நெல்லையில் ரௌடி தற்கொலை! சந்தேக மரணம் என உறவினர்கள் புகார்!
நெல்லையில் ரௌடி தற்கொலை விவகாரத்தில் சந்தேக மரணம் என உறவினர்கள் புகார் அளித்துள்ளனர்.
நெல்லையில் ரௌடி சங்கரலிங்கம்தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் புகார் அளித்துள்ளனர்.
நெல்லையில் ரௌடி தற்கொலை செய்து கொள்ளவில்லை, அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளது என புகார் அளித்திருக்கும் உறவினர்கள், சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடக் கோரிக்கை வைத்துள்ளனர். பதற்றமான சூழல் நிலவுவதால் உடல் வைக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த ஏ பிளஸ் சரித்திரப் பதிவேடு குற்றவாளி சங்கரலிங்கம் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் விவகாரத்தில், பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளதாக உறவினர்கள் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
Advertisement
Advertisement
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் பகுதியைச் சேர்ந்த சங்கரலிங்கம் (28), கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சுமார் 20 நாள்களுக்கு முன்பு ஏற்பட்ட சாலை விபத்தில் காலில் பலத்த காயமடைந்ததால், நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் கைதிகள் வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், நேற்று மருத்துவமனை வார்டில் உள்ள கழிப்பறையில் தனது கைலியைப் பயன்படுத்தி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல் வெளியானது. இதையடுத்து, அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனை பிணவறைக்குக் கொண்டு செல்லப்பட்டது. பிரேதப் பரிசோதனை இன்னும் நடைபெறவில்லை.
சங்கரலிங்கத்தின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்துள்ள அவரது மனைவி மற்றும் உறவினர்கள், இந்த விவகாரம் தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றக் கிளையை அணுகி முறையிடவும், சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தவும் கோரிக்கை விடுக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, தற்போது மாஜிஸ்திரேட் சங்கரலிங்கத்தின் மனைவி மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார். உறவினர்கள் எழுப்பியுள்ள சந்தேகங்கள் காரணமாக, உடல் கூராய்வு நடைமுறைகள் இன்னும் நிறைவடையவில்லை.
உடல் கூராய்வுக்காகப் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த சங்கரலிங்கத்தின் உடல், எக்ஸ்ரே எடுப்பதற்காகத் தற்போது வெளியே கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதனால், மருத்துவமனை வளாகத்தில் தொடர்ந்து பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பிணவறை முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சங்கரலிங்கத்தின் மரணம் தொடர்பாக உறவினர்கள் எழுப்பியுள்ள சந்தேகங்கள், மாஜிஸ்திரேட் விசாரணை மற்றும் சிபிசிஐடி விசாரணைக்கான கோரிக்கை ஆகியவற்றால் இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.