போக்சோ வழக்கு! மாணவி பயிலும் கல்லூரி முதல்வராக குற்றஞ்சாட்டப்பட்டவரை நியமிப்பதா? நீதிமன்றம் கேள்வி
பாலியல் புகார் அளித்த மாணவி பயிலும் கல்லூரியில் குற்றஞ்சாட்டப்பட்டவர் முதல்வராக நியமித்தது எப்படி? என நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது.
போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவி படிக்கும் அதே கல்லூரியில், குற்றம் சாட்டப்பட்டவரை மீண்டும் முதல்வராக நியமித்தது எப்படி என, உடற்கல்வியியல் கல்லூரி நிர்வாகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. வளாகத்தில் இயங்கி வரும் உடற்கல்வியியல் கல்லூரியில் முதல்வராக இருந்த ஜார்ஜ் ஆப்ரகாம் என்பவர், 23 வயதான மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
மாணவி அளித்த புகாரில், போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த சைதாப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர், அவரைக் கைது செய்தனர். சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் பின்னர் ஜாமீன் பெற்று வெளியில் வந்துள்ளார்.
Advertisement
Advertisement
இந்நிலையில், உடல் கல்வியியல் கல்லூரியின் முதல்வராக ஜார்ஜ் ஆப்ரஹாம் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது ஜாமீனை ரத்து செய்யக் கோரி, குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு, நீதிபதி என்.ரமேஷ் முன் விசாரணைக்கு வந்தபோது, குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, பாலியல் தொல்லை அளித்ததாக ஜார்ஜ் ஆப்ரகாமுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு உள்ளதாகவும், அந்த வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவி படிக்கும் அதே கல்லூரியின் முதல்வராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
தமிழ்நாடு மகளிர் ஆணையம், அவரை கல்லூரியில் இருந்து நீக்க வேண்டும் என பரிந்துரைத்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவி படிக்கும் கல்லூரியில் ஜார்ஜ் ஆப்ரகாமை மீண்டும் நியமித்துள்ளதால், பாதிக்கப்பட்ட மாணவியின் பாதுகாப்பு குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. அவர் மிரட்டப்பட வாய்ப்புள்ளது எனவும் குற்ற வழக்கில் மூன்றாண்டுகளாகியும் இன்னும் விசாரணை துவங்கப்படவில்லை எனவும் வாதிட்டார்.
ஆனால், ஜார்ஜ் ஆப்ரகாம் தரப்பில், ஏற்கனவே இதேபோல ஜாமீனை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவி படிக்கும் அதே கல்லூரியில் குற்றம் சாட்டப்பட்டவரை மீண்டும் நியமித்தது எப்படி? எனக் கல்லூரி நிர்வாகத்துக்கு கேள்வி எழுப்பினார்.
மேலும், அவரை பணியில் இருந்து இடமாற்றம் செய்ய உயர்நீதிமன்றமே உத்தரவிட நேரிடும் எனத் தெரிவித்த நீதிபதி, ஜாமீன் ரத்து செய்யக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி ஜார்ஜ் ஆப்ரகாமுக்கு உத்தரவிட்டார்.
போக்சோ வழக்கில் விசாரணை துவங்காமல், மூன்று ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி, காவல் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை நவம்பர் 6 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.