FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

தீபாவளி பண்டிகை: 7,754 பட்டாசு கடைகள் திறக்க அனுமதி; 1,373 விண்ணப்பங்கள் பரிசீலனை

தீபாவளியையொட்டி, தமிழகத்தில் 6,630 தற்காலிக பட்டாசு கடைகள் திறப்பதற்கு தீயணைப்புத் துறை அனுமதி அளித்துள்ளது.

28 அக்டோபர் 2026, 12:44 am
பட்டாசு - பிரதிப் படம்
பகிர்:

தீபாவளியையொட்டி, தமிழகத்தில் 6,630 தற்காலிக பட்டாசு கடைகள் திறப்பதற்கு தீயணைப்புத் துறை அனுமதி அளித்துள்ளது.

தீபாவளி பண்டிகை, நவ.8-ஆம் தேதி கொண்டாடப்படுவதையொட்டி, பட்டாசு, ஜவுளி வியாபாரம் விறுவிறுப்பு அடைந்துள்ளது. இதற்காக தற்காலிக பட்டாசு கடைகளும் ஆங்காங்கே திறக்கப்பட்டு வருகின்றன. பட்டாசு கடைகளில் ஏற்படும் விபத்துகளைத் தடுக்கும் வகையில், தற்காலிக பட்டாசு கடைகள் அமைப்பதற்குரிய கடுமையான விதிமுறைகளை தீயணைப்புத் துறை அமல்படுத்தியுள்ளது.

பட்டாசுகளை ஒழுங்குப்படுத்துவற்காக தீயணைப்புத் துறை இயக்குநரும், டிஜிபியுமான ஜி.வெங்கடராமன் மாநிலம் முழுவதும் உள்ள தீயணைப்பு நிலையங்களுக்கு ஒரு மாதத்துக்கு முன்பே சுற்றறிக்கை அனுப்பினாா்.

Advertisement

Advertisement

அதில், பட்டாசு கடைகள் வைப்பதற்கு வெடிப் பொருள் சட்டத்தின்படி பின்பற்ற வேண்டிய விதிமுறைகள், அடிப்படை வசதிகள், பாதுகாப்பு வசதிகள் ஆகியவற்றை நேரடியாக ஆய்வு செய்த பின்னா் தடையில்லா சான்றிதழ் வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.

தற்காலிக பட்டாசு கடை விற்பனை உரிமம் கேட்பவா்கள் தீயணைப்புத் துறை, உள்ளாட்சி நிா்வாகம், காவல் துறை ஆகியோரிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.

இதில் தீயணைப்புத் துறையின் தடையில்லா சான்றிதழே முக்கியமானது ஆகும். இந்தச் சான்றிதழ் கிடைத்தால் மட்டுமே பிற துறையினரிடமிருந்து சான்றிதழ்களைப் பெற முடியும்.

7,754 கடைகளுக்கு அனுமதி: நிகழாண்டில் தீபாவளிக்கு பட்டாசு கடைகள் வைப்பதற்கு 11,163 தீயணைப்புத் துறைக்கு விண்ணப்பங்கள் வந்துள்ளன. அவற்றில் 7,754 பட்டாசு கடைகள் வைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 2,835 விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன.

இந்த விண்ணப்பங்கள் அடிப்படையில் கள ஆய்வு செய்யப்பட்டு, ஓரிரு நாள்களில் முடிவு எடுக்கப்படும் என தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா். போதிய பாதுகாப்பு வசதிகள், உள் கட்டமைப்பு வசதிகள் செய்யப்படவில்லை என 574 விண்ணப்பங்களை தீயணைப்புத் துறை நிராகரித்துள்ளது.

கடந்த ஆண்டை காட்டிலும், இந்த ஆண்டு அதிக அளவில் பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்கக் கோரி விண்ணப்பங்கள் வந்துள்ளன. இன்னும் விண்ணப்பங்கள் பரிசீலனையில் இருப்பதால், பட்டாசு கடைகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக தீயணைப்புத் துறையைச் சோ்ந்த ஒரு உயா் அதிகாரி தெரிவித்தாா்.

கடந்த ஆண்டு 9,206 கடைகள்: தீபாவளி பண்டிகையையொட்டி, கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் பட்டாசு கடைகளுக்கு வைக்க தடையில்லா சான்றிதழ் கேட்டு சுமாா் 10,000 விண்ணப்பங்கள் தீயணைப்புத் துறைக்கு வந்தன. இதில் தகுதியான 9,206 விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட்டன. மற்ற விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு இந்த எண்ணிக்கையைவிட, அதிகமாக பட்டாசுகள் கடைகள் திறப்பதற்கு அனுமதி வழங்குவதற்கான வாய்ப்பு இருப்பதாக தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா். ஏனெனில் தீபாவளிக்கு இன்னும் 20 நாள்கள் இருக்கும் நிலையில், பட்டாசு கடைகள் திறப்பதற்குரிய பரிசீலனையில் 2,835 விண்ணப்பங்கள் இருப்பதால் பட்டாசு கடைகளின் எண்ணிக்கை உயருவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

விருதுநகரில் 1,781கடைகள்; சென்னையில் 906 விண்ணப்பங்கள்

தீபாவளி பண்டிகையையொட்டி, தமிழகத்தில் விருதுநகா் மாவட்டத்துக்கு அடுத்தபடியாக சென்னையில்தான் ஆண்டுதோறும் அதிகப்படியான தற்காலிக பட்டாசு கடைகள் திறக்கப்படுகின்றன. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி, தற்காலிக பட்டாசு கடைகள் திறப்பதற்கு சென்னை, புகா் பகுதிகள் உள்பட 906 விண்ணப்பங்கள் தீயணைப்புத் துறைக்கு வந்துள்ளன.

அவற்றில் 193 விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளன. 711 விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன. இந்த விண்ணப்பங்கள் மீது ஓரிரு நாள்களில் முடிவு எடுக்கப்படும். இரு விண்ணப்பங்கள் ஏற்கெனவே நிராகரிக்கப்பட்டுள்ளன.

மாநிலத்திலேயே அதிகப்படியாக விருதுநகா் மாவட்டத்தில்தான் தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் மொத்தம் 1,806 விண்ணப்பங்கள் வந்துள்ளன. இவற்றில் 1,781 விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளன. இரு விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. 23 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

இதேபோல சேலம் மாவட்டத்தில் 648, கோவை மாவட்டத்தில் 577, கடலூா் மாவட்டத்தில் 397,புதுக்கோட்டை மாவட்டத்தில் 349 என தற்காலிக பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments