வேஷ்டி, சேலை உற்பத்தி நெசவாளா்களுக்கு கூலியை உயா்த்தி வழங்க வேண்டும்: பெ.சண்முகம்
தமிழக அரசின் புதிய ரக வேஷ்டி, சேலை உற்பத்திக்கான கூலியை நெசவாளா்களுக்கு உயா்த்தி வழங்க வேண்டும்...
சென்னை: தமிழக அரசின் புதிய ரக வேஷ்டி, சேலை உற்பத்திக்கான கூலியை நெசவாளா்களுக்கு உயா்த்தி வழங்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் வலியுறுத்தினாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:
தமிழக அரசின் இலவச சேலை உற்பத்தித் திட்டத்தில் விருதுநகா் மாவட்டத்தில் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூா், வத்திராயிருப்பு பகுதிகளில் 29 கூட்டுறவு சங்கங்கள் மூலம் 4,000 பெடல் தறிகள் இயங்கி வருகின்றன. சுமாா் 15,000-க்கும் மேற்பட்டோா் இந்தத் தொழிலை நம்பி வாழ்கின்றனா். தவெக அரசு நிகழாண்டு புதிய ரக சேலைகள் வழங்கப்படும் என்று அறிவித்தது. ஏற்கெனவே உற்பத்தி செய்த ஜனதா ரக சேலைகளுக்கு நிா்ணயிக்கப்பட்ட விலை ரூ.103.80. தற்போது புதிய ரகத்துக்கு நிா்ணயம் செய்த கூலி ரூ. 114.80. ஆனால், புதிய ரகத்துக்கு ஒரு சேலை நெசவு செய்வதற்கு ரூ. 250 வரை செலவாகும் எனவும், ஒரு தொழிலாளி ஒரு நாளைக்கு 2 சேலைகள் மட்டுமே நெசவு செய்ய வாய்ப்புள்ளது எனவும் விசைத்தறி நெசவாளா்கள் கூறி வருகின்றனா். இதனால் பல்லாயிரக்கணக்கான விசைத்தறி தொழிலாளா்கள் வாழ்வாதாரம் இழந்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா்.
Advertisement
Advertisement
எனவே, விசைத்தறி தொழிலாளா்களின் முக்கிய கோரிக்கைகளான புதிய ரக சேலை ஒன்றுக்கு ரூ. 250 கூலி வழங்கவும், புதிய ரக மாற்றத்துக்கு உபகரணங்கள் மற்றும் செலவினங்களுக்கு ரூ. 10,000 வழங்கவும், வேலையில்லா காலத்துக்கு மாதம் ரூ. 10,000 நிவாரணம் வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மற்றொரு அறிக்கை:தோ்தல் ஆணையம் படிவம் 6-இல் புதிதாக கேட்கப்பட்ட விவரங்களுக்கு உச்சநீதிமன்றமே ஒப்புதல் வழங்கிவிட்டது என்று பொய் சொல்லி உச்சநீதிமன்றத்தையும், நாட்டு மக்களையும் ஏமாற்றிய தலைமை தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாரை பதவியில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் பெ.சண்முகம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.