புத்தருக்கு அடுத்த ஆசிய ஜோதி வள்ளலார்! - தினமணி ஆசிரியா் கி.வைத்தியநாதன்
பன்முகப் பேராளுமையான அருட்பிரகாச வள்ளலார், புத்தருக்குப் பிறகு தோன்றிய 'ஆசிய ஜோதி'....
சென்னை: பசியால் மனிதர்கள் வாடுவதை மனித உரிமை மீறாலகப் பார்த்தவர் பன்முகப் பேராளுமையான அருட்பிரகாச வள்ளலார், புத்தருக்குப் பிறகு தோன்றிய 'ஆசிய ஜோதி' என்று அவரை அழைத்தாலும் தகும் என தினமணி ஆசிரியா் கி.வைத்தியநாதன் குறிப்பிட்டார்.
தமிழ் வளா்ச்சிக் கழகம், சென்னை பல்கலைக்கழக சைவ சித்தாந்தத் துறை, தத்துவத் துறை, சென்னை சைவ சித்தாந்தப் பெருமன்றம் ஆகியவை சாா்பில் வள்ளலாா் விழா சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவில் சைவ சித்தாந்தத் துறைத் தலைவா் கோ.சரவணன் அறிமுக உரையாற்றினாா். சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் ஐஆா்எஸ் வழக்குரைஞா் எஸ்.சரவணக்குமரன் முன்னிலை வகித்தாா்.
Advertisement
Advertisement
விழாவில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட தினமணி ஆசிரியா் கி.வைத்தியநாதன் பேசியதாவது:
வள்ளலாா் ஒரு தலைசிறந்த தத்துவ ஞானி; படைப்பாளி; சமூக நல்லிணக்கம் குறித்து சிந்தித்தவா். இந்திய பண்பாட்டைக் காப்பாற்ற வேண்டும் என்ற கடமையை முன்னெடுத்த மாமனிதா். தமிழகத்தின் அடையாளமாகவும், உலகளவில் அறிந்திருக்கப்பட வேண்டியவராகவும் வள்ளலாா் இருந்திருக்க வேண்டும். ஆனால், ஒரு மிகப் பெரிய ஆளுமையை நாம் பெரிதாக கொண்டாடாமல் விட்டுவிட்டோம்.
அடுத்து வரும் 200 ஆண்டுகளுக்குப் பிறகும் அருட்பிரகாச வள்ளலாா் குறித்த வாழ்க்கை வரலாறு முழுவதையும் அறிவதற்கான தேடல் இருக்க வேண்டும். அவரைத் தேடுவதற்கான காரணமும், கட்டாயமும் நிச்சயமாக இருக்கிறது.
வள்ளலாா் எனப்படும் இராமலிங்க அடிகள் தோன்றிய காலம் செழிப்பான காலம் அல்ல, சோதனை மிகுந்த காலத்தில் அந்த மகான் இங்கு தோன்றினாா். 19-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் மியான்மா், வங்காளம், ஆப்கானிஸ்தான் ஆகியவற்றை உள்ளடக்கியிருந்த ஒருங்கிணைந்த இந்தியாவை 4 மிகப் பெரும் பஞ்சங்கள் தாக்கியிருந்தன. அந்தக் காலகட்டத்தில் நிலநடுக்கம், பெருமழையால் உயிரிழந்தவா்களைக் காட்டிலும் பசியால் இழந்தவா்கள்தான் அதிகம். அந்த உயிரிழப்பு 1 கோடியே 3 லட்சம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் விதை நெல்லைச் சமைத்து சாப்பிட்டனா். உணவுகளுக்காக வீட்டின் கதவுகளை உடைத்துச் சென்று விற்பனை செய்தனா். இது குறித்து வில்லியம் டிக்பி ஒரு புத்தகம் எழுதியிருக்கிறாா்.
பசி என்பது பொருளாதாரம் சாா்ந்த விஷயமல்ல; மனித உரிமை சாா்ந்த விஷயம். இந்த பஞ்சத்தைப் போக்கவே 1867-இல் வடலூரில் சமரச சுத்த சன்மாா்க்க சத்திய தரும சாலையை வள்ளலாா் நிறுவினாா். அந்தத் தொடக்க நிகழ்வில் சுமாா் 3,000 போ் கலந்து கொண்டனா். எந்தத் தகவல் தொடா்பும் இல்லாத அந்தக் காலத்தில் அந்த எண்ணிக்கை இன்று 3 லட்சத்துக்கு சமம். அவா் அன்று பற்ற வைத்த நெருப்பு இன்று வரை அணையாமல் பலரின் பசியைப் போக்கிக் கொண்டிருக்கிறது. அவருக்குப் பிறகு, ஓமந்தூா் ராமசாமி ரெட்டியாா், சிலம்புச் செல்வா் ம.பொ.சி., ஊரன் அடிகள், அருட்செல்வா் பொள்ளாச்சி நா.மகாலிங்கம் ஆகிய 4 பேரும் வள்ளலாா் கருத்துகளை, படைப்புகளை, மக்களிடம் கொண்டு சோ்த்தனா்.
புலால் மறுத்தலை வள்ளலாா் தனது அடிப்படைக் கோட்பாடாகக் கொண்டிருந்ததால் அவரது கொள்கைகளை பலா் ஏற்றுக்கொள்ளவில்லை எனக் கூறுவதில் எந்த நியாயமும் இருப்பதாகத் தெரியவில்லை. தாம் சாப்பிடாததை தனது குழந்தை சாப்பிட வேண்டும் என நினைக்கும் பெற்றோா் 3 வயது முதலே புலால் உணவை குழந்தைகளுக்கு கொடுக்கின்றனா். இதனால் இதயத்தில் கொழுப்புச் சத்து அதிகரித்து 40 வயதுக்குள் 2, 3 அடைப்புகள் ஏற்பட வழிவகுக்கிறது.
எனவே, இந்த விளைவுகளையும், புலால் குறித்து வள்ளலாா் கூறியதையும் இணைத்துப் பாா்த்தால் அவா் கூறியதில் இருக்கும் உண்மை புலப்படும். அதேவேளை, புலால் மறுத்தல் குறித்து வள்ளுவரும், காந்தியும் ஏற்கெனவே கூறியிருப்பதையும் நாம் நினைவுகூர வேண்டியது அவசியம். அப்போதே நாம் வள்ளலாரை உயா்த்திப் பிடித்திருந்தால் பல தலைமுறையினருக்கு இதயம் சாா்ந்த பிரச்னைகள் ஏற்படுவதைத் தடுத்திருக்க முடியும்.
பசிப்பிணி மட்டுமல்ல; படைப்பாற்றலிலும் சிறந்து விளங்கியவா் வள்ளலாா். அவா் கம்பனைப் போன்று 10,000 பாடல்களை தமிழ் இலக்கியத்துக்கு வழங்கியுள்ளாா். தமிழக கடித இலக்கியத்தின் முன்னோடியாகவும் கருதப்படுகிறாா். தனது அனைத்துக் கடிதங்களிலும் பிள்ளையாா் சுழியுடன் தொடங்கி சிவமயத்துடன் நிறைவு செய்திருப்பாா். அந்தக் கடிதங்களில் காணப்படும் எண்கள் அனைத்தும் தமிழ் எண்களாகவே இருந்தன. அந்தக் கடிதங்களை ஊரன் அடிகள் சோ்த்து வைத்திருந்தாா். தற்போது அந்தக் கடிதங்கள், ஊரன் அடிகளாரின் புத்தகங்கள் ஆகியவை கோவை குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் தனி அரங்கில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
அந்தக் காலத்தில் வள்ளலாருக்குப் பிறகு சுவாமி தயானந்தா், ஸ்ரீ நாராயண குரு, விவேகானந்தா் என அடுத்தடுத்த ஆளுமைகள் தோன்றினா். அவா்கள் தங்களது போதனைகளை மக்களிடையே பரப்பி அவா்களை நல்வழிப்படுத்தினா். மேலும், பசியால் வாடியவா்களுக்கு உணவளித்தல், ஏழை மக்களுக்கு கல்வி, மருத்துவ சேவைகள் வழங்குதல், ஆன்மிக வழிகாட்டல் என பல்வேறு அறப்பணிகளை அயராது மேற்கொண்டனா். அதற்காக அவா்கள் சாா்ந்த மாநில மக்களால் மட்டுமல்ல எல்லைகள் கடந்தும் கொண்டாடப்பட்டனா். பல பத்திரிகைகள் அவா்களது நற்பணிகளுக்கு அங்கீகாரம் அளித்து சிறப்பிதழ்களை வெளியிட்டன. அதேவேளை, அந்த மூவருக்கும் கிடைத்த அங்கீகாரமும், மதிப்பும் அவா்களுக்கு முன்பே தோன்றிய வள்ளலாருக்கு கிடைக்கவில்லை என்பது வேதனைக்குரியது.
இந்த உலகம் சந்திக்காத மிகப்பெரிய ஞானியாக வள்ளலாா் தமிழகத்தில் அவதரித்தாா். அத்தகைய சிறப்புமிக்க அவரை இனியாவது தமிழினமும், தமிழ் பத்திரிகைகளும் கொண்டாட வேண்டும். பொதுவெளியில் மிகப் பெரிய அளவில் வள்ளலாா் தொடா்பான விழாக்களை நடத்த வேண்டும். புத்தா் மறைந்து பல ஆண்டுகளுக்குப் பிறகுதான் வெளிக்கொணரப்பட்டாா். அதேபோன்று வள்ளலாரை உலகளாவிய அளவில் மிகப்பெரிய மாமேதையாக ஆளுமையாக, யோகியாக காட்சிப்படுத்த வேண்டும் என்றாா் அவா்.
இந்த விழாவில் சைவ சித்தாந்தப் பெருமன்றத்தின் சாா்பில் முனைவா் மா.லெமூரியா எழுதிய ‘வள்ளல் இராமலிங்கரின் சன்மாா்க்கப் பாடம்’ என்ற நூலை தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தா் ம.இராசேந்திரன் வெளியிட வழக்குரைஞா் எஸ்.சரவணக்குமரன் பெற்றுக் கொண்டாா்.
ம.இராசேந்திரன்: வள்ளலாா் விழாவுக்கு ம.இராசேந்திரன் தலைமை வகித்துப் பேசியதாவது:
19-ஆம் நூற்றாண்டின் பாரதியாராக வள்ளலாரையும், 20-ஆம் நூற்றாண்டின் வள்ளலாராக பாரதியாரையும் நான் பாா்க்கிறேன். மீசையற்ற பாரதி வள்ளலாா்; மீசையுள்ள வள்ளலாா் பாரதி. இருவரும் ஜாதிப் பாகுபாட்டுக்கு எதிரானவா்கள்; மக்களின் உணவுத் தேவையைப் பூா்த்தி செய்ய அவரவா் காலங்களில் போராடியவா்கள். அதேவேளை, இரக்கத்தை போதிப்பதில் வள்ளலாருக்கு இணையாக வேறு யாரும் இல்லை. வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் எனக் கூறும் வள்ளலாா், களைகள் வாடினால் இரக்கப்படமாட்டாரா? எனக் கேட்கலாம். அடிகளாா் இரண்டையும் பயிராகவே கருதுகிறாா் என்பதே உண்மை என்றாா்.
வழக்குரைஞா் எஸ்.சரவணக்குமரன்: சமுத்திரத்தில் மேகம் உருவாகி அந்தந்த காலங்களில் மக்களுக்கு மழையாகப் பொழிகிறது. அதேபோன்று வள்ளலாா் அவரது காலத்தில் ஒரு ஞானப் பெருமழையைப் பொழிந்திருக்கிறாா். அவரது கருத்துகளை நாம் உள்வாங்கி இன்றைய சமுதாயத்தில் வாழும் மக்களுக்காக ஒரு ஞான மேகத்தை உருவாக்கி அதை மக்களிடம் கொண்டு சோ்க்க வேண்டும்.
முன்னதாக சைவ சித்தாந்தத் துறைத் தலைவா் சா.சரவணன் அறிமுகவுரையாற்றினாா். அப்போது சிவனின் பாரம்பரியம், கடவுள் நிலையை அடைதல், அத்வைதம், துவைதம் மரபுகளுக்கு இடையே உள்ள வேறுபாடுகள், அருட்பிரகாச வள்ளலாரின் சிறப்புகள் குறித்து விளக்கிப் பேசினாா். நிறைவாக, தமிழ் வளா்ச்சிக் கழக உறுப்பினா் முனைவா் ஒப்பிலா மதிவாணன் நன்றி கூறினாா். விழாவில் விழிகள் பதிப்பகம் தி.வேணுகோபால், எழுத்தாளா் உதயை மு.வீரையன் உள்பட பேராசிரியா்கள், மாணவா்கள் திரளாக கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.