பாடகச்சேரி பைரவ சித்தர் ராமலிங்க சுவாமிகள் தவபீடத்தில் பௌர்ணமி வழிபாடு!
பாடகச்சேரி பைரவ சித்தர் ராமலிங்க சுவாமிகள் தவபீடத்தில் நடைபெற்ற பௌர்ணமி வழிபாடு பற்றி...
வலங்கைமான் அருகேயுள்ள பாடகச்சேரி பைரவ சித்தர் ராமலிங்க சுவாமிகள் தவபீடத்தில் பௌர்ணமி வழிபாடு மற்றும் அன்னாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கோயம்புத்தூரில் பிறந்து, வலங்கைமான் அருகேயுள்ள பாடகச்சேரி கிராமத்தில் தனது 12-வது வயதிலிருந்து வாழ்ந்தவர் 'பைரவ சித்தர்' என அழைக்கப்படும் ராமலிங்க சுவாமிகள்.
வள்ளலாரின் அருள் பெற்றவர். மக்களின் பசிப்பிணி, உடற்பிணி தீர்க்கும் பணிகளையும், கோயில்களைச் சீரமைக்கும் பணிகளையும் செய்தவர். இவர் சீரமைத்த கோயில்களில் கும்பகோணம் நாகேஸ்வரன் கோயில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இவர் திருவொற்றியூரில் சமாதியடைந்தார்.
Advertisement
Advertisement
உடலை ஒன்பது பாகங்களாக அரிந்து வைப்பது போலச் செய்து, சிவபெருமானை நினைத்து யோகம் செய்யும் முறைக்கு 'நவகண்ட யோகம்' என்று பெயர். சித்தர்கள் செய்யும் சித்துகளில் மிகவும் அபாயகரமான இந்தச் சித்தில் பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள் வல்லமை பெற்றிருந்தார்.
சிறுவயதில் இவர் செய்த நவகண்ட யோகமே இவரைச் சித்தர் என உறவினர்கள் அறிந்துகொள்ளக் காரணமாக இருந்தது. மேலும், இவரைக் கொல்ல வந்த அடியாட்கள் சிலர், இவர் நவகண்ட யோகத்தில் இருந்ததைக் கண்டு திகைத்து ஓடியுள்ளனர்.
பாடகச்சேரியில் தங்கி வாழ்ந்த காலத்தில் பௌர்ணமி பூஜைகளைச் செய்து, பைரவர்களுக்கு வாழை இலையில் உணவு பரிமாறி, அவை உணவருந்திய பின்னரே மனிதர்களை உணவருந்தச் செய்தவர்.
சிறப்பு வாய்ந்த பைரவ சித்தர் ராமலிங்க சுவாமிகள் தவம் செய்த இடத்தில் தவபீடம் அமைத்து, பௌர்ணமி மற்றும் பூர நட்சத்திரம் உள்ளிட்ட விசேஷ நாள்களில் திரளான பக்தர்கள் இவரை வழிபட்டுச் செல்கின்றனர்.
இத்தகைய சிறப்புமிக்க தவபீடத்தில் பௌர்ணமி வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி விநாயகர், முருகன், பைரவ சித்தர் ராமலிங்க சுவாமிகள் சன்னதிகளில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன.
தொடர்ந்து, அன்னத்தால் சிவலிங்கம் அமைத்து அன்னாபிஷேக பூஜைகள் செய்யப் பெற்று மகா தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்தச் சிறப்பு பூஜைகளில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
Full moon worship and Annabhishekam were held on Sunday at Badagasheri Bhairava Siddhar Ramalinga Swamigal Thavapeetam near Valangaiman.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.