FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மதம் மாறியவர்கள் இடஒதுக்கீடு கோர முடியாது! தமிழக அரசின் மேல்முறையீடு நிராகரிப்பு - முழு விவரம்

மதம் மாறியவர்கள் இடஒதுக்கீடு கோர முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது குறித்து...

16 வினாடிகள் முன்பு
உச்ச நீதிமன்றம் - கோப்புப் படம்
பகிர்:

பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஹிந்துக்கள் இஸ்லாமிய மதத்துக்கு மாறிய பிறகு, அந்தப் பிரிவுக்குரிய இடஒதுக்கீட்டு பலன்களைக் கோர முடியாது என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது. இந்த விவகாரத்தில், இஸ்லாத்துக்கு மாறியவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கிய தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பையும் உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியது.

முன்னதாக, இஸ்லாத்துக்கு மாறிய ஒருவர், மதம் மாறியதன் அடிப்படையில் மட்டுமே பிற்படுத்தப்பட்ட வகுப்பு (முஸ்லிம்) பிரிவின் கீழ் இடஒதுக்கீட்டைக் கோர முடியாது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தீர்ப்பளித்திருந்தது.

அதற்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா, ஸ்ரீசந்திரசேகர் அடங்கிய அமர்வு தள்ளுபடி செய்து வியாழக்கிழமை அளித்த தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

Advertisement

Advertisement

அரசமைப்பின் 16(4) -ஆவது பிரிவின் கீழ், ஒரு குறிப்பிட்ட ஹிந்து சமூக அமைப்பை அடிப்படையாகக் கொண்ட எந்தவொரு சட்டபூர்வமான பலன், பாதுகாப்பு, இட ஒதுக்கீடு அல்லது பிற உரிமையை, ஒருவர் இஸ்லாம், கிறிஸ்தவம் அல்லது ஹிந்து அல்லாத வேறு மதத்துக்கு மாறிய பிறகு, தனது முந்தைய தகுதியின் அடிப்படையில் இடஒதுக்கீட்டைக் கோரவோ அல்லது அவருக்கு அதன் பலன்களை நீட்டிக்கவோ முடியாது.

ஹிந்து மதம், சீக்கிய மதம், பௌத்த மதம் அல்லாத வேறு மதத்தைப் பின்பற்றும் ஒருவரைப் பட்டியல் ஜாதியைச் சேர்ந்தவராகக் கருத முடியாது. ஹிந்து அல்லாத சமூக அமைப்புக்கு மதம் மாறுவது, தானாகவே எந்தவொரு குறிப்பிட்ட அறிவிக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட வகுப்பின் உறுப்பினராக அவரை ஆக்கிவிடாது.

மாறாக, ஒருவர் ஹிந்து சமூக அமைப்பிலிருந்து ஹிந்து அல்லாத சமூக அமைப்புக்கு மதம் மாறிய பிறகு, மீண்டும் ஹிந்து சமூக அமைப்புக்கு மதம் மாறினால், சட்டப் பிரிவு 16 (4)-இன் கீழ் நேர்மறை நடவடிக்கைக்கு அவர் தகுதியானவரா என்ற கேள்வியை, அவரது முந்தைய நிலையை மட்டும் கொண்டு தீர்மானிக்க முடியாது.

மீண்டும் மதம் மாறியதன் மூலம் அசல் ஜாதி அல்லது சமூக அடையாளம் உண்மையாகவே புத்துயிர் பெற்றதா, மேலும் அந்த நபர் அத்தகைய நேர்மறை நடவடிக்கைக்கான பொருந்தக்கூடிய அரசமைப்பு மற்றும் சட்ட தேவைகளைப் பூர்த்தி செய்கிறாரா என்பது குறித்து தகுதிவாய்ந்த அதிகாரியால் தீர்மானிக்கப்பட வேண்டும்.

எனவே, உயர்நீதிமன்றத் தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்துகிறது. இஸ்லாத்துக்கு மதம் மாறும் ஒருவர், அந்தச் செயலால் மட்டுமே, தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட ஏழு முஸ்லிம் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளில் ஏதேனும் ஒன்றில் உறுப்பினராகிவிடுவதில்லை.

இந்த முந்தைய ஜாதி அல்லது சமூக அமைப்புகளை, முஸ்லிம் பிற்படுத்தப்பட்ட வகுப்புப் பிரிவுக்கு தானாகவே மாற்றிவிட முடியாது. மேலும், ஒரு தனியார் மத அமைப்பும் அத்தகைய சட்டபூர்வ உரிமையை உறுதியாகத் தீர்மானிக்க முடியாது என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

என்ன வழக்கு?: 2015-ஆம் ஆண்டில் சமீர் அகமது என்பவர் ஹிந்து மதத்திலிருந்து இஸ்லாம் மதத்துக்கு மாறினார். 2016-இல்அவரது மதமாற்ற தகவல் அரசிதழில் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து, அவர் இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.

தான் மதம் மாறியதையடுத்து, தனக்கு 'முஸ்லிம் லெப்பை சமூகத்தைச் சேர்ந்தவர்' என்ற சான்றிதழ் கோரி, அதன்மூலம் இடஒதுக்கீட்டுப் பலன்களைப் பெற அவர் விண்ணப்பித்தார்.

இந்த விவகாரத்தில் 2024, மார்ச் 9-ஆம் தேதி, சமூக மற்றும் கல்வி ரீதியில் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்தவர்கள் மதம் மாறுவதால் மட்டும் இடஒதுக்கீட்டுப் பலன்களை இழந்துவிடக் கூடாது என்ற நோக்கத்துடன் தமிழக அரசு ஒரு புதிய அரசாணையை வெளியிட்டது. அதன்படி, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் முஸ்லிம் மதத்துக்கு மாறும்போது அவர்களுக்குத் தகுதியின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்) சமுதாய சான்றிதழ்களை வழங்க தமிழக பிற்படுத்தப்பட்டோர் ஆணைய அறிக்கையின் அடிப்படையில் அரசுக்கு அதிகாரம் இருப்பதாக மாநில அரசு வாதிட்டது.

இந்த நிலையில், 'மதமாற்றத்தை மட்டுமே காரணமாக வைத்து ஒருவரைப் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டுப் பிரிவின் கீழ் கொண்டுவர முடியாது என்று 2026, ஜூன் 25-ஆம் தேதி தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, தமிழக அரசின் 2024, மார்ச் 9-ஆம் தேதியிட்ட அரசாணையானது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று அறிவித்து, அந்த அரசாணையை ரத்து செய்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் செய்த மேல்முறையீட்டில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

summary

Can't claim Backward Classes Muslim quota after converting: Supreme Court upholds order

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments