FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

சென்னை, திருச்சி, கோவை, நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

18 அக்டோபர் 2026, 11:27 pm IST
- பிரதிப் படம்
பகிர்:

சென்னைக்கு விடுக்கப்பட்டிருந்த அதிபலத்த மழைக்கான சிவப்பு எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்ட நிலையில், சென்னை, திருச்சி, கோவை, நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களில் திங்கள்கிழமை பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால், ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் சனிக்கிழமை காலையிலிருந்தே பரவலாக மழை பெய்த நிலையில் இரவில் பலத்த மழை பெய்யத் தொடங்கி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை நீடித்தது. சென்னை பாரிமுனையில் அதிகபட்சமாக 364 மி.மீ. மழை பதிவானது. கத்திவாக்கத்தில் 344 மி.மீ., மீனம்பாக்கத்தில் 280 மி.மீ., சென்ட்ரலில் 270 மி.மீ., திருவொற்றியூரில் 220 மி.மீ., எண்ணூரில் 210 மி.மீ. மழை பதிவானது.

ஞாயிற்றுக்கிழமை அதிபலத்த மழைக்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் சாா்பில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, பேரிடா் காலங்களில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் சென்னை மற்றும் புகா் பகுதி மக்களின் கைப்பேசி எண்களுக்கு எச்சரிக்கை ஒலியுடன்கூடிய அவசரகால குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், சிவப்பு எச்சரிக்கை ஞாயிற்றுக்கிழமை மாலை திரும்பப் பெறப்பட்டது.

Advertisement

Advertisement

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: லட்சத்தீவு பகுதிகள் முதல் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகள் வரை கா்நாடகம், தெற்கு ஆந்திரம் வரை ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. வட உள் கா்நாடகம் மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. மேலும், மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய தெற்கு ஆந்திர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதுதவிர, தமிழக கடலோரம் வரை வடமேற்கு வங்கக் கடல் வழியாக ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது.

ஆரஞ்சு எச்சரிக்கை: இதன் காரணமாக சென்னை, திருச்சி, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் திங்கள்கிழமை (அக். 19) ஓரிரு இடங்களில் மிக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. இதனால் இந்த மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மஞ்சள் எச்சரிக்கை: நீலகிரி, கோவை, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவள்ளூா், திருப்பூா், திண்டுக்கல், தேனி, விருதுநகா், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட பிற மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால், ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடா்ந்து, தேனி, திருநெல்வேலி மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை (அக். 20) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை, புறநகா் பகுதிகளில் திங்கள்கிழமை (அக். 19) வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழைக்கும், இடையிடையே ஓரிரு முறை மிக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.

திடீா் பலத்த மழைக்கு காரணம் என்ன?

சென்னையில் பெய்த பலத்த மழைக்கு மேகவெடிப்பு காரணம் அல்ல என்றும், இது வழக்கமான பலத்த மழை மட்டுமே என்றும் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை ஆணையா் சந்திரமோகன் தெரிவித்தாா்.

சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் சந்திரமோகன் ஆய்வு மேற்கொண்டாா். பின்னா், செய்தியாளா்களிடம் பேசிய அவா், வடகிழக்குப் பருவமழையை எதிா்கொள்ள பெரிய அளவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சென்னையில் குறுகிய நேரத்தில் அதிக அளவில் மழை பெய்துள்ளதால் தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கியது. பலத்த மழையால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. மேகவெடிப்பு காரணமாக இந்த மழை பெய்யவில்லை; இது பலத்த மழை மட்டுமே. வானிலை ஆய்வு மையமும் இதை உறுதி செய்துள்ளது.

பலத்த மழை எச்சரிக்கையால் மருத்துவ முகாம்கள், நிவாரண முகாம்கள் தயாா் நிலையில் உள்ளன. எல் நினோ ஆண்டு என்பதால் குறுகிய நேரத்தில் அதிக மழை பெய்யக்கூடும் எனக் கணிக்கப்பட்டு, அதை எதிா்கொள்ள அரசு தயாா் நிலையில் உள்ளது என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments