முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!
முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது பற்றி...
முஸ்லிமாக மதம் மாறியவா்களும் இடஒதுக்கீட்டு சலுகைகளைப் பெற முடியாது எனத் தெரிவித்த உச்ச நீதிமன்றம், தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது.
‘இந்து மதத்தின் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீா்மரபினா், பட்டியலின பிரிவைச் சோ்ந்தவா்கள் இஸ்லாம் மதத்துக்கு மாறும்போது, அவா்கள் தொடா்ந்து இடஒதுக்கீட்டு சலுகைகளைப் பெறும் வகையில், இஸ்லாம் மதத்தின் 7 உள்பிரிவுகளில் ஏதேனும் ஒன்றின் கீழ் அவா்களுக்கு பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் என சான்றிதழ் வழங்கலாம்’ என கடந்த 2024-ஆம் ஆண்டில் தமிழக அரசு அரசாணையை வெளியிட்டது.
இதனை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து உத்தரவிடப்பட்டது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா மற்றும் ஸ்ரீ சந்திரசேகர் அமர்வு இன்று தீர்ப்பு வழங்கினர்.
முஸ்லிமாக மதம் மாறியவா்களும் இடஒதுக்கீட்டு சலுகைகளைப் பெற முடியாது என்று உத்தரவிட்ட நீதிபதிகள் தெரிவித்திருப்பதாவது:
”ஹிந்து சமூக அமைப்பிலிருந்து ஹிந்து அல்லாத வேறொரு சமூக அமைப்பிற்கு மதம் மாறிய ஒருவர், தான் மதம் மாறுவதற்கு முன்பு கொண்டிருந்த சமூகப் பின்தங்கிய நிலையை மட்டும் அடிப்படையாகக் கொண்டு, இந்திய அரசியலமைப்பின் 16(4)-வது பிரிவின் கீழ் இட ஒதுக்கீடு அல்லது சிறப்புச் சலுகைகளைக் கோர முடியாது. முந்தைய சமூக அமைப்பில் அவர் அனுபவித்த பின்தங்கிய நிலை, அவர் மாறிய புதிய மதத்திலும் அவருக்கு 'பின்தங்கிய வகுப்பு' என்ற அந்தஸ்தைப் பெற்றுத் தருவதற்கு அடிப்படையாக அமையாது.
அரசியலமைப்பு (பட்டியல் சாதிகள்) ஆணையின் 3-வது பிரிவின்படி, ஹிந்து மதம், சீக்கிய மதம் அல்லது பௌத்த மதம் தவிர வேறொரு மதத்தைப் பின்பற்றும் நபர், 'பட்டியல் சாதி' உறுப்பினராகக் கருதப்பட மாட்டார். எனவே, அதில் குறிப்பிடப்படாத வேறொரு மதத்திற்கு மாறிய ஒரு நபர், தனது முந்தைய சாதியுடன் தொடர்புடைய 'பட்டியல் சாதி' அந்தஸ்தை இழக்கிறார். இத்தகைய சூழலில், அரசியலமைப்பின் 16(4)-வது பிரிவின் கீழ் 'பட்டியல் சாதி' உறுப்பினராக இருப்பதன் அடிப்படையில் வழங்கப்படும் இட ஒதுக்கீடு அல்லது சிறப்புச் சலுகைகளை அவர் கோர முடியாது.
ஒரு நபர் மதம் மாறுவதற்கு முன்பு கொண்டிருந்த சமூகப் பின்தங்கிய நிலை, அவர் மதம் மாறிய பிறகு, வேறொரு குறிப்பிட்ட பின்தங்கிய சமூகப் பிரிவில் உறுப்பினராகச் சேருவதற்குத் தேவையான சட்டப்பூர்வ அடிப்படையை வழங்க முடியாது. மாறாக, ஹிந்து சமூக அமைப்பிலிருந்து வேறொரு சமூக அமைப்பிற்கு மாறிய ஒருவர், மீண்டும் ஹிந்து சமூகத்திற்குத் திரும்பும்போது, அரசியலமைப்பின் 16(4)-வது பிரிவின் கீழ் அவருக்குச் சாதகமான நடவடிக்கைகளைப் பெறுவதற்கான உரிமை உள்ளதா என்பதை, அவர் முன்பு கொண்டிருந்த நிலையை மட்டும் வைத்துத் தீர்மானிக்க முடியாது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கின் பின்னணி
தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த என். பரமசிவம் கடந்த 2015-ஆம் ஆண்டு இந்து மதத்திலிருந்து இஸ்லாம் மதத்துக்கு மாறி, தன் பெயரை என். சமீா் அகமது என மாற்றிக் கொண்டாா். சுன்னத் ஜமாத் மூலம் அவருக்கு மதமாற்றச் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதையடுத்து, தனக்கு பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் பிரிவின் கீழ் ‘முஸ்லிம் லெப்பை’ என ஜாதி சான்றிதழ் வழங்கக் கோரி, கயத்தாறு வட்டாட்சியரிடம் என். சமீா் அகமது விண்ணப்பித்தாா்.
ஆனால், இவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதை எதிா்த்து சமீா் அகமது கடந்த 2022-ஆம் ஆண்டு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வழக்கு தொடுத்தாா்.
இதனிடையே, ‘இந்து மதத்தின் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீா்மரபினா், பட்டியலின பிரிவைச் சோ்ந்தவா்கள் இஸ்லாம் மதத்துக்கு மாறும்போது, அவா்கள் தொடா்ந்து இடஒதுக்கீட்டு சலுகைகளைப் பெறும் வகையில், இஸ்லாம் மதத்தின் 7 உள்பிரிவுகளில் ஏதேனும் ஒன்றின் கீழ் அவா்களுக்கு பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் என சான்றிதழ் வழங்கலாம்’ என கடந்த 2024-ஆம் ஆண்டில் தமிழக அரசு அரசாணையை வெளியிட்டது.
இந்த நிலையில், என். சமீா் அகமது தொடுத்த வழக்கில், ‘ஓா் இந்து இஸ்லாம் மதத்துக்கு மாறும்போது அவா் வெறும் முஸ்லிமாக மட்டுமே மாறுகிறாா்; அவரது பழைய ஜாதி அடையாளம் முற்றிலும் அழிந்துவிடுகிறது’ என 1951-ஆம் ஆண்டு வெளியான சென்னை உயா் நீதிமன்றத்தின் தீா்ப்பு ஒன்றில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தீா்ப்பை உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது. நீதிமன்றங்களின் இத்தகைய இறுதித் தீா்ப்புகளை அரசு நிா்வாக அரசாணையின் மூலம் மாற்றிவிட முடியாது. இது, அதிகாரப் பகிா்வு கோட்பாட்டுக்கு எதிரானது’ எனத் தெரிவித்து, தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்தது.
Those who have converted to Islam cannot receive reservation benefits! Supreme Court verdict!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.