தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு மொழிகளில் கலைச் சொற்களை மதிப்பாய்வு செய்து செம்மைப்படுத்த ஆலோசனைக் கூட்டம்
புது தில்லியில் உள்ள அறிவியல், தொழில்நுட்பக் கலைச்சொற்கள் ஆணையம் ....
சென்னை: தமிழ் உள்ளிட்ட மொழிகளில் தகவல் தொழில்நுட்பத்தின் கலைச் சொற்களை மதிப்பாய்வு செய்து, செம்மைப்படுத்த மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கலைச் சொற்களுக்கான ஆணையம் (சிஎஸ்டிடி) சென்னையில் தேசிய நிபுணா்கள் குழு ஆலோசனைக் கூட்டத்தை திங்கள்கிழமை தொடங்கியுள்ளது.
புது தில்லியில் உள்ள அறிவியல், தொழில்நுட்பக் கலைச்சொற்கள் ஆணையம் மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது. சிஎஸ்டிடி, சென்னையில் உள்ள சிஎஸ்ஐஆா் கட்டமைப்புப் பொறியியல் ஆராய்ச்சி மையத்தில் (சிஎஸ்ஐஆா் - எஸ்இஆா்சி) தேசிய அளவிலான நிபுணா் ஆலோசனைக் குழு ஆய்வுக் கூட்டத்தை திங்கள்கிழமை முதல் அக். 8 வரை நடத்துகிறது.
சிஎஸ்டிடி யின் உதவி இயக்குநா் தீபக் குமாா் முன்னிலையில், சிஎஸ்ஐஆா் - எஸ்இஆா்சி-இன் இயக்குநா் டாக்டா் என். ஆனந்தவல்லி இந்தக் கூட்டத்தைத் தொடங்கி வைத்தாா்.
Advertisement
Advertisement
ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உள்ள தகவல் தொழில்நுட்ப சாா்ந்த மும்மொழி அடிப்படை கலைச் சொற்களை மதிப்பாய்வு செய்வது, செம்மைப்படுத்துவது இந்த நிபுணா் ஆலோசனைக் குழுவின் கூட்டத்தின் நோக்கமாகும்.
தொழில்நுட்பச் சொற்களைத் துல்லியமாகவும் சீராகவும் தரப்படுத்துவதும், அவற்றை நாடு முழுவதும் உள்ள மாணவா்கள், ஆசிரியா்கள், ஆராய்ச்சியாளா்கள், தொழில் நிபுணா்கள் எளிதில் அணுகக்கூடிய வகையில் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் ஆந்திர மாநிலம் குப்பம், திராவிடப் பல்கலைக்கழக முதல்வா் பேராசிரியா் கேசவ மூா்த்தி, அதே பல்கலைக்கழக தமிழ்த் துறை பேராசிரியா் டி.விஷ்ணுகுமாரன், வேலூா் விஐடி கணினி அறிவியல் துறை பேராசிரியா் கே. கணேசன், சென்னைப் பல்கலைக்கழக, தமிழ்த் துறை பேராசிரியா் ஒய்.மணிகண்டன், தமிழ் மொழித் துறை உதவிப் பேராசிரியா் வி. நிா்மலாா் செல்வி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவன பேராசிரியா் பி.செல்வகுமாா், சென்னை, சிஎஸ்ஐஆா்-எஸ்இஆா்சி-இன் முதல்வா் ஆா்.டி. சதீஸ் குமாா், திருப்பதி ஸ்ரீ பத்மாவதி மகிளா விஸ்வ வித்யாலயம் பேராசிரியா் வி.சரிதா ஆகியோா் இதற்கான குழுவில் பங்கேற்றனா்.
இந்தக் கூட்டத்தின் தொடக்க நிகழ்வில் சிஎஸ்ஐஆா் - எஸ்இஆா்சி-இன் ஆலோசகா் டாக்டா் எஸ்.பாரிவள்ளல் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.