முதல்வர் விஜய் டிராக்டர் ஓட்டினால் விவசாயி ஆகிவிட முடியாது: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
மதுராந்தகம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலையொட்டி அதிமுக வேட்பாளர் கனிதா சம்பத்தை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி மேற்கொண்ட பிரசாரம் பற்றி...
முதல்வர் விஜய் டிராக்டர் ஓட்டினால் விவசாயி ஆகிவிட முடியாது என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மதுராந்தகம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலையொட்டி அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத்தை ஆதரித்து அவர் இன்று மேற்கொண்ட பிரசாரத்தில், நடந்து முடிந்த பேரவைத் தேர்தலில் மதுராந்தகத்தில் அதிமுக சார்பில் வெற்றி பெற்றவர் குதிரை பேரத்தால் விலை போய்விட்டார். மாற்றுக்கட்சிக்குச் சென்று அந்த கட்சி வேட்பாளராக இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார். இது ஜனநாயகத்தின் படுகொலை. நீங்கள் அளித்த ஓட்டை விற்றுவிட்டார். அவர் விலை போய்விட்டார்.
தவெக வேட்பாளருக்கு இடைத்தேர்தலில் தக்க தண்டனையை வழங்க வேண்டும். இனி யாருக்கும் இப்படிப்பட்ட எண்ணம் மனதில் வராதபடி உங்களின் தேர்தல் தீர்ப்பை வழங்க வேண்டும். வெற்றி பெற்ற பிறகு மக்களுக்குச் சேவை செய்வதை விட்டுவிட்டு எம்எல்ஏ பதவியை விற்றவர் தேர்தலில் போட்டியிடுகிறார். அவருக்குத் தக்க பாடத்தைப் புகட்ட வேண்டும். விஜய் முகத்தைக் காட்டினாலே ஓட்டு விழும்னு தவெகவினர் சொல்கிறார்கள்.
Advertisement
Advertisement
அப்புறம் எதுக்கு மதுராந்தகம் தொகுதியில் வீதி வீதியாக, தெருத் தெருவாகப் போக வேண்டும்? மக்கள் ஒருமுறை ஏமாந்துவிட்டார்கள். இனி ஏமாற மாட்டார்கள். தவெகவுக்கு ரீல்ஸ், ரீல்தான் முதல். இதை வைத்துதான் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தனர். அதுவும் மைனாரிட்டி ஆட்சி. தவெக ஆட்சியைக் காப்பாற்ற வேண்டும் என்கிற அடிப்படையில்தான் அதிமுக வேட்பாளர்களை விலைக்கு வாங்கியிருக்கிறார்கள்.
விவசாயிகளை மதிக்கின்ற கட்சி அதிமுக. விவசாயிகள் துன்பப்படும்போது உதவும் கட்சி அதிமுக. விவசாயிகள் கேட்காமலே உதவிய அரசு அதிமுக அரசு. முதல்வர் விஜய் டிராக்டர் ஓட்டினால் விவசாயி ஆகிவிட முடியாது. டிராக்டர் ஓட்டிய முதல்வர் விஜய், விவசாயிகளுக்கு ஏதாவது செய்துள்ளாரா? அவருடைய கனவு கானல்நீராகத்தான் இருக்கும். டீக்கடையில் டீ குடிக்கச் சென்ற முதல்வர் விஜய், டீ குடிக்காமல் அப்படியே சென்றுவிட்டார்.
நீதி கேட்டு உங்களைச் சந்திக்கிறேன், சரியான நீதியை நீங்கள் வழங்க வேண்டும். இந்திய துணைக்கண்டமே வியக்கின்ற அளவுக்கு சரியான நீதி வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.
"AIADMK General Secretary Edappadi K. Palaniswami has stated that Chief Minister Vijay cannot become a farmer just by driving a tractor."
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.