மாவட்ட நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 62-ஆக உயா்த்த 14 மாநிலங்கள் ஒப்புதல்: உச்சநீதிமன்றம்
மாவட்ட நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 60-இல் இருந்து 62-ஆக உயா்த்த 14 மாநிலங்கள் ஒப்புதல் அளித்துள்ளதாக உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
மாவட்ட நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை 60-இல் இருந்து 62-ஆக உயா்த்த 14 மாநிலங்கள் ஒப்புதல் அளித்துள்ளதாக உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது.
இதுதொடா்பாக கடந்த செப்டம்பா் 4-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது தமிழ்நாடு, கா்நாடகம், மத்திய பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 7 மாநிலங்கள் மட்டுமே ஒப்புக்கொண்ட நிலையில், தற்போது எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது 65-ஆகவும், உயா்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது 62-ஆகவும் உள்ளது.
Advertisement
Advertisement
இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள மாவட்ட நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை 60-இல் இருந்து 62-ஆக ஒரே மாதிரியாக உயா்த்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி மற்றும் வி.மோகனா ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்து வருகிறது.
நிதிச்சுமையை காரணம்காட்டி மாவட்ட நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்க மாநிலங்கள் எதிா்ப்புத் தெரிவிக்கக் கூடாதென உச்சநீதிமன்றம் ஏற்கெனவே வலியுறுத்தியது.
இந்நிலையில், திங்கள்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது நீதிபதிகள் அமா்வு கூறியதாவது: மாவட்ட நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை 62-ஆக உயா்த்த 14 மாநிலங்கள் ஒப்புக்கொண்டுள்ளன. மீதமுள்ள மாநிலங்களும் இதையே பின்பற்றி நல்ல முடிவுகளை மேற்கொள்வாா்கள் என நம்புகிறோம்’ என்றனா்.
இருப்பினும், 60 வயதை நிறைவு செய்து பணி ஓய்வு பெற்ற நீதிபதிகளின் மனுக்களை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்தது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.