மேட்டுப்பாளையம் - குன்னூர் தண்டவாளத்தில் பாறை சரிவு! ரயில் சேவை நிறுத்தம்!
மேட்டுப்பாளையம் - குன்னூர் தண்டவாளத்தில் பாறை சரிந்ததால் ரயில் சேவை நிறுத்தப்பட்டது பற்றி...
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் - குன்னூர் பகுதிகளில் தொடர் கனமழை எதிரொலியாக ரயில் தண்டவாளத்தில் பாறை, மண் சரிந்து விழுந்ததால் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
கோவை, நீலகிரி மாவட்டங்களில் கடந்த நான்கு நாள்களாக சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் கடந்த இரண்டு நாள்களாக மேட்டுப்பாளையம் - குன்னூர் மலைப்பாதையில் மரம் மற்றும் மண், பாறை ஆகியவை சரிந்து விழுந்து வருகின்றன. இதனால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த இரு நாள்களாக மேட்டுப்பாளையம் -குன்னூர் மலை பாதையில் பெய்த கனமழை காரணமாக கல்லாறு - ஹில் குரோவ், ஆடர்லி இடையே இரண்டு இடங்களில் மண் மற்றும் பாறைகள் சரிந்து தண்டவாளத்தில் விழுந்து உள்ளன.
Advertisement
Advertisement
இதனிடையே, மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து வழக்கம் போல் இன்று காலை 7:10 மணிக்கு 186 பயணிகளுடன் உதகைக்கு சென்ற ரயில், கல்லாறு ரயில் நிலையத்தை தாண்டி ஹில் குரோவ், அடர்லி அருகே சென்றபோது தண்டவாளத்தில் பாறை மற்றும் சரளை கற்கள் சரிந்து விழுந்ததை பார்த்து ரயிலை ஓட்டுநர் நிறுத்தினார்.
தொடர்ந்து, பின்னோக்கி இயக்கப்பட்ட ரயில் மீண்டும் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டது. பின்னர் ரயிலில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தவர்களுக்கும் ரயில் கவுண்டரில் டிக்கெட் எடுத்தவர்களுக்கும் ரயில்வே நிர்வாகம் அதற்கான தொகையைத் திருப்பி வழங்கியது.
ரயில் தண்டவாளத்தில் பாறை மற்றும் மண் சரிந்து விழுந்ததால் இன்று ஒரு நாள் மேட்டுப்பாளையம் - குன்னூர் மலை ரயில் ரத்து செய்யப்பட்டதாக சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
Rockslide on the Mettupalayam-Coonoor railway track! Train services suspended!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.