FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தேனிசை தென்றல் தேவா மறைவு: முதல்வர், தலைவர்கள் இரங்கல்

புகழ்பெற்ற இசையமைப்பாளர் தேவா மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் குறித்து...

17 அக்டோபர் 2026, 1:04 pm IST
தேனிசை தென்றல் தேவா மறைவு - டிஎன்எஸ்
பகிர்:

புகழ்பெற்ற இசையமைப்பாளர் தேவா மறைவுக்கு ஆளுநர், முதல்வர் ஜோசப் விஜய் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளரும், தேனிசைத் தென்றல் என்று போற்றப்பட்டவருமான தேவா(75) உடல்நலக் குறைவால் சென்னை வடபழனியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சனிக்கிழமை காலமானாா்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்தவர். கானா பாடல்களைப் பாடுவதில் வல்லவரான இவர் மாட்டுக்கார மன்னாரு திரைப்படம் மூலம் திரைக்கு அறிமுகம் ஆனார்.

Advertisement

Advertisement

அண்ணாமலை, பாட்ஷா, அருணாச்சலம் ஆகிய ரஜினி படங்களுக்கு இசையமைத்தவர். விஜய், அஜீத் ஆகியோரின் ஆரம்பக்கால வெற்றிக்கு முக்கிய தூணாக விளங்கியவர்.

இவரது மறைவுக்கு தமிழக ஆளுநர், முதல்வர், அரசியல் கட்சித் தலைவர்கள், திரைத்துறையினர் மற்றும் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஆளுநர் ஆர்லேகர் இரங்கல்

தமிழ்த் திரைப்பட இசைக்கு மகத்தான பங்களிப்பு அளித்தவர் தேவா. அவரது மறைவு வருத்தம் அளிக்கின்றது.

கோடிக்கணக்கான இசை ரசிகர்களின் இதயங்களில் தனி இடம் பிடித்தவர். தமிழ் திரை இசையில் அழியா முத்திரையை பதித்தவர் தேவா என கூறியுள்ளார்.

முதல்வர் ஜோசப் விஜய் இரங்கல்

தமிழ்த் திரையுலகின் தனித்துவமான இசையமைப்பாளரும், கானா பாடல்களால் எளிய மக்களின் மனங்களைக் கவர்ந்தவருமான 'தேனிசைத் தென்றல்' திரு. தேவா அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்ததோடு, பல கானா பாடல்களை எழுதி, அவரே பாடியும் உள்ளார். கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்ற திரு. தேவா அவர்களின் இசைப் பயணமும், பாடல்களும் திரையிசை வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும். அவரது மறைவு தமிழ்த் திரையுலகிற்கு பேரிழப்பாகும்.

இசையமைப்பாளர் திரு.தேவா அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், திரைத்துறையினருக்கும், இசை ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மு.க. ஸ்டாலின்(திமுக)

தேனிசைத் தென்றல் தேவா அவர்களின் மறைவுச்செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானேன்.

பொறாமை, வஞ்சகம், சூது வாது ஏதுமறியாத வெள்ளை மனம் கொண்டவர் தேவா. கானா வகைமைப் பாடல்களைத் திரையிசையில் பெரிய அளவில் புகுத்தி, கானா என்றாலே தேவாதான் என அறியப்பட்டவர்.

எளிமையான கிராமத்துப் பின்னணியில் இருந்து சென்னைக்கு வந்து, தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்து எத்தனையோ பேருக்கு ஆதர்சமாகத் திகழ்ந்தவர். உச்ச நட்சத்திரங்கள் அனைவரது திரைப்படங்களுக்கும் இசையமைத்து, அவற்றின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர்.

குறிப்பாக, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் தேவா இணைந்து பணியாற்றிய அண்ணாமலை, பாட்ஷா, அருணாசலம் ஆகிய திரைப்படங்களின் பாடல்கள் பெருவெற்றியை ஈட்டின. இன்றளவும், தேவா இசையோடுதான் ரஜினிகாந்த் பெயர் திரையில் தோன்றுகிறது என்பதில் இருந்தே அதன் வீச்சை உணர்ந்துகொள்ளலாம். நான் ஆட்டோக்காரன் ஒலிக்காத ஆட்டோ ஸ்டாண்டுகளே தமிழ்நாட்டில் இருக்காது. கலைஞானி கமலஹாசன் அவ்வை சண்முகி, பஞ்சதந்திரம் போன்ற நகைச்சுவைப் படங்களிலும் தனது முத்திரையைப் பதித்துள்ளார்.

ரஜினி, கமல் மட்டுமல்லாமல், கேப்டன் விஜயகாந்த் பாசமுள்ள பாண்டியரே உள்ளிட்ட பல வெற்றிப்பாடல்களை தேவா அளித்திருக்கிறார். குறிப்பாக, வாராரு அழகர் வாராரு என்ற தேவாவின் பாடல் இல்லாத சித்திரைத் திருவிழாவை மதுரைக்காரர்களால் நினைத்துப் பார்க்கவே முடியாது.

நாயகர்களுக்கான மாஸ் பாடல்கள் மட்டுமின்றி, மனதை வருடும் மெல்லிசைப் பாடல்களிலும் தேவாவுக்கு நிகர் தேவாதான். ஆசை, காதல் கோட்டை, கண்ணெதிரே தோன்றினாள், காலமெல்லாம் காதல் வாழ்க, ஆஹா என நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் மெல்லிசையை தேவா தந்துள்ளார். தலைவர் கலைஞர், தேவா இசையின் இனிமையை மெச்சி 'தேனிசைத் தென்றல்' என்ற பட்டத்தை அவருக்கு வழங்கினார்.

எண்பதுகளில் தனது திரையிசைப் பயணத்தைத் தொடங்கிய அவர் இன்றைய இளைஞர்களான அனிருத் உள்ளிட்டோரின் இசையிலும் எந்தத் தலைக்கனமும் இல்லாமல் நட்புணர்வோடு பாடியுள்ளார். அண்மைக்காலமாக, அவரது இசைக் கச்சேரிகளும் எல்லா ஊர்களிலும் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தன.

தமிழ் வெகுசன இசை வரலாற்றை தேவா அவர்களை விடுத்துவிட்டு எவராலும் எழுத முடியாது. பல அத்தியாயங்களை அவருக்கென ஒதுக்கியாக வேண்டும்.

ஒருபுறம் இசைஞானி இளையராஜா, மறுபுறம் இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் கோலோச்சிய காலத்திலும் தேவா தனக்கெனத் தனிப்பாதை அமைத்து வெற்றி கண்டார். இசையில் வல்லவர் என்பதைத் தாண்டி, மிகவும் நல்லவர் என்ற பெயரையும் பழகிய அனைவரிடமும் பெற்றவர்தான் தேவா.

தேவா அவர்கள் மண்ணை விட்டு மறைந்தாலும் அவரது தேனிசைத் தென்றல் வீசுவது நிற்காது. தேவா அவர்களை இழந்து வாடும் அவரது மகன் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, சகோதரர் முரளி உள்ளிட்ட குடும்பத்தினருக்கும், திரையுலக நண்பர்களுக்கும், தேவா ரசிக நெஞ்சங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாணிக்கம் தாகூர்(காங்கிரஸ்)

'தேனிசைத் தென்றல்' என்று தமிழக மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட புகழ்பெற்ற இசையமைப்பாளர் அண்ணன் தேவா மறைந்த செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது.

தொண்ணூறுகளின் தலைமுறையைத் தனது துள்ளலான கானா பாடல்களாலும், நெஞ்சை உருக்கும் மெல்லிசையாலும் கட்டிப்போட்ட மாபெரும் இசைக் கலைஞர். சாமானிய மனிதர்களின் உணர்வுகளைத் திரையிசையாக மாற்றிய பெருமை அவருக்கு உண்டு.

அவரது மறைவு தமிழ்த் திரையுலகிற்கும், இசையுலகிற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புமணி (பாமக)

புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளரும், தேனிசைத் தென்றல் என்று போற்றப்பட்டவருமான தேவா உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

தமிழ்த் திரையுலகுக்கு இசையமைப்பாளர் தேவாவின் பங்களிப்பு மிகப்பெரியதாகும். எளிய பின்னணியிலிருந்து வந்த தேவா, தமிழ்த் திரையுலகை இசைஞானி இளையராஜா அவர்களும், இசைப்புயல் ஏ.ஆர். இரகுமான் அவர்களும் ஆட்சி செய்து கொண்டிருந்த நிலையில், தனக்கென்று ஓர் இடத்தைப் பிடித்து இசை சாம்ராஜ்யம் நடத்தியவர்.

தமிழ்த்திரையுலகின் முன்னணி நடிகர்கள் அனைவரின் படங்களுக்கும் இசையமைத்த சிறப்பு தேவாவுக்கு உண்டு. இரஜினிகாந்த், கமலஹாசன், இன்றைய முதலமைச்சர் விஜய், அஜித் உள்ளிட்டோரின் இரசிகர்களால் கொண்டாடப்படும் அவர்களின் பெரும்பாலான பாடல்களுக்கு இசை அமைத்தவர் தேவா. எளிய மக்களின் இசையான கானா இசையை திரையில் அறிமுகம் செய்தவரும் தேவா அவர்கள் தான்.

சில நாள்களுக்கு முன்பு வரை திரைப்படங்கள், தொலைக்காட்சி சார்ந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர், திடீரென நம்மை விட்டு பிரிந்ததைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. கடந்த ஆண்டு கிட்டத்தட்ட இதே காலத்தில் அவரது சகோதரர் சபேஷ் மறைந்தது அவரை மனதளவில் கடுமையாக பாதித்திருந்தது. மிகவும் நல்ல மனிதரான தேவா அவர்களின் மறைவு இசையுலகிற்கு பெரும் இழப்பு ஆகும்.

திருமாவளவன்(விசிக)

இசையமைப்பாளர் தேனிசை தென்றல் தேவாவின் மறைவு மிகுந்த துயரத்தையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது. திரையுலகில் தனக்கெனத் தனி முத்திரையைப் பதித்தவர் அவர். 75 வயதிலும் புகழுடன் திகழ்ந்தவர். தமிழ் மக்களின் பேராதரவையும் அன்பையும் பெற்றவர். அவர் இன்று நம்மிடையே இல்லை என்பதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. தனிப்பட்ட முறையில் என் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தார். அவரது இழப்பு திரையுலகிற்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்திற்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும். 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு பல்வேறு மொழிகளில் இசையமைத்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கான புகழ்பெற்ற அறிமுகப் பாடலையும் உருவாக்கியவர் தேவா. இன்றளவும் அந்தப் பாடல் ரஜினிகாந்த்தின் அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. அண்ணாமலை, பாட்ஷா உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்து, ரஜினிகாந்த்தின் திரைப்பயணத்தில் முக்கிய பங்காற்றியுள்ளார். தேவாவை இழந்து வாடும் அவரது மகனும் இசையமைப்பாளருமான ஸ்ரீகாந்த் தேவா உள்ளிட்ட குடும்பத்தினருக்கும், திரையுலகைச் சேர்ந்தவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என திருமாவளவன் கூறியுள்ளார்.

மு.வீரபாண்டியன்(இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி)

“தேனிசை தென்றல்’ என்று ரசிகர்களால் அழைக்கப்படும், பிரபல தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர் தேவா(75) உடல்நலக்குறைவு காரணமாக இன்று (அக்.17) இயற்கை எய்தினார் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

தமிழ் திரைத்துறையில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழ்ந்தவர் தேவா. “மனசுக்கேத்த மகராசா” என்ற திரைப் படத்தின் மூலம் 1989ம் ஆண்டு இசையமைப்பாளராக அறிமுகமானார் தேவா. 1990 ஆம் ஆண்டு வெளிவந்த “வைகாசி பொறந்தாச்சி” படம் மூலம், தமிழ்நாடு முழுவதும் நன்கு அறிமுகமானார். அண்ணாமலை, பாட்ஷா உட்பட 450 படங்களுக்கும் மேல் இசையமைத்துள்ளார். தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிப் படங்களுக்கும் பின்னணி இசை அமைத்துள்ளார்.

நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்த் திரைப்படங்களில் இசை அமைப்பாளராக செயல்பட்ட அவர், கானா பாடல்கள் மற்றும் அற்புதமான மெல்லிசைகளை வழங்கி வந்துள்ளார். பல கானா பாடல்களை எழுதி அவரே இசையமைத்து பாடியும் உள்ளார்.

ரஜினி, கமல், விஜய், அஜித் உள்ளிட்டோருக்கு பல வெற்றிப் பாடல்களை அளித்துள்ளார்.

1990-இல் சிறந்த இசையமைப்பாளருக்கான தமிழக அரசின் விருது, 1992-இல் தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதைப் பெற்றுள்ளார். 1995-ல் ‘ஆசை’ திரைப்படம் தேவாவுக்கு மற்றொரு மாநில விருதை பெற்றுத்தந்தது.

தேவா அவர்களின் மறைவு தமிழ்த் திரையுலகிற்கு மட்டுமின்றி, தென்னிந்திய திரைத்துறைக்கே மிகப் பெரும் இழப்பாகும்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அவருக்கு ஆழ்ந்த அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறது. அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், ரசிகர்களுக்கு இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.

சு. திருநாவுக்கரசர்(காங்கிரஸ்)

தேனிசைத் தென்றல் என்று அன்போடு அழைக்கப்படும் இசை அமைப்பாளர் திரு.தேவா அவர்கள் மாரடைப்பால் அகால மரணமடைந்தார் எனும் செய்தி அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைகிறேன்.

தனது இன்னிசையால் உலகெங்கும் வாழும் தமிழிசை ரசிகர்களை கவர்ந்து மகிழ்வித்து வந்தவர். ரஜினிகாந்த், கமல்ஹாசன், தமிழக முதல்வர் விஜய், அஜித் போன்ற முன்னணி கதாநாயகர்களின் படங்கள் உள்பட ஏராளமான திரைப்படங்களுக்கு வெற்றிகரமாக இசை அமைத்தவர். தன் கானா பாடல்கள் மூலமாக தனக்கென ஒரு புதிய வழி கண்டு திரையுலகில் பல புதுமைகளைப் புகுத்தியவர். உலகெங்கும் வாழும் இசைப் பிரியர்களை மகிழ்வித்த திரு தேவா அவர்களின் மறைவு இசை உலகிற்கும், திரை உலகிற்கும் பேரிழப்பாகும்.

அன்னாரின் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை துயருடன் தெரிவித்துக் கொள்கிறேன். . அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

Passing of 'Thenisai Thendral' Deva: CM, political leaders express condolences

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments