மக்களின் வயிற்றுப்பசியைவிட விமான நிறுவனங்களின் வரிச்சுமை பெரிதாகிவிட்டதா தவெக அரசுக்கு? சீமான் கேள்வி
விமான எரிபொருளுக்கு வரிச்சலுகை அளித்த விவகாரத்தில் தவெக அரசுக்கு சீமான் கேள்வி எழுப்பியிருப்பது பற்றி..
அரிசி வாங்கவே மக்கள் அல்லல்படும்போது தவெக அரசு விமான எரிபொருளுக்கு வரிச்சலுகை அளிப்பது ஏன்? என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் அன்றாட வாழ்க்கையை நடத்தவே போராடிக்கொண்டிருக்கும் நிலையில், விமான எரிபொருள் மீதான வரியைக் குறைப்பதற்கு தமிழ்நாடு அரசு முன்னுரிமை அளித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
தவெக அரசு ஆட்சிக்கு வந்த 5 மாதங்களில், மிக மோசமான நிர்வாகத்தால் அத்தியாவசியப் பொருட்களின் விலை பன்மடங்கு உயர்ந்து தமிழ்நாட்டு மக்கள் கடுமையான நிதிச்சுமைக்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக அரிசி விலை மட்டும் மூட்டைக்கு 500 ரூபாய் அளவிற்கு உயர்ந்துள்ளது. பருப்பு முதல் எண்ணெய் பொருட்கள் வரை அனைத்தின விலையும் கடுமையாக உயர்ந்து மக்கள் அல்லல்பட்டு வருகின்றனர். அதையெல்லாம் சரி செய்ய திறனற்ற தவெக அரசு, சென்னை விமான நிலையத்தில் விமான எரிபொருள் மீதான வரியை 29 விழுக்காட்டிலிருந்து 16 விழுக்காடாகவும், பிற விமான நிலையங்களில் குறிப்பிட்ட விமான சேவைகளுக்கான வரியை 29 விழுக்காட்டிலிருந்து ஒரு விழுக்காடாகவும் குறைத்திருக்கிறது. விமான நிறுவனங்களின் செலவைக் குறைக்க இவ்வளவு வேகம் காட்டும் முதல்வர் விஜய், மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களின் விலையை குறைக்கு என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்? அமுதம் மற்றும் கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்யப்படுவதாக தவெக அறிவித்தது. ஆனால், குறைந்த விலை என்றுகூறி சிறிதும் தரமற்ற அரிசியை தருவதாக மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். உழைக்கும் மக்கள் வாங்கும் விலையில் தரமான அரிசி கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டிய அரசு, அவர்களின் உணவுத் தேவையை நிறைவுசெய்வதில் அலட்சியமாய் இருப்பது ஏன்? முதல்வரின் கோட் சூட் உடை மாற்றத்தை தவிர தவெக அரசால் தமிழ்நாட்டில் நிகழ்ந்துள்ள மாற்றம்தான் என்ன? அரிசி வாங்குவதற்கே மக்கள் அல்லல்படும் அவலநிலைக்கு ஆளானதா? அல்லது தவெக நிர்வாகிகளே பாலியல் வன்கொடுமை செய்வதும், போதைப்பொருள் விற்பதும்தான் மாற்றமா?
Advertisement
Advertisement
அரிசி, பருப்பு, எண்ணெய் வாங்க முடியாமல் மக்கள் தவிக்கும்போது, விமான பயணச் செலவைக் குறைப்பதுதான் அரசின் முதன்மையான பணியா? அப்படியென்றால் இந்த அரசு யாருக்கானது? இந்த ஆட்சி யாருக்கானது? அன்றாடம் உழைத்து வாழும் கோடிக்கணக்கான மக்களுக்கானதா? பல்லாயிரம் கோடி முதலீட்டில் விமான நிறுவனங்களை நடத்தும் தனியார் முதலாளிகளுக்கானதா?
விமான போக்குவரத்தை மேம்படுத்துவதாகக் கூறும் அரசு, மக்களின் அடிப்படை உணவுத் தேவையை நிறைவுசெய்வதற்கும் அதே அக்கறையைக் காட்ட வேண்டாமா? பொருளாதார வளர்ச்சி என்பது தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு எத்தனை விமானங்கள் பறக்கிறது என்பதில் இல்லை; தமிழ்நாட்டில் எத்தனை குடும்பங்கள் கடன் வாங்காமல் ஒரு நாளைக்கு மூன்று வேளையும் நல்ல உணவருந்த முடிகிறது? என்பதில்தான் உள்ளது. மக்களின் வயிற்றுப்பசியைவிட விமான நிறுவனங்களின் வரிச்சுமை பெரிதாகிவிட்டதா தவெக அரசுக்கு? மக்களுக்கு வழங்கப்படும் உணவு மானியத்தைச் செலவாகவும், நிறுவனங்களுக்கு வழங்கப்படும் வரிச்சலுகையை வளர்ச்சிக்கான முதலீடாகவும் அரசு பார்ப்பது வெட்கக்கேடானது. மக்களின் பசியைப் போக்குவதும், அவர்களின் வாங்கும் திறனைப் பாதுகாப்பதும்தான் அரசின் முதற்கடமை.
ஆகவே, தமிழ்நாடு அரசு ஏழை எளிய மக்களை காக்க, அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
வானில் பறப்பவர்களின் பயணச் செலவைக் குறைப்பதில் காட்டும் அக்கறையை, மண்ணில் உழைப்பவர்களின் உணவுச் செலவைக் குறைப்பதிலும் காட்டுங்கள்! எனத் தெரிவித்துள்ளார்.
Naam Tamilar Katchi coordinator Seeman raised the question 'Why is the TVK government providing tax concessions on aviation fuel when people are struggling even to buy rice?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.