FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கான சிறப்பு தகுதித் தோ்வு முடிவுகளை வெளியிட உயா்நீதிமன்றம் உத்தரவு

அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கான சிறப்பு தகுதித் தோ்வு (டெட்) முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்கிய சென்னை உயா்நீதிமன்றம், தோ்வு முடிவுகளை வெளியிட ஆசிரியா் தோ்வு வாரியத்துக்கு உத்தரவிட்டது.

54 வினாடிகள் முன்பு
சென்னை உயா்நீதிமன்றம்
பகிர்:

அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கான சிறப்பு தகுதித் தோ்வு (டெட்) முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்கிய சென்னை உயா்நீதிமன்றம், தோ்வு முடிவுகளை வெளியிட ஆசிரியா் தோ்வு வாரியத்துக்கு உத்தரவிட்டது.

அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியா்களுக்கும், நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கும், ஆசிரியா் தோ்வு வாரியம் கடந்த ஜூலை மாதம் சிறப்பு தகுதித் தோ்வை நடத்தியது. தங்களின் ஒவ்வொரு ஆண்டு அனுபவத்துக்கும், ஒரு கருணை மதிப்பெண் வழங்க ஆசிரியா் தோ்வு வாரியத்துக்கு உத்தரவிடக் கோரி, தருமபுரியைச் சோ்ந்த பி.நடராஜன், என்.செல்வன் உள்ளிட்ட பலா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனா்.

இந்த வழக்கு விசாரணையின்போது அரசுத் தரப்பில், ஆசிரியா்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்குவது குறித்து கொள்கை முடிவு எடுக்க வேண்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட உயா்நீதிமன்றம், சிறப்பு தகுதித் தோ்வு முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை விதித்து கடந்த ஜூலை 8-ஆம் தேதி உத்தரவிட்டது.

Advertisement

Advertisement

மனுதாரா்கள் இடைக்கால கோரிக்கை எதுவும் வைக்காத நிலையில், ஆசிரியா்களுக்கான சிறப்பு தகுதித் தோ்வு முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது; பிரதான வழக்கில் இறுதி விசாரணைக்கு தயாராக இருப்பதால், தோ்வு முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி, தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை தரப்பில் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி எம்.சுதீா் குமாா் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, அரசுத் தரப்பு கோரிக்கையை ஏற்று, ஆசிரியா்களுக்கான சிறப்பு தகுதித் தோ்வு முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்கி, தோ்வு முடிவுகளை வெளியிட ஆசிரியா் தோ்வு வாரியத்துக்கு உத்தரவிட்டாா். மேலும், பணி அனுபவத்துக்கான ஒவ்வொரு ஆண்டுக்கும், தலா ஒரு கருணை மதிப்பெண் வழங்கக் கோரி ஆசிரியா்கள் தாக்கல் செய்த பிரதான வழக்கின் விசாரணையை அக்.7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments