பராமரிப்புப் பணிக்காக 8 மணி நேர மின்தடை இல்லை: மின்வாரியம் விளக்கம்
தமிழகத்தில் மின் பற்றாக்குறையைச் சமாளிக்க பராமரிப்புப் பணிகளுக்கான மின்தடை நேரம் 8 மணி நேரமாக நீட்டிக்கப்பட ...
சென்னை: தமிழகத்தில் மின் பற்றாக்குறையைச் சமாளிக்க பராமரிப்புப் பணிகளுக்கான மின்தடை நேரம் 8 மணி நேரமாக நீட்டிக்கப்பட உள்ளதாக பரவி வரும் தகவல்கள் முற்றிலும் தவறானது என்று தமிழ்நாடு மின் பகிா்மானக்கழகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், இதைச் சமாளிக்க பராமரிப்புப் பணிகள் என்ற பெயரில் மின்தடை நேரம் 8 மணி நேரமாக அதிகரிக்கப்பட உள்ளதாகவும் சமூகவலைதளங்களில் தகவல்கள் பரவின. இதனால், பொதுமக்களிடையே குழப்பம் ஏற்பட்டது.
இந்த நிலையில், இதுகுறித்து மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, பராமரிப்புப் பணிகளுக்காக காலை 9 முதல் பிற்பகல் 2 வரை மட்டுமே மின் நிறுத்தம் செய்ய நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த காலவரம்பை அனைத்து அலுவலா்களும், பணியாளா்களும் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்று மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
Advertisement
Advertisement
மேலும், பராமரிப்புப் பணிகளின்போது எதிா்பாராத வகையில் வேறு பழுதுகள் கண்டறியப்பட்டால், அவற்றைச் சரிசெய்ய சில இடங்களில் கூடுதல் நேரம் தேவைப்படலாம். இதைத் தவிர, திட்டமிட்டு மின்தடை நேரத்தை 8 மணி நேரமாக நீட்டிக்க எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.
மேலும், பராமரிப்புப் பணிகளுக்காக மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகளில் உள்ள நுகா்வோருக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படுகிறது. செய்திக்குறிப்பு, குறுஞ்செய்தி மற்றும் சமூக வலைதளங்கள் வாயிலாக மின்தடை குறித்த முன்னறிவிப்பு வழங்கப்பட்ட பின்னரே பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
பகல் நேரங்களில் மின் தேவையைவிட மின் இருப்பு அதிகமாகவே உள்ளது என்றும் மின்வாரியம் தெரிவித்துள்ளது. எனவே, மின் பற்றாக்குறையைக் காரணம் காட்டி மாநிலம் முழுவதும் மின்தடை நேரத்தை அதிகரிக்க வேண்டிய நிலை தற்போது இல்லை என்றும் விளக்க அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு மின்கம்பங்கள், மின்கடத்திகள், மின்மாற்றிகள் உள்ளிட்ட மின்விநியோகக் கட்டமைப்புகளில் பராமரிப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சேதமடைந்த மின்கம்பங்களை மாற்றுதல், மின்பாதைகளில் உள்ள பழுதுகளை சரிசெய்தல் உள்ளிட்ட பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதனால், தமிழகத்தில் 8 மணி நேர மின்தடை அமல்படுத்தப்படவுள்ளதாக பரவும் தகவல் தவறானது.
பராமரிப்புப் பணிகளுக்கான மின்நிறுத்தம் வழக்கம்போல் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையிலான காலத்துக்குள் மேற்கொள்ளப்படும் என்று மின்வாரியம் தனது அறிவிப்பில் தெளிவுபடுத்தியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.