கடல் பகுதிகளுக்கு எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த சில நாள்களில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் இருக்காது என்றும், வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.